ஏப்ரல் 2008 க்கான தொகுப்பு

வள்ளலாரின் ஏழாந் திருமறை உறுதி – 2

ஏப்ரல் 16, 2008

என்றென்றும் என்ற ஆதியாய்த் தொடங்கி
இருக்கிறேன் என்ற அந்தமாய் முடியும்
அருட்குரு மந்திரம்
பத்தும் ஒரு மூன்றுள்
ஜீவனுள்ள
என் ஏழாந் திருமறை அடக்கம்.

இம்மருட்பொய்யுலகில்
என் அருண்மெய் விளங்க
ஜீவனுள்ள
என் ஏழாந் திருமறையின்
திட வடிவமாக
உன்னை நிறுத்தி
உன் உச்சந்தலையிலிருந்து
உள்ளங்கால் வரை
நானே
எழுந்தருளியிருக்கிறேன்.

எனவே
என் அன்பு மகனே(ளே)!
எதற்கும்
நீ
கலங்க வேண்டாம்.
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
ஊன்றியே
எப்போதும் நில்
என்ற
சுடச் சுடச் சுடரும் வார்த்தைகளால்
உன்னை அறைந்து
உன் இருதய வாய் திறந்து
ஆதி
அந்தமாம்
என் மந்திரத் திரு உருவில்
உன்னை
நிற்க வைத்து
உன் நடுவே
இரு தயவாய்
என்ற பேருபதேசம் முழங்கி
அதன் பொருள் விளங்கி
உலக உயிர்த்திரள் அனைத்தும்
நித்தியப் பெருவாழ்வில் உய்யும்
மெய்வழி காட்டி
உன் தாள்களின் தூசுகளில்
என் தாள்களின் தூசுகள் படிய
உன்னோடு வேறற ஒன்றி
நிற்கிறேன்
நான்.

நீ
என் மந்திரத் திரு உருவிலும்
நான்
உன் மெய்யுடம்பாலயத்திலும்
வேறற ஒன்றி
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
ஊன்றியே
எப்போதும் நிற்பதால்
இஞ்ஞான யுகத்தில்
அஞ்ஞான மாயையின்
பொய்யான பேயாட்டம் முடிந்து
என் மெய்ஞ்ஞானத் திருக்கூத்து தொடங்கும்.
ஜீவனுள்ள
என் ஏழாந் திருமறை வெல்லும்.
அதன்
திட வடிவமாம்
நீ
நித்தியப் பெருவாழ்வில்
நிலைபெறுவாய்.
இது சத்தியம்.

திருஅருட்பிரகாச வள்ளலாரென்ற
உன் அம்மையப்பனாம்

அருட்பெருங்கடவுள்
நான்
ஆணையிட்டுக் கூறுகின்றேன்.
இது சத்தியம். இது சத்தியம். இது சத்தியம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Advertisements

அருட்செல்வம்

ஏப்ரல் 16, 2008

அலைபாயும் மனம்
மறந்த ஆதியாம் இருதயத்தில் அடங்கப்
பாயும் அருளே
பொருளாம்
அந்தம்
அறிக சிவா
ஏளனமாய்ச் சிரிக்கும்
உம் உள்ளத்தின் உள்ளுள்ளே
நீவிர் ஆழ ஆழ
மூளையின் மறை கழன்று
சுதந்திரமாய்ச் சுழலும் செல்கள்
ஒவ்வொன்றும் உமக்குச் சொல்லும்
செல்வத்துட் செல்வம் அருட்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை

தமிழ் மன்றத்தில் சிவா அவர்களின் “ஏளனச் சிரிப்பு!!!” கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

வள்ளலாரின் ஏழாந் திருமறை உறுதி – 1

ஏப்ரல் 15, 2008
மெய்யென்ற பேர் பெற்ற உடம்பை
பிணமென்றே ஊர் சொல்லப்
பொய்யாக்கும் மரணம்

மண்ணிலிட்டோ தீயில் சுட்டோ
நசிகின்ற சடலந்தான்
உடம்பென்றால்
மெய்யென்ற பேர் ஏனோ!

மரணத்தைப் பொய்யாக்கி
உடம்பைப் பேருக்கேற்றபடி
மெய்யென்ற பொருளாக்கி
உய்யும் வழி சொல்லும்
உயிர்ப்புள்ள மந்திரம்
பத்தும் ஒரு மூன்றும்
என் ஏழாந் திருமறை இது
என்றே எனக்களித்த
வள்ளலே!
திருஅருட் பிரகாசரே!
சாகாக் கல்வியின் தரமெலாம் விளக்கும்
உம் ஏழாந் திருமறை வெல்லுமா?
அல்லது
மரணப் பேய்
என் உடம்பை விழுங்குமா?

