Archive for the ‘சூஃபி’ Category

மாயா நிலையம் – 13

பிப்ரவரி 12, 2011
மாயா மண்டலம்

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு” – திருவள்ளுவர்
எண் = உம் பிறந்த நாளின் எண் குறியீடு
எழுத்து = உம் பிறந்த நாளின் படிமச் சொல்

படம்

சூஃபிப் பாடல்(Sufi Song) – 12

ஜனவரி 23, 2011

அல்லாஹ் மேலே இல்லை
அல்லாஹ் கீழே இல்லை
அல்லாஹ் வலத்தே இல்லை
அல்லாஹ் இடத்தே இல்லை
அல்லாஹ் முன்னே இல்லை
அல்லாஹ் பின்னே இல்லை
அல்லாஹ் இங்கே இல்லை
அல்லாஹ் அங்கே இல்லை
அல்லாஹ் மேலுங் கீழும்
வலமும் இடமும் முன்னும்
பின்னும் இங்கும் அங்கும்
எங்கும் இல்லா மையம்

அம்மையம் நெஞ்சுள் கண்டால்
அல்லாஹ் மேலே உண்டு
அல்லாஹ் கீழே உண்டு
அல்லாஹ் வலத்தே உண்டு
அல்லாஹ் இடத்தே உண்டு
அல்லாஹ் முன்னே உண்டு
அல்லாஹ் பின்னே உண்டு
அல்லாஹ் இங்கே உண்டு
அல்லாஹ் அங்கே உண்டு
அல்லாஹ் மேலுங் கீழும்
வலமும் இடமும் முன்னும்
பின்னும் இங்கும் அங்கும்
எங்கும் உள்ள மையம்

இல்லை உண்டு தாண்டி
நெஞ்சுள் அல்லாஹ் மையம்

தோன்றா அல்லாஹ் மையம்
தோன்றும் யாவின் மூலம்

அம்மையங் காணா மூடம்
மாயைப் பேயின் மூலம்

மார்பின் உள்ளே ஏகு
ஆழ நெஞ்சுள் ஊன்று
ஆதி இருதயந் தோன்றும்
ஜோதி குருநபி முகமது
போதி அருண்மய நிலவது
காட்டுந் தன்கரு அகமது
நேசன் அல்லாஹ் கதிரது
ஏகன் மையம் புதிரது
நாதன் தானே அவிழ்ப்பது

உயிர்மை அல்லாஹ் மறதி
உயிர்மெய் கொல்லும் விடமாம்
உயிர்மை அல்லாஹ் நினைப்பு
உயிர்மெய் கொள்ளும் அமுதாம்

அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்
என்றே அல்லும் பகலும்
நன்றே உள்ளம் உருக
நெஞ்சங் கனிய நினைப்பாய்
நல்லான் முகம்ம தருளால்
அல்லாஹ் மையங் காண்பாய்

