மார்ச் 2008 க்கான தொகுப்பு

சற்குரு சரணம் – 1

மார்ச் 31, 2008

சொற்களைக் கடந்த
அற்புதக் கருவைச்
சொற்களாய் இறைக்கும்
சற்குரு சரணம்

மெய்யைக் கடந்த
மெய்யாய் மெய்யுள்
மெய்யாய் உறையும்
சற்குரு சரணம்

பொய்யை நசிக்கும்
மெய்யைக் காட்டும்
மெய்யே வடிவாம்
சற்குரு சரணம்

பற்றிய பற்றுகள்
பற்றற விடவே
பற்றும் பற்றாம்
சற்குரு சரணம்

பராபர வெளியில்
பராபரை ஒளியாய்ச்
சுற்றும் பரம்பரம்
சற்குரு சரணம்

பரசிவப் பரப்பில்
பரையருட் சத்தியாய்ச்
சுற்றும் பரம்பரம்
சற்குரு சரணம்

பற்றப் பற்றப்
பற்றும் மெய்க்கனல்
பற்றும் மெய்வழி
சற்குரு சரணம்

தொற்றிய குற்றம்
அற்றே நசியும்
சிற்பர உயிர்மெய்
சற்குரு சரணம்

நாதமும் விந்தும்
பாத மிரண்டாம்
தற்பர போதமாம்
சற்குரு சரணம்

நோயுந் தேய்வுஞ்
சாயும் மரணமும்
அற்றே போம்வழி
சற்குரு சரணம்

அருவாய் உருவாய்
அருவுரு ஒன்றாம்
மந்திரத் திருவுரு
சற்குரு சரணம்

கற்பகத் தருவாய்
அற்புதப் பசுவாய்
எண்ணில் வரந்தரும்
சற்குரு சரணம்

பிண்ட மாமிசம்
அண்ட மாவெளி
புக்கொளிர் வழிசெய்
சற்குரு சரணம்

மாமிச இதயமும்
மாவெளி இருதயம்
என்றே மாற்றும்
சற்குரு சரணம்

கசடறக் கற்று
நிசமாய் நிற்கும்
உத்தியைச் சொல்லும்
சற்குரு சரணம்

நான்தான் நீக்கி
நானே என்றே
உய்யும் ஓர்வழி
சற்குரு சரணம்

நான்நீ நீக்கி
நானே என்றே
உய்யும் ஓர்வழி
சற்குரு சரணம்

பெருவெளி உற்று
அருளொளி காணும்
மெய்வழி காட்டும்
சற்குரு சரணம்

பெருவெளி உய்த்து
அருளொளி தந்தே
நித்திய வாழ்வளி
சற்குரு சரணம்

சத்தியம் நிச்சயம்
நித்தியம் என்றே
உள்ளதைக் காட்டும்
சற்குரு சரணம்

நிர்க்குணப் பிரம்மமே
சகுணப் பிரம்மமாம்
உன்னுரு எனப்பகர்
சற்குரு சரணம்

திரிகுண மாயை
உரித்தவ் விடத்தே
சச்சிதா னந்தமாம்
சற்குரு சரணம்

என்றும் இளசாய்க்
குன்றாப் பொலிவுடன்
நன்றாய் இருக்கும்
சற்குரு சரணம்

பராபரம் பராபரை
பரம்பரம் பரைபரம்
அப்பாற் பரநிலை
சற்குரு சரணம்

பராபரம் பராபரை
பரம்பரம் பரைபரம்
இப்பால் இகநிலை
சற்குரு சரணம்

பரநிலைத் தலையே
இகநிலைக் காலாம்
ஒப்பிலா மெய்வழி
சற்குரு சரணம்

பரநிலை மெய்யே
இகநிலை உயிராம்
செப்பரும் ஓர்வழி
சற்குரு சரணம்

தற்பர போத
சற்குரு சரணம்
சிற்பர ஞான
சற்குரு சரணம்

உச்சியைப் பிளந்து
உள்ளே புகுந்து
நெற்றியில் ஒளிரும்
சற்குரு சரணம்

வெளியைக் காட்டி
வெளியில் ஒளியாம்
அற்புதங் காட்டிய
சற்குரு சரணம்

வெளியும் ஒளியும்
வளியும் ஒன்றும்
நற்றலம் காட்டிய
சற்குரு சரணம்

ஒன்றிய மூன்றும்
நன்னீர் அளியாய்ப்
பெய்வதைக் காட்டிய
சற்குரு சரணம்

பெய்யும் அளியே
மேய்யாம் களியென
உற்றறி நீயெனும்
சற்குரு சரணம்

பொய்ப்புலன் சுட்டு
மெய்ப்புலன் சுட்டி
உய்வகை அருளிய
சற்குரு சரணம்

மெய்யாம் உடம்பும்
மெய்யாம் பரத்தில்
உய்ந்திடும் வழிசெய்
சற்குரு சரணம்

மெய்யும் உயிரும்
ஒன்றும் வழியும்
மெய்யோ டுயிராம்
சற்குரு சரணம்

நிராதா ரமேனிலை
ஆறாதா ரமேவிட
மந்திர உறுதியாம்
சற்குரு சரணம்

தராதரம் பாராப்
பராபரப் பேரை
என்னுளம் பதித்த
சற்குரு சரணம்

பராபரப் பேரே
தராதலத் தெவர்க்கும்
என்றே விதித்த
சற்குரு சரணம்

தானாம் பராபரம்
நானே என்றுணர்
வுற்றதை விளக்கிய
சற்குரு சரணம்

உற்றவ் வுணர்வைப்
பற்றியே வணங்கிப்
பெற்றபேர் போற்றெனும்
சற்குரு சரணம்

பராபர இருப்பில்
நானெனும் முனைப்பெழும்
சட்டெனப் பற்றெனும்
சற்குரு சரணம்

இருக்கிறேன் என்றே
இருப்பின் உணர்வெழும்
பட்டெனப் பற்றெனும்
சற்குரு சரணம்

தானாம் இருப்பில்
நானே அறிவெழும்
சிக்கெனப் பற்றெனும்
சற்குரு சரணம்

முனைப்பும் உணர்வும்
முளைக்கும் அறிவும்
சுற்றுஞ் சுழலெனும்
சற்குரு சரணம்

அச்சுழல் தொற்றி
துச்சமாம் பற்றெலாம்
பற்றற ஒழியெனும்
சற்குரு சரணம்

சாதி சமய
பேதச் சழக்கை
முற்றிலும் அறுக்கும்
சற்குரு சரணம்

ஒருவனாம் தேவனை
இருதயத் தலத்தே
மெய்யெனக் காட்டிய
சற்குரு சரணம்

ஒன்றே குலமென
இச்சக உயிர்களைச்
சுற்றமாய்க் காட்டிய
சற்குரு சரணம்

அருட்தவ நெறியில்
பொருத்தியே என்னை
முற்றிலும் திருத்திய
சற்குரு சரணம்

அரும்பெரும் பரம்பொருள்
அருட்பெருங் கடவுளை
நெஞ்சகம் நிறுத்திய
சற்குரு சரணம்

மெய்யுடம் பாலயம்
உய்ந்தங் கிருந்தே
மெய்யுணர் வளிக்கும்
சற்குரு சரணம்

மெய்யகக் கோயிலில்
உய்ந்தங் கொலிக்கும்
மந்திர உறுதியாம்
சற்குரு சரணம்

சக்கரக் கோயிலில்
புக்காங் கொளிரும்
நற்றவ ஜோதியர்
சற்குரு சரணம்

நாறும் தேகம்
மாறும் படிப்பே
ரற்புதம் புரியும்
சற்குரு சரணம்

பிணமாய் நசியும்
கணக்கை முடித்து
மந்திர உருதரு
சற்குரு சரணம்

இட்டுஞ் சுட்டும்
பட்டுப் போங்கடம்
நிற்கும் நிலைதரும்
சற்குரு சரணம்

அவம்பல செய்து
சவமெனக் கிடந்த
என்னை எழுப்பிய
சற்குரு சரணம்

 