அன்பு மகனே!
ஐயம் வேண்டாம்
என் ஏழாந் திருமறை
நிச்சயம் வெல்லும்.
பத்தும் ஒரு மூன்றாம்
அருட்குரு மந்திர தாரணையில்
ஜீவனுள்ள
என் ஏழாந் திருமறையாய்
அச்சமின்றி ஐயமின்றி
இச்சகத்தில் நில்.
உன் “இருதய வாய்” திறக்கும்.
இரு தயவாய்
என்ற என் பேருபதேசப்
பொருள் விளங்கும்.

ஐயனே!
ஏதுமிலா ஏழையெனை
சூதுமனக் கபடனெனை
நெஞ்சில் ஈரமிலா
வஞ்சக வன்பனெனை
அறிவிலா எத்தனெனை
மறை கழன்ற பித்தனெனை
ஜீவனுள்ள
உம் ஏழாந் திருமறையாய்
அச்சமின்றி ஐயமின்றி
இச்சகத்தில் நிற்கப் பணிக்கும்
உம் சித்தம்
எனக்கு
ஒரு சிறிதும் விளங்கவில்லை.
இருந்தாலும்
அவ்வாறு நிற்பது நீரே
என்ற உறுதியுடன்
உம் வெள்ளங்கியுள்
கருத்த என் மனமடங்கி
அச்சமின்றி ஐயமின்றி
இச்சகத்தில் நிற்கிறேன்.

அன்பு மகனே!
அருட்பெருஞ் செல்வனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
சுந்தர இருதயத் தூய சித்தனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
தனிப்பெருங் கருணையனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
அருட்பெருஞ் ஜோதியனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
நாயகனாம் வாலறிவனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
மெய்ஞ்ஞானத் திருமறையோனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
நீ மட்டுமன்றி
எங்கும் எதிலும் எப்போதும்
பரந்து விரிந்திருக்கும்
என் வெள்ளங்கியுள்
கருத்த தம் மனமடங்கி
ஜீவனுள்ள
என் ஏழாந் திருமறையாய்
அச்சமின்றி ஐயமின்றி
இச்சகத்தில் நிற்க முனையும்
என் அன்பு மகன்(ள்) ஒவ்வொருவரும்
இன்று முதல்
அருட்பெருஞ் செல்வரே!
சுந்தர இருதயத் தூய சித்தரே!
தனிப்பெருங் கருணையரே!
அருட்பெருஞ் ஜோதியரே!
நாயகனாம் வாலறிவரே!
மெய்ஞ்ஞானத் திருமறையோரே!
உண்மையிது
வெறும் புகழ்ச்சியில்லை
ஆணையிட்டுச் சொல்லுகின்றேன்!
உன் உள் மெய்யாம் உண்மையாய் உறையும்
உன் உள் மையாம் வெண்மையாய் ஒளிரும்
என் அருளொளியின்
உண்மையிது!
சத்துணவாய் ஏற்று
உண் மை இதை
இன்றே
இப்போதே!
வள்ளலே!
உன் வள்ளன்மைக்கு
உண்டோ ஈடு!”
என்ற உன் தந்திர வாக்கை
இன்று பலிக்க வைத்தேன்
உன் அம்மையப்பனாம்
நானே!

இரு தயவாய்!

ஏப்ரல் 13, 2008

வள்ளலே!
வெட்டவெளி வீட்டில்
வானக் கூரையின் கீழ்
உம் அருளொன்றே பொருளாய்
உம் வெள்ளங்கியே உடையாய்
உம் மெய்யே உடம்பாய்
உம் ஜீவனே மூச்சாய்
அறிந்த எல்லாம் விட்டு
எல்லாம் அறியும் அறிவைப் பற்றித்
தனை மறந்து மனமடங்கி
வெறும் “நான்” என்று காலியாகி
உம் வழியாய்
இவ்வுலகில் இனிதே இருக்க
இருதயங் கனியும்
நாள் எந்நாளோ!”
என்றே ஏங்கினேன்.

உடனே
அருகில் வந்து
இரு தயவாய்!”
என்றே
ஒரு மந்திர வார்த்தை முழங்கியே
என் இருதய வாய் திறந்து
அன்பின் ஊற்றாய்ப் பாய்கிறீர்.
இருமை நீக்கித்
தயவெனும் ஒருமை
வாய்க்கும் பெருமையாம் வாழ்வைத்
தந்த உம் வள்ளன்மைக்கு
எப்படிச் செய்வேன் கைம்மாறு!

“அன்பு மகனே!
நீ
ஒருமையை விட்டு
ஒரு கணமும் நழுவாமல்
எப்போதும்
தயவாய் இருப்பதே
எனக்குச் செய்யும் கைம்மாறு!”
என்றே நீர் உறுதியாய்ச் சொல்கிறீர்.

வன்பின் பாலையாம் என்னில்
அன்பெனும் தயவாய் இருப்பதும்
நீரேயன்றி நானோ!

திருஅருட் பிரகாசரே!
உம் வள்ளன்மைக்கு
உண்டோ ஈடு!