சூஃபிப் பாடல்(Sufi Song) – 11

ஜனவரி 22, 2011

தாயு மானவன் தந்தையு மானவன்
ஏகன் அவனே பிள்ளையு மானவன்
தந்தை என்பது அன்பின் இருப்பு
அன்னை என்பது அன்பின் இருப்பில்
ஊன்றிப் பாயும் அருளின் பெருக்கு
பிள்ளை என்பது அன்பின் இருப்பை
அருளின் பெருக்கைத் தன்னை ஒன்றெனக்
கருதும் யாமெனும் அபயச் சிறப்பு
அன்பின் இருப்பே தனிப்பெருங் கருணை
அருளின் பெருக்கே அருட்பெருஞ் ஜோதி
அபயச் சிறப்பே தயாவுரு வள்ளல்
அன்பின் இருப்பே ஏகன் நாமம்
அருளின் பெருக்கே ஆதி ரூபம்
அபயச் சிறப்பே போதி ஞானம்
ஏகன் ஆதி சமேத போதி
யாமென ஓங்கு அபய மாகி
பூமியில் நீஇரு தயவே யாகி
கிருஷ்ணன் புத்தன் கிறிஸ்து முகம்மது
முருகன் அன்னோர் சற்குரு வடிவமே
அவர்போல் ஆக அவர்தம் வழிப்படு(அவர் தாம் வகுத்த மெய் வழியில் நடை போடு, இதுவே
மெய்யான வழிபாடு)
தயவே தவமாய் புவிமேல் விழித்திரு
உருக்கள் அடங்கும் சற்குரு அருவம்
திருவாய் நெஞ்சுள் ஒளிந்தே ஒளிரும்
உருகக் கன்மனம் வெளிப்படும் இருதயம்
உருமெய்க் குள்ளது அன்பின் உயிர்நிலை
உருக்கள் அனந்தமும் விட்டே பற்றிடு
உருமெய்க் குள்ளே நெஞ்சுள் சற்குரு
உண்*மை உண்ணத் தருவார் அவரே
உண்மை சொன்னேன் சற்குரு சரணம்

சூஃபிப் பாடல்(Sufi Song) – 10

ஜனவரி 21, 2011

ஆதி மூலம் ஏகன் தானே
தானாய் ஓங்கும் பூரண மாகும்!
தானே தனக்குத் தார மாகித்
தானே தன்னைப் புணரும்! மகவாய்த்
தானே தன்னைப் பெற்றுக் கொள்ளும்!
தானே தானான நிலையே தந்தை*யாம்*
தானே நானெனும் நிலையே அம்மை*யாம்*
நானே நீயதுவாய் விரிநிலை பிள்ளை*யாம்*
மூவரும் பின்னிப் பிணைந்த ஏகனாம்
நேசமாய் உள்ளோம் யாமே அபயமாய்!
அம்மை யப்பன் சமேத சற்குரு
நெஞ்சுள் வாழும் ஏகன் யாமே!
சற்குரு வடிவாய் தேகமெய் யெடுத்த
உன்றனை அறிவாய்! “யாமெனும் அபயமாய்”
மண்மிசை விடிவாய்! ஏகன்மேல் ஆணை!

சூஃபிப் பாடல்(Sufi Song) – 9

ஜனவரி 20, 2011

வார்த்தையுள் பிடிபடான் அல்லா – கருமனக்
கோட்டையுள் அடைபடான் வல்லான் – குருநபி
மார்க்கமாம்மெய் வழிராஜ பாட்டையை இருதய
தீர்க்கமேகாட் டுமாம்ஏகன் சரணம்
(இருதய தீர்க்கம் = நெஞ்சகக் கண்ணின் அதீத விழிப்பு)

சூஃபிப் பாடல்(Sufi Song) – 8

ஜனவரி 19, 2011

ஏகன் அன்பாம் உண்மை
தூய நெஞ்சின் தன்(ண்)மை
மாயை என்னும் பொய்ம்மை
மாய மின்னும் மெய்ம்மை

அன்பை மறந்துத் துஞ்சும்
உன்னை எழுப்ப நெஞ்சுள்
தட்டும் பரம குருவைப்
பற்ற இரவு விடியும்

பரம குருவைத் தேடிப்
புறத்தே திரிந்துங் காணாய்
அகத்தே திரும்பி நாடு
உகந்தே அருவைக் கூடு

இறக்கும் மனித உருவைச்
சிறக்க மேலே ஏற்றிச்
சிரத்தைக் காலில் தேய்த்தோ
பரம ஏகன் காண்பாய்

பரம ஏகன் உண்மைத்
தரமே நேச நெஞ்சம்
தவமே மார்பைப் பிளக்க
ஏகனைப் பார்க்க லாகும்

அனந்த உருக்கள் பண்ணும்
மனத்தைத் திருப்பி நெஞ்சுள்
மின்னுங் குருவைக் கண்டு
சுத்த அருவைச் சேர்வாய்

