கடை விரித்திருக்கிறேன். கொள்வாருளர்.

வள்ளலே!
பள்ளத்தில் விழுந்து
உள்ளேனென்ற உணர்வும்
ஒரு சிறிதுமின்றி
சவமாகக் கிடந்த
என்னை எழுப்பி
சொற்கடந்த மந்திரத்தை
நற்றமிழ்ச் சொல்லாக்கி
நல்லதேதும் கல்லாத
பொல்லேனுக்குத் தந்து
எவ்வழியும் நில்லேனை
மெய்வழியில் நில்லென நிறுத்தி
சாவை வெல்லும் சாகசக் கலையை
நீ உலகுக்கு போதிப்பாய்
என்றே பணித்தீர்.

“ஐயனே!
என் பொருள் என்று
நீவிர் தந்த குரு மந்திரம்
பத்தும் ஒரு மூன்றும்
தன் பொருள் என்றே
நனி உவந்து
என் வீடாம் இவ்வுலகின்கண் வாழும்
என் குடும்ப உயிர்த்திரள்
ஏற்கும் நாள் எந்நாளோ?”
என்றே ஏங்கி நின்ற
என்னைத் தழுவி உறுதி சொன்னீர்.
“என் அன்பு மகனே!
பாரபட்சமின்றி
நான் உனக்கு அளந்ததை
பாரபட்சமின்றி
நீ உலகுக்கு அளக்கிறாய்.
என் கடை விரித்துக் காத்திரு
வழி மேல் விழி வைத்து.
குரு மந்திர தாரணையாம்
மகாயோகத்தில் எப்போதும்
நீ அமர்ந்திரு.
கொள்ள வரும் உயிர்த்திரள்
அள்ளிச் செல்லும் என் பண்டம்.
நன்றியென்னும் நாணயத்தால்
உன்னகம் நிரம்பியே வழியும்.”

நானும்
“கடை விரித்திருக்கிறேன். கொள்வாருளர்.”
என்றே உமதுறுதிக்கு உறுதி சொல்லிக்
கடை விரித்துக் காத்திருக்கிறேன்.

“ஐயனே!
கடை விரித்தேன். கொள்வாரில்லை.
என்ற உம் பழைய வாக்கைப் பொய்யாக்கும்
இப்புதிய வாக்கை
ஏற்பாரோ, கொள்வாரோ?”
என்றே நான் தயங்கிய தருணத்தே
என்னை அணைத்து உறுதி சொன்னீர்.
“என் அன்பு மகனே!
என் வீடாம் இவ்வுலகின்கண் வாழும்
என் குடும்ப உயிர்த்திரள் மீது
நான் கொண்டிருக்கும் அன்பின் மிகுதியையே
நீயும் கொண்டிருப்பதை நன்கறிவேன்.
எனவே நீ துணிந்து சொன்ன
என் பழைய வாக்கைப் பொய்யாக்கும்
உன் புது வாக்கே
இனி என் புதிய ஏற்பாடு, அறிக
“நானே நீ, நீயே நான்” என்ற
ஒருமைப் பெரு நிலையில் ஓங்கி நின்று
என் புதிய ஏற்பாட்டை
உறுதியுடன் செயல்படுத்துவாயாக.”

உமது அருட்கொடையால் நீவிர் என்னை வாழ்வித்தே
உமது அருட்பணியை என் வாயிலாகச் செய்கிறீர்.
நானும்
“கடை விரித்திருக்கிறேன். கொள்வாருளர்.”
என்ற உம் புதிய ஏற்பாட்டை
உறுதியுடன் செயல்படுத்த
நற்றமிழ் வீதியில்
கடை விரித்துக் காத்திருக்கிறேன்
வழி மேல் விழி வைத்து,
குரு மந்திர தாரணையாம்
மகாயோகத்தில் எப்போதும் அமர்ந்தே.

Leave a Comment