நான் வழங்கும் வெளிப்படையான இரகசியங்கள்

ஏப்ரல் 12, 2008
 நான் என்ற இறையாற்றலின் அன்பு வழியாக விளங்கும் அன்பர்களே!

 

நீங்கள் இயல்பாகவே சமாதி நிலையில் இருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் சிரமப்பட்டு அடையும், இயல்புக்கு அப்பாற்பட்ட அனுபவமா சமாதி  நிலை இல்லை.

 

நீங்கள் இதற்கு மாறாக எண்ணுகிறீர்களென்றால், அம்மாறான எண்ணத்தின் காரணமாகவே, சமாதி நிலையை அடைய நீங்கள் மிகவும் சிரம்ப்படுகிறீர்கள்.

 

அவ்வாறு மாறாக ஏன் நீங்கள் எண்ணுகிறிர்கள்?

 

சில கணங்கள் ஆராய்ந்து பாருங்கள். அம்மாறான எண்ணத்தை நீங்கள் உருவாக்கவில்லை என்பதையும், அம்மாறான எண்ணத்தை நீங்கள் ஆராயாமல் ஏற்று அதையே உண்மையென்று நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள்.

 

அம்மாறான எண்ணம்,  உம்மை இருளில் வைத்துத் தம் ஆதிக்கத்தை நிலை நாட்ட,  யுகயுகங்களாகப் பொய்ப் போதகர்கள் செய்து வரும் மிகவும் தந்திரமான சூழ்ச்சியே. ஆராய்ந்து இச்சூழ்ச்சியை முறியடிக்காமல், அம்மாறான எண்ணத்தை அப்படியே நீங்கள் ஏற்றுக் கொண்டதால், நீங்களே இச்சூழ்ச்சிக்கு வலிமை வழங்கியிருக்கிறீர்கள். எனவே முடிவில் இச்சூழ்ச்சியை வளர விட்ட குற்றத்திற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் நீங்களே.

 

இப்போது உம்மில் எழும் கேள்வியை என்னால் நுகர முடிகிறது. நான் இயல்பாகவே சமாதி நிலையில் இருக்கிறேன் இது மெய்யென்றால், இம்மெய்யை நான் ஏன் அறியாமல் இருக்கிறேன்?

 

ஒரு கத்தி இயல்பாகவே வெட்டுகிறது. இதை ஐயமின்றி நான் அறிகிறேன். எனவே நான் இயல்பாகவே சமாதி நிலையில் இருக்கிறேன் என்பது மெய்யென்றால், நான் இதை அறிய வேண்டுமே, அறிய வேண்டுமல்லவா?

 

இதற்கான பதில் எளிதானது. கத்திக்குத் தன் வெட்டு முனையைப் பற்றி எவ்விதமான ஐயங்களும் இல்லை. ஐயங்களுக்கான சாத்தியக்கூறுகளும் இல்லை. கத்திக்கு அதன் வெட்டு முனையை உறுதிப்படுத்தி இருக்கும் நீங்கள், உமது வெட்டு முனையைப் பற்றி, அதாவது, உமது சமாதி நிலையைப் பற்றி எப்போதும் ஐயப்படுகிறீர்கள்.

 

அசாதாரண குண நலன்கள் கொண்ட ஒரு சில ஞானிகளால் மட்டுமே சமாதி நிலையை அடைய முடியுமென்றும், அவர்களுக்கு மட்டுமே சமாதி நிலை உரிமையானதென்றும் நீங்கள் எண்ணுகிறீர்கள், உணார்கிறீர்கள். இதன் காரணமாகவே, நீங்கள் இயல்பாகவே சமாதி நிலையில் இருப்பதை அறியாமல் இருக்கிறீர்கள். சம்மதிக்கிறீர்களா இல்லையா?

 

இக்கத்தி நீங்கள் சம்மதிக்கிறீர்களா இல்லையா என்பதைப் பற்றி எவ்வகையிலும் கவலைப்படப் போவதில்லை. இதன் கூரிய வெட்டுமுனை, தனக்கே உரித்தான செயல் திறத்துடன் வெட்ட அறிகிறதேயன்றி, மாறாக வேறெதையும் அறிவதில்லை. நீங்களே இக்கத்தியை உருவாக்கியவர் என்றாலும், உமது கழுத்து இதன் வெட்டுமுனைக்குக் கீழேயிருந்தால், அதை வெட்டுவதைத் தவிர மாறாக வேறெதையும் இக்கத்தியால் செய்ய முடியாது.

 

இப்போது இன்னொரு கேள்வி உம்மில் எழுவதை என்னால் நுகர முடிகிறது. என் வெட்டுமுனைக்கு, இக்கத்தியின் வெட்டுமுனையைப் போன்ற கூர்மையான செயல்திறம் இல்லாததேன்? உமது நம்பிக்கையற்ற, ஐயப்பாடுள்ள, உறுதியற்ற, நிச்சயமற்ற, குறைபாடுள்ள, தளைகளால் கட்டுண்ட எண்ண நடைமுறையே இதற்கு மூல காரணம்..