சுத்த அருவுள் ஒன்றி
மின்னுஞ் சித்த குருவைப்
பற்ற நெஞ்ச குகையுள்
உய்வாய் இன்பங் காண்பாய்

மார்பின் இடமும் வலமும்
மேலுங் கீழும் நடுவும்
ஏழு தாழ்கள் திறக்க
ஏகன் மெய்ம்மை விளங்கும்

நாவை வாயுள் பூட்டு
பேச வேணாம் வீணே
ஏழு தாழ்கள் திறக்க
ஏகன் தாளைச் சேர்வாய்

மார்பில் கவனம் வைத்து
ஏகன் அன்பை உணர்வாய்
நேசன் உண்*மை பாயும்
ஏழு தாழ்கள் உடையும்

எளிய மார்க்கஞ் சொன்னேன்
கனிய வேண்டும் நெஞ்சம்
பனிக்க வேண்டுங் கண்மை
சரணம் ஏகன் பாதம்

சூஃபிப் பாடல்(Sufi Song) – 7

ஜனவரி 18, 2011

ஏகனைத் தவிர வேறொன்றிலா உண்*மை
நேசகத் தவிழும் அமுதம்
(நேசகம் = நேச அகம் = அன்பு மய இருதயம்)

நேசகத் தவிழும் அமுதம் உண்ண
ஏகனின் உண்மை நிதர்சனம்

ஏகனின் உண்மை நிதர்சனம் ஊன
விழிகள் காணா உத்தமம்

ஊன விழிகள் காணா உத்தமர்
ஏகனை இருதயங் காணும்

ஏகனை இருதயங் காணப் பருவுடல்
தேகமே திருமெய் யாகும்

தேகத்தைத் திருமெய்யாய்! உயிர்த்தெழச் செய்யுஞ்
ஞானத்தை அருள்வான்யார்? ஏகனே.

ஏகனே அம்மை யப்பனாய் இருதயத்
தோங்கிடும் சற்குரு நாதன்

சற்குரு நாதனே நபிகள் கிறிஸ்து
புத்தராம் ஏகனின் தூதன்

ஏகனின் தூதனாய்ப் பூமியில் வாழவே
தேகமெய் யெடுத்துளாய் நீ

ஏகனே பரப்பிரம்மம் பரமபிதா அல்லா(ஹ்)
நாமமாம் அனந்தமுந்தான் கொண்டான்

நாமமோ ரூபமோ இல்லான் ஏகனே
நாமமாய் ரூபமாய் இறைந்தான்

யாவுமே கடந்த கடவுள் ஏகனே
யாவுமாய் இறைந்த இறைமை

நாகமே கக்கும் நஞ்சினைத் தாண்டி
ஏகனை நெஞ்சுளே காண்

சூஃபிப் பாடல்(Sufi Song) – 6

ஜனவரி 17, 2011

ஏகன் தேவ நாமம்
பாப நாசத் தீர்த்தம்
சற்குரு நாதன் ரூபம்
நெஞ்சக வாயுள் போதம்
(‘ஏ’காரம் உறுதியையும், “க” ஒன்றையும், தமிழின் கடைசி எழுத்து “ன்” முடிவையும், ஆக “ஏகன்” ஒன்றின் முடிவான உறுதியைக் குறிக்கிறது, “ஏம்” இருதய உயிர் பீஜமாகும், இரு சுழி “ன்” இரு ‘த’ ‘ய’ச் சுழியைக் குறிக்கிறது, னகர மேற்புள்ளியாம் அன்பின் வட்டத்தில் சகலமும் அடங்கி விடுகிறது)

ஏகன் என்றுமே அன்பேதான் – குரு
நாதன் நெஞ்சுளே மின்னேதான்
வேதம் தேவன் சொல்லேதான்
யாவும் ஏகன் பிள்ளைதாம்
(மின் = ஒளி)

வேத உண்மை சமரசமே
யாவும் இங்கே சரிசமமே
பாழும் பேதங்கள் சரிந்தனவே
யாம்ஓர் குலந்தான் புரிந்ததுவே