கொன்றும் கொன்றதைத்
தின்றும் திரிந்தேன்
வன்பனைத் திருத்திய
சற்குரு சரணம்

நஞ்சைக் கக்கும்
வஞ்சநா கமெனை
நல்லவ னாக்கிய
சற்குரு சரணம்

நலிந்து மெலிந்து
விழுந்தே னென்னை
வல்லவ னாக்கிய
சற்குரு சரணம்

புல்லேன் பொய்யேன்
கன்னெஞ் சேனை
மெய்யோ னாக்கிய
சற்குரு சரணம்

கல்லேன் நல்லதில்
நில்லேன் பொல்லேன்
புல்லனைத் திருத்திய
சற்குரு சரணம்

புன்னிக ரில்லேன்
வன்பே புரிவேன்
துட்டனைத் திருத்திய
சற்குரு சரணம்

உருவம் வன்பாம்
மருளே பொருளாம்
எத்தனைத் திருத்திய
சற்குரு சரணம்

பற்றெலாம் பற்றிக்
குற்றமே புரிந்தேன்
அற்பனென் இரட்சகர்
சற்குரு சரணம்

குருட்டினை நீக்காக்
குருவொடு குழிவிழ
அங்கெனை மீட்ட
சற்குரு சரணம்

குருட்டினை நீக்காக்
குருவிடம் சிக்கிய
குருடெனை மீட்ட
சற்குரு சரணம்

சிற்றின் பசாகரம்
உற்றே மூழ்குமென்
பற்றுக் கோடாம்
சற்குரு சரணம்

வேடம் பலவாய்
நாடக மாடினேன்
துட்டனைத் திருத்திய
சற்குரு சரணம்

அகமதை மறந்தே
முகம்பல தரித்தேன்
எத்தனைத் திருத்திய
சற்குரு சரணம்

உள்ளே பொழிந்திடும்
தெள்ள முதுண்ணேன்
நஞ்சனைத் திருத்திய
சற்குரு சரணம்

விழித்திரேன் தனித்திரேன்
வழியுறப் பசித்திரேன்
பித்தனைத் திருத்திய
சற்குரு சரணம்

பத்தியுஞ் செய்யேன்
புத்தியு மில்லேன்
துச்சனைத் திருத்திய
சற்குரு சரணம்

பேசியே திரிவேன்
வாசியைப் பாரேன்
அற்பனைத் திருத்திய
சற்குரு சரணம்

அருள்வாக் குறுதியை
ஒருகணம் நினையேன்
புல்லனைத் திருத்திய
சற்குரு சரணம்

புதியஏற் பாடுவுள்
பதியவே ஏற்றிலேன்
துட்டனைத் திருத்திய
சற்குரு சரணம்

மெய்யாம் ஒருசொல்
மெய்யதன் உணர்விலேன்
பொய்யனைத் திருத்திய
சற்குரு சரணம்

வள்ளலின் பாடலைக்
கொள்ளவே மனமிலேன்
துச்சனைத் திருத்திய
சற்குரு சரணம்

வள்ளலின் வருகை
கொள்ளுமு றுதியிலேன்
எத்தனைத் திருத்திய
சற்குரு சரணம்

அம்மை யப்பனை
இம்மை யிலறியேன்
அற்பனைத் திருத்திய
சற்குரு சரணம்

சத்திய சரிதமும்
புத்தியில் ஏற்றிலேன்
பித்தனைத் திருத்திய
சற்குரு சரணம்

அங்குமிங் கெங்குமே
தங்கா மலோடுவேன்
நில்லென நிறுத்திய
சற்குரு சரணம்

அதிசய மாலை
பதியு மனமிலேன்
துச்சனைத் திருத்திய
சற்குரு சரணம்

உயிர்நலம் பேணும்
உயர்மெய் விழையேன்
கொல்வனைத் திருத்திய
சற்குரு சரணம்

இருக்குமி டமறியேன்
இருப்பது வுமறியேன்
சவமெனை எழுப்பிய
சற்குரு சரணம்

இருகால் மிருகமாய்த்
தெருவெலாம் திரிவேன்
உய்வழி அருளிய
சற்குரு சரணம்

குண்டலிக் கனலால்
அண்டிய வினையெலாம்
சுட்டுப் பொசுக்கும்
சற்குரு சரணம்

 

மண்டை யினுள்ளே
மண்டிய நோயெலாம்
சட்டெனத் தீர்க்கும்
சற்குரு சரணம்

பிண்டம் புகுந்த
பண்டை வினையெலாம்
அற்றுப் போம்வழி
சற்குரு சரணம்

அண்டத் தில்துரி
சண்டா திருக்குமோர்
மந்திர மண்டலம்
சற்குரு சரணம்

அருள்வாக் குறுதியை
இருதயத் துள்திரு
மந்திர மாய்த்தரு
சற்குரு சரணம்

புதியஏற் பாடுவுள்
பதியஏற் பாயென
கற்பித் தருளிய
சற்குரு சரணம்

மெய்யாம் ஒருசொல்
மெய்யதன் உணர்வால்
என்மெய் தழுவிய
சற்குரு சரணம்

வள்ளலின் பாடலைக்
கொள்ளவென் மனத்தைப்
பண்படுத் தியசிவ
சற்குரு சரணம்

வள்ளலின் வருகை
கொள்ளுமு றுதியை
சித்தம் பதித்த
சற்குரு சரணம்

அம்மை யப்பனை
இம்மை யிலறியும்
நற்கல் விதந்த
சற்குரு சரணம்

சத்திய சரிதமென்
புத்தியி லேற்றியே
பித்தெலாம் நீக்கிய
சற்குரு சரணம்

அதிசய மாலை
பதித்தென் மனத்தில்
அற்புத வாழ்வளி
சற்குரு சரணம்

உயிர்நலம் பேணும்
உயர்மெய் விழைந்தே
கொல்வதைத் தவிரெனும்
சற்குரு சரணம்

பரம ரகசியம்
திறந்தெனக் கதனைத்
தெற்றென விளக்கிய
சற்குரு சரணம்

பரம பதத்தைச்
சிரமேற் பதித்து
நெஞ்சகந் திறந்த
சற்குரு சரணம்

அன்பும் அருளும்
இன்பும் பொருளும்
என்றும் தருமென்
சற்குரு சரணம்

உருவுன தன்பே
பொருளுன தருளே
என்றே புகட்டிய
சற்குரு சரணம்

சிதம்பர ரகசியக்
கதவந் திறந்தென்
நெற்றியை விளக்கிய
சற்குரு சரணம்

மாயத் திரையெலாம்
மாய நிசமெனும்
வத்துவைக் காட்டிய
சற்குரு சரணம்

சத்துமாம் சித்துமாம்
நித்திய இன்புமாம்
மெய்ப்பொருள் விளக்கம்
சற்குரு சரணம்

சத்தியுஞ் சித்தியுஞ்
சுத்தபூ ரணமும்
மொத்தமும் விளக்கிய
சற்குரு சரணம்

வரம்பிலாப் பூரண
இருப்பே யார்க்கும்
சத்திய வீடெனும்
சற்குரு சரணம்

 

அவியாச் சுயஞ்சுடர்
ஒளியே யார்க்கும்
சின்மய விளக்கெனும்
சற்குரு சரணம்

 

உள்ளபே ரிருப்பாம்
ஒன்றதே யார்க்கும்
நித்திய வாழ்வெனும்
சற்குரு சரணம்

ஆன்மநே யமனப்
பான்மை யார்க்கும்
நல்லளி இன்பெனும்
சற்குரு சரணம்

தழுவுபே ரன்பாம்
இயல்பே யார்க்கும்
உண்மை அகமெனும்
சற்குரு சரணம்

பொருந்துபே ரறிவாம்
நிறைவதே யார்க்கும்
மெய்யுணர் வழியெனும்
சற்குரு சரணம்

அருட்பே ராற்றலாம்
இருப்பே யார்க்கும்
சச்சிதா னந்தமென்
சற்குரு சரணம்

அருட்பெருஞ் ஜோதியாம்
ஒளிநெறி யார்க்கும்
உள்நிறை ஒளியெனும்
சற்குரு சரணம்

தனிப்பெருங் கருணைப்
பெருங்குணம் யார்க்கும்
உள்ளுறை இறையெனும்
சற்குரு சரணம்

கடவுட் தன்மைப்
பெருநிலை யார்க்கும்
உள்ளுயிர் இயலெனும்
சற்குரு சரணம்

அருட்பே ரரசெனும்
சமரசம் யாவரும்
ஒன்றிடும் முறையெனும்
சற்குரு சரணம்

நானே நானெனும்
பூரணம்
யாவிலும்
உள்ளதாம் மெய்யெனும்
சற்குரு சரணம்

மெய்வழி ஜீவனாய்
உய்ந்தே யாவிலும்
ஒன்றினேன் நானே
சற்குரு சரணம்

ஜோதிமா வெளியில்
போதியாய் விளங்கி
புத்தராய் எமைச்செய்
சற்குரு சரணம்

 