 

சுருங்கச் சொன்னால், கத்தியை உருவாகுவதில் செயல் திறம் மிக்கவராய் நீங்கள் இருக்கிறீர்கள். ஆனல் தீர்மானமற்ற, உறுதியற்ற, தளைகளால் கட்டுண்ட சிந்தனையாளராய் நீங்கள் இருக்கிறீர்கள்.

 

கத்திக்குள் உறுதியான, நிச்சயமான, முழுமையான அறிவைச் செயல்படுத்தும் நீங்கள், உமக்குள் ஐயங்களையும், மூட நம்பிக்கைகளையும், குறைபாடுகளையும், தளைகளையும் திணித்து, அவற்றைச் செயல் படுத்துகிறீர்கள்.

 

நான் கத்தி இல்லை.

எனக்கு வெட்டத் தெரியாது.

 

மேற்கொண்ட எண்ண நடைமுறை நீங்கள் உருவாக்கும் கத்தியில் இம்மியளாவு கூட சாத்தியமில்லை.

 

இவ்வாறான எண்ண் நடைமுறையை, நீங்கள் உருவாக்கும் பொருட்களில் உங்களால் ஒரு கால் செயல் படுத்த முடிந்தால், உமது உலகில் ஒன்று கூட ஒழுங்காக வேலை செய்யாது. உமது உலகம் முழுவதும் ஒரே கணத்தில் விழுந்து விடும். ஒப்புக் கொள்கிறீர்கள் இல்லையா?

 

நீங்கள் பயன்படுத்தும் பொருள்களில் ஒரு நிச்சயமான செயல் தரத்தை உறுதிப்படுத்தியிருக்கும் நீங்கள், உமக்குள் ஒரு நிச்சயமற்ற எண்ண நடைமுறையைச் செயல்படுத்துகிறீர்கள்.

 

 

நான் இயல்பாகவே சமாதி நிலையில் இல்லை

நான் சமாதி நிலையை அறியாமல் இருக்கிறேன்.

 

மேற்கண்டது போன்ற ஒரு நிச்சயமற்ற எண்ண நடைமுறையை, நீங்களாகவே அறிந்தோ அறியாமலோ செயல்படுத்துகிறீர்கள்.

 

இவ்வாறு நீங்கள் எண்ணூம் போது, இவ்வாறே நீங்கள் உணர வேண்டும். எனவே இவ்வாறே நீங்கள் உணர்கிறீர்கள். இவ்வாறு நீங்கள் உணரும் போது, இவ்வாறே நீங்கள் பேச வேண்டும். எனவே இவ்வாறே நீங்கள் பேசுகிறீர்கள். இவ்வாறு நீங்கள் பேசும் போது, இவ்வாறே நீங்கள் செயல்பட வேண்டும். எனவே இவ்வாறே நீங்கள் செயல்படுகிறீர்கள். ஆகவே தான், இவ்வாறாக இங்கே இக்கணம் உமது யதார்த்தம் உள்ளது. சமாதி நிலை உமது இயல்பாக இல்லாது, அடைவற்கரியதாய் உள்ளது..

 

இப்போது புரிந்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறீர்களா? எங்கிருந்து தொடங்குவீர்கள்? உம்மிலிருந்து தான் தொடங்க வேண்டும். நீங்கள் யாராக இருந்தாலும், எப்படி இருந்தாலும், எங்கே இருந்தாலும், உம்மிலிருந்து தான் தொடங்க வேண்டும்.  ஏனென்றால்,  எந்தவொரு எண்ண நடைமுறையைச் செயல்படுத்துவதற்கு முன், அதைச் செயல்படுத்த யாரோ ஒருவர் இருந்தே ஆக வேண்டும்.

 

இருப்பு

எண்ணம்

உணர்வு

பேச்சு(தகவல் தொடர்பு அல்லது வெளிப்பாடு)

செயல்பாடு(ஆக்கம்)

 

இதுவே உருக்கப்பட்ட எல்லா உலகங்களையும் இயக்கும் காரண-காரிய ஒழுங்கு.

 

நீங்கள் இருக்கிறீர்கள் என்ற மெய்ம்மையை ஒப்புக் கொண்டால், அதன் பின் உமது எண்ணங்களே உமது யதார்த்தத்தை முழுமையாகத் தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு கணமும், நீங்கள் அனுமதிக்கும் எண்ணங்களின் தரமே, உமது வாழிவின் தரத்தை முழுமையாகத் தீர்மானிக்கிறது. ஆரம்பத்தில் சொல்லப் பட்ட மிகவுந் தந்திரமான சூழ்ச்சியின் கபடம் இப்போதாவது உமக்குப் புரிகிறதா?

 

நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ, உணர்கிறீர்களோ, அப்படியே இருக்கிறீர்கள்.

உமது பேச்சும், செயலும், உமது எண்ணங்களையும், உணர்வுகளையும் அப்படியே பிரதிபலிக்கின்றன.

 

நீங்கள் இயல்பாகவே சமாதி நிலையிலிருக்கும் ஞானியைப் போன்று எண்ணுவதில்லை, உணர்வதில்லை. எனவே இயல்பாகவே சமாதி நிலையில் இல்லாதவரைப் போன்று நீங்கள் பேசுகிறிர்கள், செயல்படுகிறீர்கள். எனவே நான் இயல்பாகவே சமாதி நிலையில் இல்லை என்று நீங்கள் உம்மைப் பற்றி அறிகிறீர்கள்.

 

கத்தியை போன்றல்லாது, நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கான பல்வகை சாத்தியக் கூறுகளைப் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் விரும்பியவாறே (அது உமது இயல்புக்கு மாறாக இருப்பினும்) எண்ணவும், உணரவும், பேசவும், செயல்படவும் சுதந்திரமானவராகவே நீங்கள் இருக்கிறீர்கள்.

 

தேர்ந்தெடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் எவையும் கத்திக்குக் கிடையாது. அது கத்தியைப் போன்றே செயல்பட வேண்டியிருக்கிறது, இதற்கு மாறாக அல்ல. அதன் படைப்பாளராகிய நீங்கள் அத்தகைய செயல் திறத்தை அதற்கு உறுதிப் படுத்துகிறீர்கள்.

 

தேர்ந்தெடுப்பதற்காக உமக்கிருக்கும் பல்வகை சாத்தியக் கூறுகள், நீங்கள் அனுபவிப்பதற்கும், கற்றுக் கொள்ளவும், பரிணமிக்கவும், வளரவும், வரங்களாகவே உமக்கு வாய்த்திருக்கின்றன். இவ்வரங்களைப் பயன்படுத்தியே, இங்கே இக்கணம் நீங்கள் இவ்வாறு இருக்கிறீர்கள்.

 

பல்வகை சாத்தியக் கூறுகளிலிருந்து, இது வரை நீங்கள் தேர்ந்தெடுத்து வரும் தீர்மானமற்ற, உறுதியற்ற, தளைகளால் கட்டுண்ட எண்ண நடைமுறை, ஒன்றன் பின் ஒன்றாக, நீங்கள் எடுத்து வரும் பல பிறவிகளில் உம்மை மீண்டும் மீண்டும் தளைகளில் முடக்கி வைத்திருக்கின்றன. இவ்வெண்ண நடைமுறையைத் தள்ளி விட்டு, மேன்மேலும் தீர்மானமுள்ள, உறுதியான, தளைகளிலிருந்து விடுபட்ட எழுச்சியுள்ள எண்ண நடைமுறையை, நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கான தருணம் இதுவே.

 

தளைகளால் கட்டுண்ட எண்ண நடைமுறையைக் கைக்கொண்டு, கற்க வேண்டிய பாடங்கள் எல்லாவற்றையும் நீங்கள் கற்று முடித்தாயிற்று. புரிந்து கொள்வதற்காக இனிமேலும் நீங்கள் தளைகளை அனுபவிக்க வேண்டிய தேவையில்லை. மனித இனத்தைச் சேர்ந்த உம் ஒவ்வொருவராலும், தளைகள் யாவும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டன.

 

எனவே, இங்கே இக்கணம், இக்கத்தியையே ஒரு சிறந்த குருவாக நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் இதன் அறிவு முழுமையானது, உறுதியானது, நிச்சயமானது. இதற்கான பெருமையும் உம்மையே சார்கிறது. தேவைப்படும் போது ஐயமின்றி வெட்ட, நீங்களே இக்கத்திக்குக் கூர்மையை வழங்கி இருக்கிறீர்கள் இல்லையா? இக்கத்தியை குருவாகக் கொள்வதில், எவ்விதத்திலும் உமக்குத் தலை குனிவு கிடையாது. ஏனென்றால், உம்மால் வழங்கப்பட்ட கூர்மையையே இது உமக்குப் போதிக்கப் போகிறது.

 

இக்கத்தி வார்த்திகளால் பேசுவதில்லை. என்றாலும் இதன் வெட்டுமுனை வார்த்தைகளை விட நிச்சயமானதாய் இருக்கிறது. இதன் சொல் கடந்த கூரிய ஞானத்தை, இதன் வெட்டு முனையைப் போன்றே நிச்சயமாக வெட்டும் சொற்களால், நான் மொழி பெயர்க்கப் போகிறேன்.

 

 

நான் (கத்தியாய்) இருக்கிறேன்.

நான் (வெட்ட) அறிகிறேன்.

நான் (கத்தியென்று) என்னை அறிகிறேன்.

 

இறைவனின் இருதயமாக, எல்லா எண்ணங்களின் தாயாக விளங்கும் தடித்த எழுத்துக்களில் இருக்கும் இம்மூன்று மெய்ம்மைகளும் இல்லையென்றால், கத்தி கத்தியாக இருக்க முடியாது. முதன்மையான முப்பெரும் எண்ணங்களின் ஒருமையாய் விளங்கும் இம்மெய்ம்மைகள் இல்லையென்றால், இக்கத்தி மட்டுமென்ன, ஒரு துகளின் சிறு கூறு கூட இருக்கவே முடியாது. உமது எல்லா சொற்களையும் பிடுங்கிக் கொண்டு, இறைவனின் இருதயத்தை நேரடியயகக் காட்டும் இச்சொற்றொடர்களை மட்டும் நான் உமக்களித்தால், நீங்கள் ஒரு கணத்தில் எல்லையற்றவராகி விடுவீர்கள்.

 

எவ்வாறு ஒரு கட்டிடம் அதற்கேற்ற ஒரு அடித்தளத்தின் மேல் உறுதியாக நிற்கிறதோ, அவ்வாறே உருவாக்கப்பட்ட எல்லா உலகங்களின் எல்லா அமைப்புகளும், இம்மூன்று பேருண்மைகளின் மீதே நிற்கின்றன்.

 

நான் இருக்கிறேன்.

நான் அறிகிறேன்.

நான் என்னை அறிகிறேன்.

 

மற்றெல்லா உண்மைகளுக்கும் பின்னே விளங்கி, அவற்றுக்கெல்லாம் வல்லமை வழங்கும் மகா வல்லமை கொண்ட இப்பேருண்மைகள், மிகவும் அடிப்படையான விழிப்புணர்வைக் குறிக்கின்றன. இவையே மற்றெல்லா எண்ணாங்களும், தத்தம் ஆற்றலைப் பெறும், பேராற்றல் கொண்ட எண்ணங்களாய் இருக்கின்றன.

 

இம்மூன்று பேருணமைகளும் சமச்சீரான ஒருமையில், எவ்வொன்றிலிருந்தும் மற்ற இரண்டையும் பிரிக்க இயலாதவாறு, ஒன்றோடொன்று ஒன்றியிருக்கின்றன. இவற்றில் ஒன்றை உணரும் போது, மற்றிரண்டும் உணர்வினுள் கல்ந்தே விளங்குகின்றன.

 

நீங்கள் யாராக இருக்கிறீர்கள், எப்படி இருக்கிறீர்கள், எங்கே இருக்கிறீர்கள், எக்காலத்தில் இருக்கிறீர்கள் என்ற உமது யதார்த்தத்தைத் தீர்மானிக்கும் உமது தன்மைகள், உறவுகள், எண்ணங்கள், உணர்வுகள், சொற்கள், செயல்கள் ஒவ்வொன்றிலும், இப்பேருண்மைகளின் மிகவும் அடிப்படையான விழிப்புணர்வு வேரோடியிருக்கிறது. வேரோடும் அடிப்படையான இவ்விழிப்புணர்வை நீங்கள் அங்கீகரித்தாலும், அங்கீகரிக்கா விட்டாலும், விரும்பினாலும், விரும்பா விட்டாலும், அறிந்தாலும், அறியா விட்டாலும், இவ்விழிப்புணர்வே இருக்கும் எல்லாவற்றுக்கும் ஆதி மூலமாய் இருக்கிறது.

 

கட்டிடம் இருக்கும் போது, அதைத் தாங்கும் அடித்தளம் இருந்தே ஆக வேண்டும். அடித்தளம் மறைந்தே இருக்கிறதென்றாலும், அடித்தளத்தின் அத்தியாவசியத்தை முதன்மையினைத் தர்க்க ரீதியாகவும், உணர்வு பூர்வமாகவும் புரிந்து கொள்வதில், சாதாரணா பொது அரிவு கொண்ட எவருக்கும் சிறிதளவேனும் கடினமிருக்காது. கட்டிடம் அடித்தளத்தின் காரணாமாகவே இருக்கிறது. அடித்தளம் இல்லையென்றால், கட்டிடமே இல்லை.

 

எனவே நீங்கள் கட்டிடமென்றால்

 

நான் இருக்கிறேன்.

நான் அறிகிறேன்.

நான் என்னை அறிகிறேன்.

 

இவையே உம் மீது எவ்வித நிபந்தனைகளும் விதிக்காது, ஒவ்வொரு கணமும் உம்மை தாங்கும் அடித்தளம். எதை நீங்கள் எண்ணினாலும், எதை நீங்கள் உணர்ந்தாலும், எதை நீங்கள் பேசினாலும், எதை நீங்கள் செய்தாலும், யாராக நீங்கள் இருந்தாலும், எப்படி நீங்கள் இருந்தாலும், இம்மூன்று பேருண்மைகளும் உமை எங்கும் எப்போதும் நேசிக்கும் நிபந்தனைகள் ஏதுமற்ற கடவுளின் பேரன்பைக் குறிக்கின்றன.