யாதுமே நம்மூர் பூமியிலே
யாருமே நம்மாள் தானிங்கே
ஏகனாம் நேசமே ஆயுதமாய்ப்
பாதகப் போர்களை வென்றோமே
(நம்மாள் = நம் நெருங்கிய உறவு)

ஏக தேவன் அருளாலே
பாப ரோக மருளாதி
நாச மாகத் தெருளோடே
வாழச் செய்தார் சற்குருவே
(பாப ரோக = பாவம் மற்றும் நோய், மருள் = மயக்கம், தெருள் = தெளிவு)

மெய்யாந் தேகத் துள்ளேயே
உள்ளான் தூய நெஞ்சுள்ளே
வல்லான் ஏகன்(நேசன்) என்றுண்மை
சற்குரு நாதர் ஊட்டினாரே

சூஃபிப் பாடல்(Sufi Song) – 5

ஜனவரி 16, 2011
அன்பெனும் ஏகனே தேவன்
சற்குரு பிரானவன் தூதன்
எங்கே திரும்பினும் அன்பின் குருமுகம்
நன்றே காட்டும் நெஞ்சுள் இருதயம்

அன்பாம் ஆதியே ஏகன் – நல்
லறிவாம் போதியே தூதன்
நாதமா(ஞ்) ஜோதியே வேதம்
நேசமாய் ஓதினான் தேவன்

சமரச மார்க்கமே தந்தான்
அமரக நேசமாம் வல்லான்
தயாபரன் யார்க்குமே நல்லான்
“தயவாய் இரு”எனச் சொன்னான்

தாயக நெஞ்சினை ஓம்பி
நாயக வள்ளலைக் காண்பாய்
பாயச வெள்ளமாம் உண்*மை
நேசமே அள்ளியே உண்பாய்

மெய்யாந் தேகத் துள்ளது
நெஞ்சாம் நேசக் கண்ணது
வஞ்ச மாயைக் குள்ளது
துஞ்ச வோயாம் செய்தது

ஆகா! நெஞ்சுள் ஓடுது
தேனாய்ப் பாலாய் ஆறது
ஏக தேவன்(தேவ நேசன்) வீடது
மார்பின் உள்ளே தேடது

சூஃபிப் பாடல்(Sufi Song) – 4

ஜனவரி 15, 2011

“அல்லாஹ்வின் பேரிலெ”ன்றால் சேருஞ் ஞானம்
“அருளாளன் கருணாகரன்” என்றே நெஞ்சுருக
உச்சரித்தால் இருள்சேர் இருவினைகள் தேயும்
“மன்னிக்குந் தயாபரன்” என்றே தண்டிக்கும்
வஞ்சத்தை “அன்பென்னும் ஒன்றேயாம் என்றென்றும்
நின்னெஞ்சுள்” என்றோதும் அல்லாவுக் கர்ப்பணித்தால்
இற்றுப்போம் நரைதிரை மூப்போடு நோயும்
“அருளாளன் கருணாகரன் மன்னிக்குந் தயாபரன்
அல்லாஹ்வின் பேரிலெ”ன்றால் கொடுஞ்சாவும் மாயும்
வல்லானாம் அல்லாஹ்வின் நற்தூதன் நபிகள்
எல்லாமே உய்யத்தான் அன்போடு அருளும்
குர்-ஆனின் இச்சாரம் அல்லாஹ்வின் உண்மை
ஆங்கார நாசத் தந்திரம் புகட்டும்
ஓங்கார நாத மந்திரப் பொருளே
“அருளாளன் கருணாகரன் மன்னிக்குந் தயாபரன்
அல்லாஹ்வின் பேரிலெ”னும் குர்-ஆனின் சாரம்
நல்லான்தான் மின்னும்நின் நெஞ்சுள்ளே ஏற்றேபின்
நின்னாவில் இச்சாரந் தித்திக்க உண்பாய்