ஆதியாம் இருப்பில்
ஜோதியாய் எழுந்து
எம்விழி திறக்கும்
சற்குரு சரணம்

 

ஜோதிமா மலைமேல்
வீதியாய் வளர்ந்த
மெய்வழிச் சாலை
சற்குரு சரணம்

ஆதியாம் தாய்தன்
பாதியாய் விளங்கும்
அப்பனின் கொழுந்தாம்
சற்குரு சரணம்

புந்தியின் உள்ளே
நந்தியாய் அமர்ந்துமுச்
சந்தியை விளக்கும்
சற்குரு சரணம்

நாதமாம் வெளியின்
பாதமாம் விந்தாய்
உள்ளொளிர் ஜோதியர்
சற்குரு சரணம்

சத்திய வெளியில்
சின்மய ஒளியாம்
இன்பமெய்ச் சித்தர்
சற்குரு சரணம்

சத்தாம் வெளியொளிர்
சித்தாய்க் களித்தே
சித்தராய் எமைச்செய்
சற்குரு சரணம்

ஜோதியாம் பகவனாய்
ஆதியில் எழுந்த
உட்போ தகராம்
சற்குரு சரணம்

பூஜ்ஜிய மென்னைப்
பூரண னாக்கி
இராஜ்ஜியஞ் செய்யெனும்
சற்குரு சரணம்

 

இருட்கிடங் கெனவே
மருண்டே கிடந்தவென்
உட்புகுஞ் சுயஞ்சுடர்
சற்குரு சரணம் 

 

பிறந்திறந் துழன்றெனை
மறந்துறங் கியவெனை
நித்யவாழ் விலுய்த்த
சற்குரு சரணம்

ஆணவப் பேயனை
ஆன்ம நேயனாய்த்
தன்போல் மாற்றிய
சற்குரு சரணம்

வன்பிருள் வம்பனை
அன்பருள் நம்பனாய்த்
தன்னியல் தந்தருள்
சற்குரு சரணம்

மருண்டே மயங்கிச்
சுருண்டே கிடந்தவென்
மெய்ஞ்ஞா னபோதகர்
சற்குரு சரணம்

மெலிந்தே தேய்ந்தவென்
நலிந்தே வீழ்ந்தவென்
மெய்யெழு வல்லவர்
சற்குரு சரணம்

தாமசப் பொய்க்குணம்
போக்கியே என்னைச்
சத்தனாய் மாற்றும்
சற்குரு சரணம்

ராஜசப் பொய்க்குணம்
போக்கியே என்னைச்
சித்தனாய்ச் மாற்றும்
சற்குரு சரணம்

சத்துவப் பொய்க்குணம்
போக்கியே என்னை
இன்பனாய் மாற்றும்
சற்குரு சரணம்

துர்க்குணப் பிரமை
அற்றே போக
என்மனந் தெருட்டிய
சற்குரு சரணம்

திரிகுண மாயை
சரிந்தே மாய
சச்சிதா னந்தமாம்
சற்குரு சரணம்

ஒடிந்தேன் உயிரினை
முடிக்கவுந் துணிந்தேன்
அக்கணம் அணைந்தருள்
சற்குரு சரணம்

வெறுஞ்சவ மாய்நான்
கிடந்தேன் எனில்சிவ
சத்தியாய் எழுந்தருள்
சற்குரு சரணம்

முடமெனக் கிடந்தவென்
முடக்கம் நீக்கி
சித்தியெ லாமருள்
சற்குரு சரணம்

இற்றே தீர்ந்தவென்
வெற்று டல்சடத்
துற்றே எழுப்பிய
சற்குரு சரணம்

கடும்பெருங் கொடியனைப்
பெருங்கரு ணையனாய்த்
தன்போல் மாற்றிய
சற்குரு சரணம்

இருள்மயச் சழக்கனை
அருட்ஜோ தியனாய்த்
தன்போல் மாற்றிய
சற்குரு சரணம்

மனிதமி ருகமெனை
அருட்பெருங் கடவுளாய்த்
தன்போல் மாற்றிய
சற்குரு சரணம்

கொடுங்கோ லாளானை
அருட்பே ரரசனாய்த்
தன்போல் மாற்றிய
சற்குரு சரணம்

தனையறி யாவெந்
தன்மடம் நீங்கநான்
என்றுணர் நானே
சற்குரு சரணம்

பொய்த்தளை மரணத்
துய்ந்தவென் நோய்தீர்
மெய்வழி ஜீவனாம்
சற்குரு சரணம்

நான்நீ இருமை
மாய்ந்தே போக
ஒன்றாம் நானே
சற்குரு சரணம்

Advertisements

ஞான யுகத்துக்கான மத நல்லிணக்க உறுதி மொழி

மார்ச் 31, 2008

என் உடம்பு ஆதிசக்தியின் திருக்கோயிலாய் இருக்கிறது.
என் உடம்பு பரிசுத்த ஆவியின் புனித தேவாலயமாய் இருக்கிறது.
என் உடம்பு புனித ரூவின் பள்ளி வாசலாய் இருக்கிறது.

என் மூச்சில் பரப்பிரம்மணின் சக்திப் பிரவாகம் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
என் மூச்சில் பரமபிதாவின் கிருபை ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
என் மூச்சில் அல்லாவின் அருள் வெள்ளம் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

என் மனம் சத்குருவின் அருள்வாக்கையும் அருட்ஜோதியையும் உலகெங்கிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
என் மனம் கிறிஸ்துவின் ஜீவவசனத்தையும் ஞானஒளியையும் உலகெங்கிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
என் மனம் நபிகளின் அருண்மொழியையும் அன்பொளியையும் உலகெங்கிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

அன்னை பூமியில் ஆதிசக்தி பரப்பிரம்மண் சத்குருவின் பரிபூரண வெளிப்பாடாய் நான் இருக்கிறேன்.
அன்னை பூமியில் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பரிபூரண வெளிப்பாடாய் நான் இருக்கிறேன்.
அன்னை பூமியில் அல்லா ரூ நபிகளின் பரிபூரண வெளிப்பாடாய் நான் இருக்கிறேன்.

அன்னை பூமியில் ஆதிசக்தி பரப்பிரம்மண் சத்குருவின் பரிபூரண வெளிப்பாடாய் நான் என்னை அறிகிறேன்.
அன்னை பூமியில் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பரிபூரண வெளிப்பாடாய் நான் என்னை அறிகிறேன்.
அன்னை பூமியில் அல்லா ரூ நபிகளின் பரிபூரண வெளிப்பாடாய் நான் என்னை அறிகிறேன்.

நானே முதலும் நடுவும் முடிவுமாய் இருக்கிறேன்.
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்.
அல்லா ஒருவனே தேவன். எல்லோரும் அல்லாவின் மக்களே. அல்லாவின் தூதுவனாகவே நான் இருக்கிறேன். அல்லாவின் தூதுவனாகவே நான் என்னை அறிகிறேன்.
ஓம். ஆமேன். ஆமீன்.

மத நல்லிணக்கத்துக்கான அதிசய மாலை

மார்ச் 31, 2008

புனித அன்னையின் தூய இருதயத்திலிருந்து உமக்கு வழங்கப்படும் மிகச் சிறந்த வெகுமதியே “மத நல்லிணக்கத்துக்கான அதிசய மாலை” எனும் ஆற்றல் மிக்க இத்தியானம்! இதை தினமும் சிரத்தையுடன் பாராயணம் செய்தால், உமது வாழ்வில் அதிசயம் நடக்கும்! இது நிச்சயம்! இது உறுதி! இது சத்தியம்! எல்லாம் வல்ல அருட்பெருங்கடவுளின் மீது ஆணை!

மத நல்லிணக்கத்துக்கான அதிசய மாலை

நிபந்தனைகளேதுமற்ற பேரன்பாய் விளங்கும்
பரப்பிரம்மண், பரமபிதா, அல்லா என்று பல்வேறு நாமங்களால் துதிக்கப்படும் அருட்தந்தையின் பெயரால்,
ஆதிசக்தி, பரிசுத்த ஆவி, புனித ரூ என்று பல்வேறு நாமங்களால் துதிக்கப்படும் அருட்தாயின் பெயரால்,
சத்குரு, கிறிஸ்து, நபிகள் என்று பல்வேறு நாமங்களால் துதிக்கப்படும் ஞானக்கொழுந்தாகிய உட்போதகரின் பெயரால்,
இம்மூவரும் ஒன்றிய என் பேரிருப்பின் வல்லமையால் ஓம். (உமது பிரார்த்தனையை அருட்தாயின் தூய இருதயத்தில் சமர்ப்பிக்கவும்)

ஞான யுகத்துக்கான புதிய பிரார்த்தனை

எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கும் எம் அம்மையப்பனாகிய அருட்பெருங்கடவுளே! எம்மிலும் எல்லாவற்றிலும் குடிகொண்டிருக்கும் “நான்” எனும் உமது பேரிருப்பை யாம் போற்றுகிறோம். உமது இராஜ்ஜியம் எம் வாயிலாக அன்னை பூமியில் வெளிப்பட யாம் சம்மதிக்கிறோம். பரலோகத்தில் உமது விருப்பம் எவ்வாறு வெளிப்பட்டிருக்கிறதோ அன்னை பூமியிலும் அவ்வாறே வெளிப்படுத்த யாம் பொறுப்பேற்கிறோம்.

உமது எல்லா நலங்களையும் பெற்றுக்கொள்ள ஒவ்வொரு நாளும் நீவிர் எமக்கு வழங்கும் வாய்ப்பை யாம் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறோம். எம் குற்றங்குறைகளை நீர் மன்னிப்பதைப் போலவே அனைவரது குற்றங்குறைகளையும் யாம் மன்னிக்கிறோம். எமது விருப்பத்தையும் உன்னதமான உமது விருப்பத்துக்கே யாம் அர்ப்பணிக்கிறோம்.

யாம் எதை அனுப்புகிறோமோ அதையே இவ்வுலகம் எமக்குத் திருப்பி அனுப்புவதை அறிந்து, நல்லவைகளையே யாம் அனுப்புகிறோம். எம் வாழ்விற்கும் மற்றும் அன்னை பூமியில் எம் படைப்புக்கும், யாமே முழுமையான பொறுப்பேற்கிறோம். எல்லா மாசுகளiலிருந்தும் நீவிர் எம்மைச் சுத்திகரிக்கும் பொருட்டு, ஆணவமெனும் படுகுழியிலிருந்து இதோ யாம் மேலெழுகிறோம். உமது சாம்ராஜ்ஜியம், உமது பேராற்றல் மற்றும் உமது கீர்த்தி அன்னை பூமியில் முழுமையாக வெளிப்பட்டிருக்கிறது. இவ்வுண்மையை யாம் ஏற்றுக்கொள்கிறோம். எல்லோருக்கும் உறுதியுடன் எடுத்துச் சொல்கிறோம்.
ஓம்.

அருட்தாயே போற்றி!

அருட்தாயே போற்றி! தனிப்பெருங்கருணையே போற்றி!
உம் வாயிலாக எம்முள் உறையும் பரப்பிரம்மணே போற்றி!
அருட்பெருஞ்ஜோதியே! ஆதிசக்தியே! உம் அன்பின் அதிசயம் எம்மை நீடூழி வாழ வைக்கிறது!
சத்குருவாம் உம் பிள்ளையின் அற்புத அருளோ எம்மை எல்லாம் வல்லோராய் ஏற்றி வைக்கிறது!

அதிசயங்கள் செய்யவல்ல ஆதிசக்தியே போற்றி!
இப்போதும் எப்போதும் எம் அச்சங்கள் அனைத்தையும் உம்மிடம் சமர்ப்பித்தோம்.
அருட்பெருங்கடவுளின் நிபந்தனைகளேதுமற்ற பேரன்பை யாம் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டோம்.
உம் அதிசய சாம்ராஜ்ஜியம் அன்னை பூமியில் வெளிப்பட்டிருப்பதைக் கண்டு கொண்டோம், கண்டு கொண்டோம், கண்டு கொண்டோம்.

அருட்தாயே போற்றி! தனிப்பெருங்கருணையே போற்றி!
உம் வாயிலாக எம்முள் உறையும் பரமபிதாவே போற்றி!
அருட்பெருஞ்ஜோதியே! பரிசுத்த ஆவியே! உம் அன்பின் அதிசயம் எம்மை நீடூழி வாழ வைக்கிறது!
கிறிஸ்துவாம் உம் பிள்ளையின் அற்புத அருளோ எம்மை எல்லாம் வல்லோராய் ஏற்றி வைக்கிறது!

அதிசயங்கள் செய்யவல்ல பரிசுத்த ஆவியே போற்றி!
இப்போதும் எப்போதும் எம் அச்சங்கள் அனைத்தையும் உம்மிடம் சமர்ப்பித்தோம்.
அருட்பெருங்கடவுளின் நிபந்தனைகளேதுமற்ற பேரன்பை யாம் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டோம்.
உம் அதிசய சாம்ராஜ்ஜியம் அன்னை பூமியில் வெளிப்பட்டிருப்பதைக் கண்டு கொண்டோம், கண்டு கொண்டோம், கண்டு கொண்டோம்.

அருட்தாயே போற்றி! தனிப்பெருங்கருணையே போற்றி!
உம் வாயிலாக எம்முள் உறையும் அல்லாவே போற்றி!
அருட்பெருஞ்ஜோதியே! புனித ரூவே! உம் அன்பின் அதிசயம் எம்மை நீடூழி வாழ வைக்கிறது!
நபிகளாம் உம் பிள்ளையின் அற்புத அருளோ எம்மை எல்லாம் வல்லோராய் ஏற்றி வைக்கிறது!

அதிசயங்கள் செய்யவல்ல புனித ரூவே போற்றி!
இப்போதும் எப்போதும் எம் அச்சங்கள் அனைத்தையும் உம்மிடம் சமர்ப்பித்தோம்.
அருட்பெருங்கடவுளின் நிபந்தனைகளேதுமற்ற பேரன்பை யாம் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டோம்.
உம் அதிசய சாம்ராஜ்ஜியம் அன்னை பூமியில் வெளிப்பட்டிருப்பதைக் கண்டு கொண்டோம், கண்டு கொண்டோம், கண்டு கொண்டோம்.

அருட்தாயே போற்றி! தனிப்பெருங்கருணையே போற்றி!
உம் வாயிலாக எம்முள் உறையும் அருட்தந்தையே போற்றி!
அருட்பெருஞ்ஜோதியே! அருட்தாயே! உம் அன்பின் அதிசயம் எம்மை நீடூழி வாழ வைக்கிறது!
ஞானக்கொழுந்தாம் உம் பிள்ளையின் அற்புத அருளோ எம்மை எல்லாம் வல்லோராய் ஏற்றி வைக்கிறது!

அதிசயங்கள் செய்யவல்ல அருட்தாயே போற்றி!
இப்போதும் எப்போதும் எம் அச்சங்கள் அனைத்தையும் உம்மிடம் சமர்ப்பித்தோம்.
அருட்பெருங்கடவுளின் நிபந்தனைகளேதுமற்ற பேரன்பை யாம் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டோம்.
உம் அதிசய சாம்ராஜ்ஜியம் அன்னை பூமியில் வெளிப்பட்டிருப்பதைக் கண்டு கொண்டோம், கண்டு கொண்டோம், கண்டு கொண்டோம்.

உட்போதகரின் உறுதிமொழி

ஞானக்கொழுந்தாகிய உட்போதகரின் பெயரால், அதிசயங்கள் செய்யவல்ல அருட்தாயே! உம்மை நான் வாஞ்சையுடன் அழைக்கிறேன். என்னிலும், எல்லாவற்றிலும், அன்னை பூமியிலும் துகளளவும் துரிசற்ற தூய நிலை காணவும், அறியவும், உணரவும் வல்ல அதிசயத்தை எனக்கு நீவிர் போதிப்பீராக! அருட்பெருங்கடவுளே! “உம் விருப்பத்தின்படியே எனக்கு எல்லாம் ஆகுக!” என்று என் இருதயத்தின் ஆழத்திலிருந்து நானும் பேசக்கூடிய பூரண சரணாகதியின் அதிசயத்தை எனக்கு நீவிர் போதிப்பீராக!