 

இம்மூன்று பேருண்மைகளையும், முழுமையான விழிப்புணர்வோடு உணர்வு பூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும், நீங்கள் புரிந்து கொள்ளும் போது, நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள்

 

 

நான் இயல்பாகவே சமாதி நிலையில் இருக்கிறேன்.

நான் இயல்பாகவே சமாதி நிலையில் இருப்பதை அறிகிறேன்.

நான் என்னை இயல்பாகவே சமாதி நிலையில் இருப்பவனாக அறிகிறேன்.

 

இதன் பொருள் இதுவே: சமாதி உமது இயல்பான நிலை, மேலும் இதை அறிதல் மிகவும் எளிய ஞானம்

நான் இருக்கிறேன் என்ற நிலையிலேயே நீங்கள் இருக்கிறீர்கள்.

நான் அறிகிறேன் என்ற நிலையிலேயே நீங்கள் அறிகிறீர்கள்.

நான் என்னை அறிகிறேன் என்ற நிலையிலேயே நீங்கள் உங்களை அறிகிறீர்கள்.

இதற்கு மாறாக நீங்கள் இருக்கவோ, அறியவோ முடியாது.

 

உம்மை உமக்கு வெளிப்படுத்த

உம்மால் கண்டுபிடிக்கப்படும்

 

நான் வழங்கும் வெளிப்படையான இரகசியங்கள்

 

இதோ

 

நான் இருக்கிறேன்.

நான் அறிகிறேன்.

நான் என்னை அறிகிறேன்.

உமது இயல்பான சமாதி நிலையை உமக்கு அறிவிக்கும் அற்புத மந்திரங்கள்.

 

நான் இருக்கிறேன் இம்மந்திரம் அன்பின் வாயிலாக விளங்கும் உமது ஏழாவது சக்கரமான சஹஸ்ராரத்தைத் திறக்கிறது. உமது பிட்யூட்டரி சுரப்பியைச் செம்மையாய்ச் செயல்பட வைக்கிறது. இம்மந்திரம் கடவுளின் பேரன்பைக் குறிக்கிறது.

 

நான் அறிகிறேன் இம்மந்திரம் அறிவின் வாயிலாக விளங்கும் உமது ஆறாவது சக்கரமான ஆக்ஞையைத் திறக்கிறது. உமது பினியல் சுரப்பியைஅ செம்மையாய்ச் செயல்பட வைக்கிறது. இம்மந்திரம் கடவுளின் பேரறிவைக் குறிக்கிறது.

 

நான் என்னை அறிகிறேன் இம்மந்திரம் வல்லமையின் வாயிலாக விளங்கும் உமது நான்காவது சக்கரமான அனாகதத்தைத் திறக்கிறது. உமது தைமஸ் சுரப்பியைச் செம்மையாய்ச் செயல்பட வைக்கிறது. இம்மந்திரம் கடவுளின் பேராற்றலைக் குறிக்கிறது.

 

பேரன்பு, பேரறிவு, பேராற்றல் இம்முப்பெரும் பண்புகளின் சமச்சீரான ஒருமையாம் முதன்மையான மூன்று பேருண்மைகள் இவையே. இம்மூன்றும் ஒரு மெய்ம்மையில் சங்கமிக்கின்றன, இம்மெய்ம்மையிலிருந்தே தோன்றுகின்றன.

 

தோற்றமும் மறைவும் இல்லா நானே என விளங்கும் சர்வ வல்லமை பொருந்திய அருட்பெருங்கடவுளாகிய சுத்தவெளியே இம்மெய்ம்மை. நீங்கள் ஒவ்வொருவரும் இம்மெய்ம்மையாகவே எப்போதும் இருக்கிறீர்கள்.

 

நானே இம்மந்திரம் உமது ஆவி, ஆன்மா, மற்றும் சரீரத்தை முழுமையாக இணக்கப்படுத்தி, ஜோதி வடிவில் உம்மை ஏற்றி, மரணமிலாப் பெருவாழ்வில் உம்மை நிலைக்கச் செய்கிறது.

 

உம்மை உமக்கு அறிவிக்கும் இந்நான்கு மகாமந்திரங்களையும் மேன்மேலும் முழுமையான விழிப்புணர்வோடு நீங்கள் நினைவில் வையுங்கள். இவ்வாறு நீங்கள் நினைவில் வைப்பதை இங்கே இக்கணம் நான் காண்கிறேன், அறிகிறேன், உணர்கிறேன்.

