நாய்க்குரு தீட்சை – 1

எச்சரிக்கை: அன்பர்களே! “நாய்க்குரு தீட்சை – 1” என்ற இக்கவிதையை வாசிக்கும் போது, உமது மூளைப்பொறியின் மறை தளர்வாவதற்கான சாத்தியக் கூறுகள் ஏராளமாக உள்ளன. எனவே இந்த ஆபத்தைச் சந்திக்கத் தயாராயுள்ளவர்கள் மட்டுமே, இதைப் படிக்கவும்

நாய்க்குரு தீட்சை – 1
(நாகரா என்ற மனிதனுக்கு ஒரு நாயின் தீட்சை)

நாகரா!
உன் ஆணவத்தை
அருகிலுள்ள குப்பைத் தொட்டியில்
போட்டுவிட்டு
நான் குரைப்பதை
அதி கவனமாகக் கேள்.

இப்பொழுது
என் வால் பகுதியைத்
தீவிரமாகத் தியானித்து
அந்த வாலாகவே மாறி விடு.
“ஆறறிவு மனிதன்
ஐந்தறிவு நாயின்
வால் பகுதியைத் தியானிப்பதா?
அவ்வாலாகவே மாறுவதா?
என்ன பைத்தியக்காரத்தனம் இது!”
உன் கோபம் எனக்குப் புரிகிறது.
ஆனாலும்
நான் உனக்கு அளிக்க வேண்டிய
குரு தீட்சைக்கு
இத்தியானமும் மாற்றமும்
அத்தியாவசியமாகிறது.

ஆணவத்தின் மொத்த வடிவமாகவே
நீ இருப்பதால்
இத்தியானமும் மாற்றமும்
உன்னால்
எளிதில் ஏற்க முடியாததே.
உன் ஆணவத்தில்
எண்ணிலடங்காத் திமிர்கள்
அடங்காது ஆடுகின்றன.
மனிதத் திமிர்
மதத் திமிர்
சாத்திரத் திமிர்
சாதித் திமிர்
கோத்திரத் திமிர்
இனத் திமிர்
நிறத் திமிர்
மொழித் திமிர்
வட்டாரத் திமிர்
கலாசாரத் திமிர்
நாட்டுத் திமிர்
என்று உதாரணத்துக்காக
நனி மிகச் சிலத் திமிர்களை
நாய்த் திமிர் கூட ஒரு சிறிதும் இல்லாமல்
அடக்கத்தோடு
நான் உன் கவனத்துக்கு வைக்கிறேன்.

திமிர்களின் கிடங்கான
உன்னோடு பழகிய
சகவாச தோஷத்தால் எனக்கு வந்ததே
நாய்த் திமிர் என்றாலும்
உனக்கு தீட்சை தருவதற்காக
அத்திமிரைக்
குப்பைத் தொட்டியில் போடுவதற்கு
நான் பட்ட பாடு!
அத்திமிரை விட மனமின்றி
உனக்கு தீட்சை தருவதையே
நிறுத்திக் கொள்ளலாம் என்று கூட
எனக்குத் தோன்றியதென்றால்
உன் நிலை
நன்றாகவே புரிகிறது.

ஆனாலும்
உனக்கும் எனக்கும் எவர்க்கும்
ஆதியாம்
நம் போல் எந்தத் திமிரும் அறவே இல்லாத
அருட்பெருங்கடவுள்
உனக்கு தீட்சை தருவதற்கு
என்னைத் தேர்ந்தெடுத்து
அதற்கென்று கட்டாயமாக
நான் நாய்த் திமிர் கூட இல்லாமல்
சுத்த நாயாக
மன்னிக்கவும்
சுத்த நானாக
இருக்க வேண்டும்
என்று அன்புடன் விதித்தார்.
தீட்சை தந்து முடித்த மறு கணமே
நாய்த் திமிரோடு
நான் ஆசை தீரத் திரியலாம்
என்று உத்தரவாதமுந் தந்தார்.
நான் நனி மிக யோசித்த போது
மனிதனோடு பழகிய
சகவாச தோஷத்தால் தான்
நாய்த் திமிர்
எனக்கு வந்ததை
அவர் நினைவூட்டினார்.
நாய்த் திமிர் இல்லாமல்
வெறும் நாயாக
மன்னிக்கவும்
வெறும் நானாக
நான் சந்தோஷமாக
உலவிய யுகங்களை
அவர் எனக்குப்
படம் போட்டுக் காட்டினார்.

நமக்கெல்லாம் கடவுளாம்
அவர் தந்திரசாலியென்றும்
அப்போது தான்
நான் புரிந்து கொண்டேன்.
அதே சகவாச தோஷம் தான்
மன்னிக்கவும்
சகவாச புண்ணியம்
தன்னோடு தந்திரமாக
சில கணங்கள் இருக்க விட்டுத்
தன் போல் திமிரேதுமற்ற நிலை
மேற்கொள்ள என்னை அவர்
ஆயத்தம் செய்து விட்டார்.