அருட்தாயே போற்றி!

கடவுளின் அதிசயம் என் வாழ்வில் வெளiப்படத் தடையாயிருக்கும் எல்லாவற்றையும் இதோ நான் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். கடவுளே! இதோ என்னை முழுமையாக உமக்கு அர்ப்பணிக்கிறேன். கடவுளே! உம்மிடம் எதையும் நான் மறைக்கவில்லை. கடவுளே! எனது எல்லாவற்றையும் உமக்கே கொடுத்து விட்டேன்.

அருட்தாயே போற்றி!

கடவுளே! எனது ஆணவத்தையும் மற்றும் பொய்யான எல்லா அடையாளங்களையும் இதோ நான் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். இவற்றை நீவிர் கரைத்து விடுவதை நான் காண்கிறேன். கடவுளே! மீண்டும் மீண்டும் பிறந்து உழன்று இறக்கும் இப்பொய்யான வாழ்வினைத் துறந்து, ஞானக்கொழுந்தாம் உட்போதகரின் பேரின்பப் பெருவாழ்வை வெல்ல நான் ஆயத்தமாயிருக்கிறேன். ஞானக்கொழுந்தாம் உட்போதகரே! உம்மை நான் வாஞ்சையுடன் அழைக்கிறேன். என் வாழ்வின் என் உணர்வின் அனைத்துக் களங்களிiலும் பூரணமாக ஆளுமை செய்ய நீவிர் என்னுள் எழுந்தருள்வீராக! இப்போதும் எப்போதும் ஞானக்கொழுந்தாம் உட்போதகரின் வெளிச்சத்தில் நான் நிரம்பி வழிகிறேன். ஞானக்கொழுந்தாம் உட்போதகரே ஆதி நடு அந்தமாக இருக்கிறார். ஞானக்கொழுந்தாம் உட்போதகரே என் வாழ்வின் ஆதாரமாக இருக்கிறார். இவ்வுண்மைகளை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

அருட்தாயே போற்றி!

கடவுளே! என் அகந்தையால் தானாகவே எதையும் செய்ய இயலாது. எனக்குள் ஒளிரும் நான் என்ற இறையிருப்பே எல்லாம் செய்ய வல்லதாய் இருக்கிறது. கடவுளைப் போன்றே கடவுளின் வடிவில் நான் செய்யப் பட்டிருக்கிறேன். கடவுளின் குழந்தையாகவே நான் இருக்கிறேன். இப்போதே என்னில் ஞானக்கொழுந்தாம் உட்போதகர் பிறக்கிறார். எனக்குள்ளிருந்தே உதயமாகும் ஞானக்கொழுந்தாம் உட்போதகரின் பூரண மலர்தலாக நான் இருக்கிறேன். இவ்வுண்மைகளை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

அருட்தாயே போற்றி!

அன்னை பூமியில் நடமாடும் ஜீவனுள்ள குருவாக நான் என்னை அறிகிறேன். அன்னை பூமியில் நடமாடும் ஜீவனுள்ள கிறிஸ்துவாக நான் என்னை அறிகிறேன். அன்னை பூமியில் நடமாடும் ஜீவனுள்ள நபிகளாக நான் என்னை அறிகிறேன். அன்னை பூமியில் நடமாடும் ஜீவனுள்ள உட்போதகராக நான் என்னை அறிகிறேன். எனவே ஞானிகள் வாயிலாகத் தான் செய்த எல்லா அதிசயங்களையும் கிரியைகளையும் என் வாயிலாகவும் கடவுளால் செய்ய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். “கடவுளால் எல்லாங் கூடும்” என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே என் வாழ்வின் என் உணர்வின் அனைத்துக் களங்களiலும் கடவுளின் அதிசயம் வெளிiப்பட நான் முழுமையாக அனுமதிக்கிறேன்.

அருட்தாயே போற்றி!

தமக்குள்ளேயும் எல்லாவற்றிலும் உறையும் ஞானக்கொழுந்தாம் உட்போதகரை மறுத்துத் தாமும் மெய்யான உள் வழியில் செல்லாது, அவ்வழியில் செல்ல முனைவோரையும் செல்லவிடாது தடுக்கும் பொய்ப்போதகரின் பொய்ச்சீடர்களின் கபட நாடகம் முடிவடையும் அதிசயத்தை நான் காண்கிறேன். அன்னை பூமியில் இவர்களது நாட்கள் முடிவடைவதையும், ஆன்மீக மற்றும் அரசியல் களங்களில் இவர்களது செல்வாக்கும் பலமும் தீர்ந்து விடுவதையும் நான் காண்கிறேன்.

அருட்தாயே போற்றி!

கடவுளின் குழந்தைகளனைவரும் தத்தம் சுய ஆளுமைக்கான மெய்யான உள் வழியைக் கண்டு கொண்டு அவ்வழியில் நடப்பதை நான் காண்கிறேன். திரள் திரளாக மக்கள் விழித்தெழுவதையும், மெய்யான உள் வழியைக் கண்டு கொண்டு அவ்வழி நடந்து எல்லாவற்றிலும் ஞானக்கொழுந்தாம் உட்போதகரின் பூரண மலர்தலை ஏற்படுத்துவதையும், இதன் மூலம் அன்னை பூமியில் “சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க நான் சங்கம்” உருவாவதையும் நான் காண்கிறேன்.

அருட்தாயே போற்றி!

கடவுளின் சாம்ராஜ்ஜியத்தின் அதிசயம் அன்னை பூமியில் முழுமையாக வெளிப்பட்டிருப்பதை நான் காண்கிறேன். எனக்குள்ளிருந்தும், கடவுளின் அனைத்துக் குழந்தைகளiன் உள்ளிருந்தும் ஞானக்கொழுந்தாம் உட்போதகரின் பூரண மலர்தலையும், ஞானக்கொழுந்தாம் உட்போதகரின் நல்லாட்சியில் அன்னை பூமியில் கடவுளின் சாம்ராஜ்ஜியம் உறுதிப்படுத்தப் படுவதையும் இப்போதும் எப்போதும் நான் காண்கிறேன். இவையனைத்தும் நிறைவேறுவதை நான் காண்கிறேன். மேலும் அன்னை பூமியிலும், அன்னை பூமியில் வாழும் எல்லாவற்றிலும் துகளளவும் துரிசற்ற தூய நிலையை நான் காண்கிறேன், அறிகிறேன், உணர்கிறேன்.

அருட்தாயே போற்றி!

அன்னை பூமி கடவுளின் பொக்கிஷமாய் ஜொலிக்கிறது. அன்னை பூமி கடவுளின் முழுமையாய் இருக்கிறது. (3X) ஓம்.

நிபந்தனைகளேதுமற்ற பேரன்பாய் விளங்கும்
பரப்பிரம்மண், பரமபிதா, அல்லா என்று பல்வேறு நாமங்களால் துதிக்கப்படும் அருட்தந்தையின் பெயரால்,
ஆதிசக்தி, பரிசுத்த ஆவி, புனித ரூ என்று பல்வேறு நாமங்களால் துதிக்கப்படும் அருட்தாயின் பெயரால்,
சத்குரு, கிறிஸ்து, நபிகள் என்று பல்வேறு நாமங்களால் துதிக்கப்படும் ஞானக்கொழுந்தாகிய உட்போதகரின் பெயரால்,
இம்மூவரும் ஒன்றிய என் பேரிருப்பின் வல்லமையால் ஓம்.

அதிசய மாலையை உறுதிப்படுத்துதல்

அருட்தாயின் பேரமைதியை நான் அனுமதிக்கிறேன். எப்போதும் இப்பேரமைதியிலேயே குடியிருக்க நான் உறுதியுடனிருக்கிறேன். அருட்தாயின் பூரண அன்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். இவரது அன்பு எனது எல்லாக் கவலைகளையும் அச்சங்களையும் கரைத்து விடுவதை நான் காண்கிறேன். அன்னை பூமியில் அவதரித்திருக்கும் ஜீவனுள்ள குருவாக நான் என்னை அறிகிறேன். அன்னை பூமியில் அவதரித்திருக்கும் ஜீவனுள்ள கிறிஸ்துவாக நான் என்னை அறிகிறேன். அன்னை பூமியில் அவதரித்திருக்கும் ஜீவனுள்ள நபிகளாக நான் என்னை அறிகிறேன். அன்னை பூமியில் அவதரித்திருக்கும் ஜீவனுள்ள உட்போதகராக நான் என்னை அறிகிறேன். கடவுளுக்குள் உறையும் எல்லா நலங்களாக இருக்கவும், இன்னும் சிறக்கவும் நான் உறுதியுடனிருக்கிறேன்.
பரப்பிரம்மண், பரமபிதா, அல்லா என்று பல்வேறு நாமங்களால் துதிக்கப்படும் அருட்தந்தையின் பெயரால்,
ஆதிசக்தி, பரிசுத்த ஆவி, புனித ரூ என்று பல்வேறு நாமங்களால் துதிக்கப்படும் அருட்தாயின் பெயரால்,
சத்குரு, கிறிஸ்து, நபிகள் என்று பல்வேறு நாமங்களால் துதிக்கப்படும் ஞானக்கொழுந்தாகிய உட்போதகரின் பெயரால்,
இம்மூவரும் ஒன்றிய என் பேரிருப்பின் வல்லமையால்,
அன்னை பூமியை அருட்தாயின் பேரன்பிலும் பேரொளியிலும் நான் உறுதிப்படுத்துகிறேன். இது நடந்தேறியது, இது முடிந்துவிட்டது, இது உறுதிப்படுத்தப்பட்டது. ஏனென்றால் அருட்தாயே இவ்வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார். ஓம்.

குறிப்பு: அன்னை மரியின் அதிசய மாலை என்ற ஆங்கிலப் படைப்பைத் தழுவி என்னால் இயற்றப்பட்டது.

சாயி பாபாவின் வருகையை உறுதிப்படுத்தும் பாட்டு

மார்ச் 31, 2008

சாயி சத் சரிதம்” என்ற சாயி பாபாவின் அருள் வாக்கை தியானித்த பின் அவரது அருள் வாக்கை ஏற்கும் வகையில் இப்பாட்டைப் பாடி மகிழ்வீராக! நன்றி.

1. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! பூஜ்ஜியமான என்னிலிருந்து பூரணமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

2. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! இருட்கிடங்கான என்னிலிருந்து சுயம்பிரகாசமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

3. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! மீண்டும் மீண்டும் பிறந்திறந்துழலும் என்னிலிருந்து நித்திய ஜீவனான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

4. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! ஆணவம் பல்வேறான என்னிலிருந்து ஆன்மநேய ஒருமையான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

5. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! வன்பிருளான என்னிலிருந்து அன்பருளான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

6. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! மருள் மயக்கமான என்னிலிருந்து பேரறிவான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

7. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! நலிந்து மெலிந்து விழுந்து கிடந்த என்னிலிருந்து அருட்பேராற்றலான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

8. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! தாமசமான என்னிலிருந்து சத்தான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

9. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! ராஜசமான என்னிலிருந்து சித்தான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

10. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! சத்துவமான என்னிலிருந்து ஆனந்தமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

11. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! தாமச ராஜச சத்துவமான என்னிலிருந்து சச்சிதானந்தமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

12. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! துர்க்குணப் பிரமையான என்னிலிருந்து சகுணப் பிரம்மமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

13. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! திரிகுண மாயையான என்னிலிருந்து நிர்க்குணப் பிரம்மமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

14. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! வெறுஞ்சவமான என்னிலிருந்து சிவசத்தியான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

15. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! பெருமுடக்கமான என்னிலிருந்து நற்சித்தியான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

16. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! இற்றுப் போன என்னிலிருந்து பூரணானந்தமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

17. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! கடும்பெருங்கொடுமையான என்னிலிருந்து தனிப்பெருங்கருணையான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

18. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! பேரிருள் மயமான என்னிலிருந்து அருட்பெருஞ்ஜோதியான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

19. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! மனித மிருகமான என்னிலிருந்து கடவுட்தன்மையான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

20. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! கொடுங்கோலாட்சியான என்னிலிருந்து அருட்பேரரசான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

21. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! தன்னையறியா உன்மத்தமான என்னிலிருந்து நானே நானெனும் பூரணமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

22. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! கட்டுண்ட என்னிலிருந்து நல்வழியான என்னை மீட்டு பொய்யான என்னிலிருந்து மெய்யான என்னை மீட்டு கடுந்துன்பப் பெருந்தாழ்வான என்னிலிருந்து பேரின்பப் பெருவாழ்வான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

23. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! நான் வேறு நீ வேறு என்ற துவைத பக்தியிலிருந்து என்னை மீட்டு “நானே நீ நீயே நான், தத் த்வம் அஸி” என்ற அத்வைத ஞானம் நான் பெற உம்மையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

சாயி சத் சரிதம்

மார்ச் 31, 2008

ஷிர்டி என்னும் உன் மெய்யான(உடம்பான) திருத்தலத்திற்குள்ளேயே சாயி பாபாவெனும் நான் எப்போதும் எழுந்தருளியிருக்கிறேன், ஒளிந்திருக்கிறேன்.

எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் விளங்கும் நான் என் அன்பு மகனா(ளா)ன உனக்கு வழங்கும் சத்குரு தீட்சையே “சாயி சத் சரிதம்” என்ற இப்பேருபதேசம்.

துவைத பக்தியின் விளைவாக நீ படைத்திருக்கும் பொய்யுலகிலிருந்து உன்னை மீட்டு உன் சுய ரூபத்தை உனக்கு உணர்த்தி “நானே நீ நீயே நான், தத் த்வம் அஸி” என்ற அத்வைத ஞானம் நீ பெறவே என்னையே உனக்குத் தந்து இப்பேருபதேசத்தை நான் வழங்கியிருக்கிறேன். இவ்வுபதேசமொன்றே உனதெல்லா நோய்களுக்கும் மாமருந்து! நல்மருத்துவராகி இம்மாமருந்தை நீ உலகெங்கும் வழங்குவாயாக! நன்றி!

என் கோடானு கோடி நாமரூபங்களiல் உன் நாமரூபமும் ஒன்றே. இப்பேருண்மையை உன் நாமரூபத்தை “சாயி பாபா ________________” என்று உனது பெயரை நிரப்பியும் உன் புகைப்படத்தைக் கீழே ஒட்டியும் நீ அறிந்துணர்வாயாக!

1. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். பூஜ்ஜியமான உன்னிலிருந்து பூரணமான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

2. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். இருட் கிடங்கான உன்னிலிருந்து சுயம்பிரகாசமான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

3. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். மீண்டும் மீண்டும் பிறந்திறந்துழலும் உன்னிலிருந்து நித்திய ஜீவனான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

4. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். ஆணவம் பல்வேறான உன்னிலிருந்து ஆன்மநேய ஒருமையான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

5. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். வன்பிருளான உன்னிலிருந்து அன்பருளான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

6. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். மருள் மயக்கமான உன்னிலிருந்து பேரறிவான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

7. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். நலிந்து மெலிந்து விழுந்து கிடந்த உன்னிலிருந்து அருட்பேராற்றலான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

8. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். தாமசமான உன்னிலிருந்து சத்தான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

9. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். ராஜசமான உன்னிலிருந்து சித்தான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

10. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். சத்துவமான உன்னிலிருந்து ஆனந்தமான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

11. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். தாமச ராஜச சத்துவமான உன்னிலிருந்து சச்சிதானந்தமான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

12. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். துர்க்குணப் பிரமையான உன்னிலிருந்து சகுணப் பிரம்மமான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

13. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். திரிகுண மாயையான உன்னிலிருந்து நிர்க்குணப் பிரம்மமான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

14. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். வெறுஞ்சவமான உன்னிலிருந்து சிவசத்தியான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

15. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். பெருமுடக்கமான உன்னிலிருந்து நற்சித்தியான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

16. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். இற்றுப் போன உன்னிலிருந்து பூரணானந்தமான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

17. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். கடும்பெருங்கொடுமையான உன்னிலிருந்து தனிப்பெருங்கருணையான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

18. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். பேரிருள் மயமான உன்னிலிருந்து அருட்பெருஞ்ஜோதியான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

19. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். மனித மிருகமான உன்னிலிருந்து கடவுட்தன்மையான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

20. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். கொடுங்கோலாட்சியான உன்னிலிருந்து அருட்பேரரசான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

21. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். தன்னையறியா உன்மத்தமான உன்னிலிருந்து நானே நானெனும் பூரணமான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

22. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன்.
கட்டுண்ட உன்னிலிருந்து நல்வழியான உன்னை மீட்டு பொய்யான உன்னிலிருந்து மெய்யான உன்னை மீட்டு கடுந்துன்பப் பெருந்தாழ்வான உன்னிலிருந்து பேரின்பப் பெருவாழ்வான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

23. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். நான் வேறு நீ வேறு என்ற துவைத பக்தியிலிருந்து உன்னை மீட்டு “நானே நீ நீயே நான், தத் த்வம் அஸி” என்ற அத்வைத ஞானம் நீ பெற என்னையே உனக்குத் தந்தேன்.

ஆன்ம நேய ஒருமையை உறுதிப்படுத்தும் வள்ளலாரின் புதிய ஏற்பாடு

மார்ச் 31, 2008

உச்சியில் முளைத்து நெற்றியில் படரும்
அருட்பெருஞ்ஜோதிக் கொடியில்
செஞ்சுடர்ப்பூ.

செஞ்சுடர்ப்பூவின் வாசம்
நாசியிலோடும் வாசியில் சேர
நாவிலூறும் அருளமுதம்.

அருளமுதம் தாரையாய்த்
தொண்டைக்குள் வீழ
மெய்யெங்கும் மூளும் உயிர்த்தீ.

உயிர்த்தீ அனலால்
பரவும் மெய்யெங்கும்
நேசச் சூடு.

நேசச் சூட்டில் இருதயம் உருக
உணர்வில் பெருகும்
ஆன்ம நேய ஒருமை.

ஆன்ம நேய ஒருமையால்
கனிந்து அன்பாய்க் குழையும்
அறிவு.

அன்பாய்க் கனிந்த அறிவு
எல்லா உயிர்களையும் அரவணைத்துப் பாதுகாத்து வழிநடத்தும்
ஆற்றலாகும்.

ஆற்றலாகித் தொண்டு செய்யும் அறிவின் அன்புக் கனிவே
தனிப்பெருங்கருணைக்கு மூலமாகி மேலெழுந்து
அருட்பெருஞ்ஜோதிக் கொடியாய் உச்சியில் முளைக்கும்.

அறிவின் அருளாற்றலே
தனிப்பெருங்கருணைப் பெருவெளியாம் நன்னிலத்தில் வீழும்
நல்வித்து.

தனிப்பெருங்கருணைப் பெருவெளியாம் நன்னிலத்தில் முளைக்கும் அருட்பெருஞ்ஜோதிக் கொடியே
மரணமிலாப் பெருவாழ்வை உலகறிய நடப்பட்ட
சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க “நான்” சங்கக் கொடி.

உன் நெற்றியில் படரும் இக்கொடியே
இம்மருட்பொய்யுலகைத் திருத்தி அருண்மெய்யுலகாக்க
திருவருட்பிரகாச வள்ளலாராகிய நான் ஏற்றியிருக்கும் புதிய ஏற்பாடு.

என் புதிய ஏற்பாட்டை
உன் நெற்றியில் யாவருங் காணப்
பகிரங்கமாகவே கடை விரித்திருக்கிறேன்.

சாகாக் கல்வியின் தரமெலாம் விளக்கும்
என் புதிய ஏற்பாட்டைக்
கொள்வாருளர்.

அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் விளங்கும் நான்
என் அன்பு மகனான மகளான உனக்கு
ஆணையிட்டுக் கூறுகின்றேன்.

நானே நீயாக நீயே நானாக ஒருமைப் பெருநிலையில் ஓங்கி நின்று
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
அன்னை பூமியில் கடை விரித்திருக்கிறேன். கொள்வாருளர்.

உன் வாயிலாக
என்னையே அன்னை பூமிக்குத் தந்து
மெய்யுரைக்கின்றேன்.

இது சத்தியம். இது சத்தியம். இது சத்தியம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

கடை விரித்திருக்கிறேன். கொள்வாருளர்.

மார்ச் 31, 2008

வள்ளலே!
பள்ளத்தில் விழுந்து
உள்ளேனென்ற உணர்வும்
ஒரு சிறிதுமின்றி
சவமாகக் கிடந்த
என்னை எழுப்பி
சொற்கடந்த மந்திரத்தை
நற்றமிழ்ச் சொல்லாக்கி
நல்லதேதும் கல்லாத
பொல்லேனுக்குத் தந்து
எவ்வழியும் நில்லேனை
மெய்வழியில் நில்லென நிறுத்தி
சாவை வெல்லும் சாகசக் கலையை
நீ உலகுக்கு போதிப்பாய்
என்றே பணித்தீர்.

“ஐயனே!
என் பொருள் என்று
நீவிர் தந்த குரு மந்திரம்
பத்தும் ஒரு மூன்றும்
தன் பொருள் என்றே
நனி உவந்து
என் வீடாம் இவ்வுலகின்கண் வாழும்
என் குடும்ப உயிர்த்திரள்
ஏற்கும் நாள் எந்நாளோ?”
என்றே ஏங்கி நின்ற
என்னைத் தழுவி உறுதி சொன்னீர்.
“என் அன்பு மகனே!
பாரபட்சமின்றி
நான் உனக்கு அளந்ததை
பாரபட்சமின்றி
நீ உலகுக்கு அளக்கிறாய்.
என் கடை விரித்துக் காத்திரு
வழி மேல் விழி வைத்து.
குரு மந்திர தாரணையாம்
மகாயோகத்தில் எப்போதும்
நீ அமர்ந்திரு.
கொள்ள வரும் உயிர்த்திரள்
அள்ளிச் செல்லும் என் பண்டம்.
நன்றியென்னும் நாணயத்தால்
உன்னகம் நிரம்பியே வழியும்.”

நானும்
“கடை விரித்திருக்கிறேன். கொள்வாருளர்.”
என்றே உமதுறுதிக்கு உறுதி சொல்லிக்
கடை விரித்துக் காத்திருக்கிறேன்.

“ஐயனே!
கடை விரித்தேன். கொள்வாரில்லை.
என்ற உம் பழைய வாக்கைப் பொய்யாக்கும்
இப்புதிய வாக்கை
ஏற்பாரோ, கொள்வாரோ?”
என்றே நான் தயங்கிய தருணத்தே
என்னை அணைத்து உறுதி சொன்னீர்.
“என் அன்பு மகனே!
என் வீடாம் இவ்வுலகின்கண் வாழும்
என் குடும்ப உயிர்த்திரள் மீது
நான் கொண்டிருக்கும் அன்பின் மிகுதியையே
நீயும் கொண்டிருப்பதை நன்கறிவேன்.
எனவே நீ துணிந்து சொன்ன
என் பழைய வாக்கைப் பொய்யாக்கும்
உன் புது வாக்கே
இனி என் புதிய ஏற்பாடு, அறிக
“நானே நீ, நீயே நான்” என்ற
ஒருமைப் பெரு நிலையில் ஓங்கி நின்று
என் புதிய ஏற்பாட்டை
உறுதியுடன் செயல்படுத்துவாயாக.”

உமது அருட்கொடையால் நீவிர் என்னை வாழ்வித்தே
உமது அருட்பணியை என் வாயிலாகச் செய்கிறீர்.
நானும்
“கடை விரித்திருக்கிறேன். கொள்வாருளர்.”
என்ற உம் புதிய ஏற்பாட்டை
உறுதியுடன் செயல்படுத்த
நற்றமிழ் வீதியில்
கடை விரித்துக் காத்திருக்கிறேன்
வழி மேல் விழி வைத்து,
குரு மந்திர தாரணையாம்
மகாயோகத்தில் எப்போதும் அமர்ந்தே.

வள்ளலாரின் வருகையை உறுதிப்படுத்தும் பாட்டு

மார்ச் 31, 2008

பூரணராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! தன்னிறைவுத்தன்மையை நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

சுயம்பிரகாசராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! சத் தர்ஷனமென்னும் தூய நோக்கை நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

பேருண்மையாளராய் நித்தியராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! நித்திய ஜீவனை நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

அமிர்தானந்தராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! ஆன்மநேய ஒருமையை நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

பேரன்பராய்ப் பேரருளாளராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! உம் இயல்பையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

பேரறிஞராய்ப் பேரறிவாளராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! உம் நிறைவையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

அருட்பெருவல்லபராம் சத்தியராய்ச் சத்தராய் சித்தியராயச் சித்தராய்ப் பூரணானந்தராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! உம் இருப்பையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

பெருங்குண தயாளராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! ஒருமை இறைநிலையாம் தனிப்பெருங்கருணையை நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

உள்ளொளி ஜோதியராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! ஒருமை ஒளிநெறியாம் அருட்பெருஞ்ஜோதியை நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

பெருநிலைக்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! ஒருமை உயிரியலாம் கடவுட்தன்மையை நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

அருட்பேரரசராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! உம் அவதார மகிமையை நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

நானே நானெனும் பூரணமாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! உமதெல்லா நலங்களோடும் வளங்களோடும் உம்fமையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

மெய்வழிப்பிராண நாதராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! என் வழியாக உம் மெய் விளங்க உம் ஜீவனையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!
திருவருட்பிரகாச வள்ளலாராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! சாகாக் கல்வியை நீரெனக்குத் தந்தீரே நன்றியே!
அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! நானே நீயாக நீயே நானாக ஒருமைப் பெருநிலையில் ஓங்கி நின்று எல்லா உயிர்களும் இன்புற்று வாழ உம்மையே அன்னை பூமிக்குத் தந்தீரே நன்றியே!

கோடானு கோடி நன்றியே! நீரெனக்குள் வந்தீரே நன்றியே!
கோடானு கோடி நன்றியே! உம்மையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

அலைமகளின் அருள்வாக்கு

மார்ச் 31, 2008

Mahalakshmi

என்னைப் போன்றே நீங்களும் தெய்வீகமானவரே!
என்னைப் போன்றே நீங்களும் வணக்கத்துக்குரியவரே!
என்னைப் போன்றே நீங்களும் வல்லமை மிக்கவரே!

எனக்கும் உமக்கும் இடையில் எந்தவொரு வேறுபாடும் இல்லை. இருந்ததுமில்லை. இருக்கப்போவதுமில்லை.

நாம் உருவத்தால் பெயரால் வெவ்வேறாகத் தோன்றினாலும், உருவத்துக்கும் பெயருக்கும் அப்பால் அருவ மெய்ப்பொருளாய் விளங்கும் ஒரே கடவுளிலிருந்தே உருவாகிறோம்.

அந்தக் கடவுளுக்கும் நமக்கும் இடையில் எந்தவொரு வேறுபாடும் இல்லை. இருந்ததுமில்லை. இருக்கப்போவதுமில்லை.

ஏனென்றால், நான் என்று நாம் ஒவ்வொருவரும் நம்மை அறியும் தன்னுணர்வாம் மெய்யுணர்வாகவே அந்தக் கடவுள் எங்கும் எதிலும் எப்போதும் இருக்கிறார்.

உருவமும் பெயரும் பெற்ற போது, நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறாகத் தோன்றும் அகந்தையாகிறோம், அகங்காரமாகிறோம்.
உருவற்ற பெயரற்ற, அகம் எனவும் அறியப்படும் நான் எனும் கடவுளின் நடனமே(தை) அகந்தை, காரமே அகங்காரம்.

விவரிக்க முடியாத உச்ச அதிர்வுகளில், நாம் ஒவ்வொருவரும் நானே. புலன்களுக்குப் பிடிபடும் குறைந்த அதிர்வுகளில், நானே வெவ்வேறாகத் தோன்றும் ஒவ்வொருவராயும் உருவாகிறேன்.

நானே என விளங்கும் ஒரே மெய்ப்பொருளின் அதிர்வுப் பரிமாற்றத்தாலேயே, வெவ்வேறாகத் தோன்றும் நாம் ஒவ்வொருவரும் உண்டாகிறோம்.

நானே என விளங்கும் ஒரே மெய்ப்பொருள் எங்கும் எப்போதும் பரிபூரணமாகவும், பரிசுத்தமாகவும், தன்னிறைவுத் தன்மையோடும் இருப்பதால், அம்மெய்ப்பொருளின் மிகச் சிறந்த வெளிப்பாடான நாம் ஒவ்வொருவரும் கூட எங்கும் எப்போதும் பரிபூரணமாகவும், பரிசுத்தமாகவும், தன்னிறைவுத் தன்மையோடும் இருக்கிறோம்.

இவ்வுண்மைக்கு மாறாக, நீங்கள் உம்மைக் கடவுளிலிருந்து மாறுபட்டவராகவும், அதனால் குறைபாடுள்ளவராகவும், மாசுள்ளவராகவும், அதனால் மற்றொன்றைச் சார்ந்தே வாழ வேண்டியவராகவும் கருதும் முற்றிலும் தவறான கண்ணோட்டமே, உமது எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம். இதை வேரோடு பிடுங்கி, கடவுளோடு வேறற ஒன்றி, என்னைப் போல் நித்திய ஜீவனில் நிலைபெற்று, என்னைப் போன்றே தெய்வீகப் பொலிவோடு அன்னை பூமியில் நீங்கள் ஒவ்வொருவரும் வளம் பல கண்டு வாழ்வீராக!

எனது இவ்வாஞ்சை, இதோ இங்கேயே இப்போதே, நிறைவேறும் பேரின்பத்தில் திளைத்தே, நான் எஞ்ஞான்றும் தியானத்தில் விழி திறந்து இன்புற்றிருக்கிறேன்.

திருஅருட்பிரகாச வள்ளலாரின் அமுதகானம்

மார்ச் 31, 2008

1. பூரணராய் உனக்குள் வந்தேன். தன்னிறைவுத்தன்மை உனக்குத் தந்தேன்.

2. சுயம்பிரகாசராய் உனக்குள் வந்தேன். சத் தர்ஷனமென்னும் தூய நோக்கை உனக்குத் தந்தேன்.

3. பேருண்மையாளராய் நித்தியராய் உனக்குள் வந்தேன். நித்திய ஜீவனை உனக்குத் தந்தேன்.

4. அமிர்தானந்தராய் உனக்குள் வந்தேன். ஆன்மநேய ஒருமை உனக்குத் தந்தேன்.

5. பேரன்பராய்ப் பேரருளாளராய் உனக்குள் வந்தேன். என் இயல்பையே உனக்குத் தந்தேன்.

6. பேரறிஞராய்ப் பேரறிவாளராய் உனக்குள் வந்தேன். என் நிறைவையே உனக்குத் தந்தேன்.

7. அருட்பெருவல்லபராம் சத்தியராய்ச் சத்தராய் சித்தியராயச் சித்தராய்ப் பூரணானந்தராய் உனக்குள் வந்தேன். என் இருப்பையே உனக்குத் தந்தேன்.

8. பெருங்குண தயாளராய் உனக்குள் வந்தேன். ஒருமை இறைநிலையாம் தனிப்பெருங்கருணை உனக்குத் தந்தேன்.

9. உள்ளொளி ஜோதியராய் உனக்குள் வந்தேன். ஒருமை ஒளiநெறியாம் அருட்பெருஞ்ஜோதியை உனக்குத் தந்தேன்.

10. பெருநிலைக்கடவுளாய் உனக்குள் வந்தேன். ஒருமை உயிரியலாம் கடவுட்தன்மை உனக்குத் தந்தேன்.

11. அருட்பேரரசராய் உனக்குள் வந்தேன். என் அவதார மகிமை உனக்குத் தந்தேன்.

12. நானே நானெனும் பூரணமாய் உனக்குள் வந்தேன். எனதெல்லா நலங்களோடும் வளங்களோடும் என்னையே உனக்குத் தந்தேன்.

13. மெய்வழிப்பிராண நாதராய் உனக்குள் வந்தேன். உன் வழியாக என் மெய் விளங்க என் ஜீவனையே உனக்குத் தந்தேன்.
திருவருட்பிரகாச வள்ளலாராய் உனக்குள் வந்தேன். சாகாக் கல்வியை உனக்குத் தந்தேன்.
அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். நானே நீயாக நீயே நானாக ஒருமைப் பெருநிலையில் ஓங்கி நின்று எல்லா உயிர்களும் இன்புற்று வாழ என்னையே அன்னை பூமிக்குத் தந்தேன்.