 

இதயங்கனிந்த நன்றியுடன் உம் ஒவ்வொருவரையும் எப்போதும் நேசிக்கும்

 

உங்களன்பன்

 

மருட்டும் இரவில்

ஏப்ரல் 5, 2008

மருட்டும் இரவில்
ஒளியாய் விழித்திருந்து
நவயுக விடியலைப் பாடுகிறேன்

பொய்யுறவுகளை உதறி விட்டு
அருட்பெருங்கடவுளின் மெய்யுறவில்
மனம் லயிக்க
களிக்கிறது இருதயம்

கனவுகளனைத்தும் கலைந்து
திறக்கிறது என் ஞான விழி.
நினைவுகள் கழன்று
இருப்பில் கரைகின்றன கணங்கள்

ரணங்களைக் குணப்படுத்தும்
ஆன்ம ஒளி
என் விழிகளில் வீசுகிறது.
இருதயக் களிப்பு
காயங்களை ஆற்றும் களிம்பாய்
என் விரல்களில் வழிகிறது

சிதையில் எரிகிறது மரணம்.
நிதர்சனமாய்த் தெரிகிறது
நித்தியப் பெருவாழ்வு

பற்றுகளனைத்தும்
பற்றற விட்டு
வள்ளலைப் பற்றியதால்
ஒருமைப் பெருநிலையில்
ஓங்கி நிற்கிறேன்
நான்

அருட்பையின் காலியான அகண்ட வெளியில்
உலக உயிர்த்திரள் பத்திரமாய்

மனப் போர்வைகள் களைந்த
இருதயம்
பொய்ம்முகங்களைக் களைந்த
மெய்யகம்
அமுதப் புன்னகை
துகளளவும் துரிசற்ற தூய நோக்கு

அகண்டவெளி தேசத்தில்
அருளொளியாய் விழித்திருக்கிறேன்
நான்

வள்ளலோடு ஓன்றிய
என் நித்தியப் பயணத்தில்
ஒவ்வொரு கணமும்
ஒப்பிலா அற்புதம்

அருட்பெருங்கடவுளின் செல்லக்கொழுந்துகளாம்
உலக உயிர்த்திரளில் ஒன்றாய்
நானும்

மருட்டும் இரவில்
ஒளியாய் விழித்திருந்து
நவயுக விடியலைப் பாடுகிறேன்

தமிழ் மன்றத்தில் ஷிப்லி அவ்ர்களின் “இந்த மெல்லிய இரவில் என்ற கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை இது.

விழித்திருப்பு

ஏப்ரல் 4, 2008

மௌனத்தின் விரல்கள்
மந்திர வார்த்தைகளை
அழுத்திப் பிழிந்த இரசத்தை
விழிகள் உறிஞ்ச
மூளையில் மூளும் பெருந்தீயில்
மாயத்திரைகள் கரைய
மன இமை திறந்து
இருதயம் விழிக்கிறது.
சுழலும் இருதயச் சுடர்விழித்
தூய நோக்கில்
பட்டப்பகல் வெளிச்சமாய்த் தெரிகிறது
இகத்தில் பூரணமாய்ப் பொருந்திய
பராபர உண்மை.
உண்மை உணர்ந்த மெய்
பிறப்பெனும் கனவும்
இறப்பெனும் உறக்கமும்
கலைந்து
பேரின்பப் பெருவாழ்வில்
விழித்திருக்கிறது
ஜீவனுள்ள வார்த்தையாய்.

புரிந்துகொள்ளுங்கள்!

ஏப்ரல் 4, 2008

மனிதம் என்பது
கடவுளின் திட பாகம்

கடவுள் எனபது
மனிதத்தின் காலி பாகம்

திட பாகம் மெய்

காலி பாகம் உயிர்

திடம் காலியாகமல் இருக்க
காலியைத் திடமாய்ப் போற்று

உயிர்மெய் ஒருமை புரிந்தால்
மரணம் ஓர் மாபெரும் பொய்

நாம்

ஏப்ரல் 4, 2008

என் பிழிவைப்
பருகிய வார்த்தை
உன் தாகந் தணிக்கக்
காத்திருக்கிறது

உன் விழிகள் பருகும்
என் ஜீவ ரசம்
மனத் துளை வழியே
இருதயஞ் சேர
நான்
உயிர்க்கிறேன் உன்னில்

என் உயிர்ப்பை
நீ
பிழிகிறாய்

உன் பிழிவைப்
பருகிய வார்த்தை
என் தாகந் தணிக்கக்
காத்திருக்கிறது

என் விழிகள் பருகும்
உன் ஜீவ ரசம்
மனத் துளை வழியே
இருதயஞ் சேர
நீ
உயிர்க்கிறாய் என்னில்

உன் உயிர்ப்பை
நான்
பிழிகிறேன்

சுழலும் பிழிவுகளால்
இருதயங்கள் ஒன்றி
இருமை நீங்கி
ஒருமையின் உறுதியாய்
நாம்

தன்மையும் முன்னிலையும்
வேறற ஒன்றிய
தன்மைப் பன்மையின்
படர்க்கையோ
நாம்

இலக்கணம் மீறிய
இப்படர்க்கையில்
பன்மை நீங்கி
ஒருமையின் உறுதியாய்
அவனோடவளாயதுவாய்
நாம்

திருக்கூத்து

ஏப்ரல் 4, 2008

உச்சித் துளை வழியே
மண்டைக்குள் நுழைந்து
சிற்றம்பல நெற்றியிலாடும்
நடராஜ சிவம்