சரியென்று முடிவாக
ஒப்புக் கொண்டு
நாய்த் திமிரைக்
குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு
உனக்கு தீட்சை தர
நான் வந்திருக்கிறேன்.
இப்போது
எனக்கு நன்றாகவே புரிகிறது
எண்ணிலடங்காத் திமிர்களின்
தொகுதியாம் ஆணவத்தின்
மொத்த வடிவமாகிய
மனிதனாம் உனக்கு
ஆணவத்தைக்
குப்பைத் தொட்டியில் போடுவது
எவ்வளவு கடினமென்று.

கவலைப் படாதே
நான் உனக்கு
தீட்சை தந்து முடித்த
மறு கணமே
ஆணவத்தைத் திருப்பி எடுத்துக் கொண்டு
எண்ணிலடங்காத் திமிர்களோடு
ஆர்ப்பாட்ட ஆட்டமெல்லாம்
நீ ஆசை தீர ஆடலாம்.
இது
சுத்த நாயான
மன்னிக்கவும்
சுத்த நானான
நான்
உனக்குத் தரும் உத்தரவாதம்
அன்பு நாகரா!
(கடவுளோடு பழகிய
சகவாச தோஷத்தால்
மன்னிக்கவும்
சகவாச புண்ணியத்தால்
அவரது தந்திர புத்தி
இப்போது எனக்கும்)

மேலும்
சுத்த நாயான
மன்னிக்கவும்
சுத்த நானான
என் வாலைத் தியானித்து
என் வாலாகவே
நீ மாறியதும்
உனக்கு வரும் வாலறிவால்
(அதாவது
வள்ளுவர் சொல்லும்
தூய அறிவால்)
நீ சொல்லொணா
ஆன்ம இலாபத்தைப் பெறுவாய்
(தந்திர புத்தி தன் வேலையை
ஆரம்பித்து விட்டது)

மேலும்
என் வாலாகவே
நீ மாறியதும்
என் நாயுணர்வு
மன்னிக்கவும்
என் நானுணர்வு
என் வாலாம் உன்னில்
முழுமையாகப் பரவ
வாலுணர்வு நீங்கி
நீ
நாயாம் என்னில்
மன்னிக்கவும்
நானாம் என்னில்
அதாவது
நாயுணர்வில்
மன்னிக்கவும்
நானுணர்வில்
முழுமையாக நிலை பெறுவாய்
(தந்திர புத்தியின் உச்ச கட்டம்
என் சகவாசத்தால்
சுத்த நாயாம் எனது
மன்னிக்கவும்
சுத்த நானாம் எனது
இப்போதைய திமிரேதுமற்ற நிலை
கடவுளிடமிருந்து எனக்குத் தொற்றியதைப் போல
என்னிடமிருந்து உனக்குத் தொற்றட்டுமே)

மேலும்
என் வாலாகவே
நீ மாறியதும்
நாயாகிய என்னை
மன்னிக்கவும்
நானாகிய என்னையே
தீவிரமாகத் தியானித்து
நாயாகிய நானாகவே
மன்னிக்கவும்
நானாகிய நானாகவே மாறி
உன் வாலை
நீயே ஆட்டலாம்.
மனித உலகில்
நாய்க்குரு தீட்சை தரும்
பெருந்தீட்சையாளனாய்
வாலாட்டிச் சுதந்திரமாய்த் திரியலாம்.
(அருட்பெருங்கடவுளிடம் கற்ற
அரும்பெருந்தந்திரத்தால்
நாகராவை
நாயாக
மன்னிக்கவும்
நானாக
நன்றாக மாற்றிவிட்டேன்.
நாகரா
இவ்வுலகில்
நாயாக
மன்னிக்கவும்
நானாக
தன் வாலாட்டித் திரிகிறது.

மனிதர்களே!
ஜாக்கிரதை
என் தந்திரத்துக்கு மாட்டிய
நாகரா போல்
மாட்டி விடாதீர்
மாறி விடாதீர்
கடவுள் எனக்களித்த வாக்கின் படி
நாய்த் திமிரோடு
நான் திரிகிறேன்
நீவிரும் தத்தம் திமிர்களோடு
மனிதராய்த் திரிவீர்
அருட்பெருங்கடவுள்
தம் அரும்பெருந்தந்திரத்தோடு
அவரே நாயாகி வரும் வரைக்கும்
அவர் விரைவில் வர இருப்பதாகக் கேள்வி
அதைப் பற்றி நமக்கென்ன கவலை
நாம் ஆசை தீரத்
தத்தம் திமிர்களோடு திரியலாம்)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: