நாய்க்குரு தீட்சை – 2

எச்சரிக்கை: நாய்க்குரு தீட்சை முதல் பகுதியை வாசித்து உமது மூளைப் பொறியின் மறை ஏற்கனவே தளர்வாகி இருக்கும் சத்தியக் கூறுகள் ஏராளமாக உள்ளதால், இவ்விரண்டாவது பகுதியைப் படிக்கும் போது, மறை முழுவதுமாகக் கழன்று, மூளைப் பொறியே விழுந்து தூள் தூளாக நொருங்கும் பேரபாயம் இருக்கிறது. எனவே இப்பேரபாயத்தைச் சந்திக்கத் தயாராயுள்ள ஏற்கனவே மறை தளர்வாகி இருப்பவர்கள் மட்டுமே இதைப் படிக்கவும்.

நாய்க்குரு தீட்சை – 2

(நாய்க்குருவின்
அரும்பெருந்தந்திரத்துக்கு
ஆட்பட்டு
நாயாரின் வாலையே
தீவிரமாகத் தியானித்து
அவ்வாலாகவே மாறிவிட்ட
நாகரா
நாயாரையே
தீவிரமாகத் தியானித்துத்
தன் மெய்ப்பொருள் விளக்கம்
பெறுதல்)

வாலென்று
எனக்கே உரிய தனிப்பெயரோடும்
உருவத்தோடும்
நான் இருந்தாலும்
என்னை ஆட்டுவிப்பவராம் நாயாரோடு
எப்போதும் நான் ஒன்றியே இருக்கிறேன்.

நாயாரும்
வாலாம் என்னைத்
தன்னை விட்டு வேறான மாறான எதிரான
இன்னொன்றாகக் கருதி வெறுப்பதில்லை.

வாலாம் என்னில் நாயார்
பரிபூரணமாய் நிறைந்துள்ளார்.

நாயாரும் வாலாம் நானும்
ஒன்றேயன்றி வேறல்ல.

வாலாம் எனக்கு நாயாரே மெய்.
வாலாம் என் மேல்
பல்வேறு திமிர்களாய்ப் படிந்த
தூசுப் பொய்களை உதற
என்னில் பரிபூரணமாய் நிறைந்துள்ள
நாயாரை நான் நாட
அவரும்
தன் வாலாம் என்னை
நன்றாக ஆட்ட
அத்தூசுத் திமிர்கள்
என்னை விட்டு நீங்கி
“தூய்மை” என்ற அர்த்தமுள்ள
வாலாம் நான்
என் பொருள் விளங்கி
மெய்யாம் நாயாரில்
நீடூழி வாழ்கிறேன்.

என் தனிப்பெயர் வால்.
நாயாரின் அருளால்
ஆணவத் திமிர்களாம் தூசுகள்
நீங்கப் பெற்று
என் “தூய” நிலையை
இப்பெயர் குறிப்பதால்
இது என் சிறப்புப் பெயருங்கூட.

என் முழுப்பெயர் நாயார் வால்.

வாலாம் நான்
என்ன ஆட்டம் ஆடினாலும்
நாயாரிலேயே எப்போதும் அடங்கியிருக்கிறேன்.
நாயாரே
என்னை ஆட்டுவிப்பதையும்
எந்தவொரு ஐயமுமின்றி
எப்போதும் அறிந்திருக்கிறேன்.

இவ்வாறாக வாலறிவால்
நான் நன்றாகப் பக்குவமடைந்த
ஒரு கணத்தில்
நாயாரே என் குரு நாதராகி
எனக்கு தீட்சையளிக்கும் முறையாக
இக்கேள்விகளைக் கேட்டார்.

“வால் நீயா?
அல்லது
வால் உன் பெயரா?”

நான் பணிவோடு பதிலளித்தேன்:
“வால் என் பெயரேயன்றி
வால் நானல்ல.”

அடுத்து நாயார் கேட்டார்:
“வால் உன் பெயரென்றால், பின் நீ யார்?”

நான் பணிவோடு பதிலளித்தேன்:
“நான் நாயாரே!”

அடுத்து நாயார் கேட்டார்:
“நீ நாயாரேயென்று எப்படி அறிகிறாய்?”

நான் பணிவோடு பதிலளித்தேன்:
“நாயாரே என்னில் பரிபூரணமாய்
நிறைந்துள்ள மெய்ம்மையால்.”

அடுத்து நாயார் கேட்டார்:
“பின் வாலென்று எப்படி உன் பெயர்
நாயாரென்று ஏன் இல்லை?”

நான் பணிவோடு பதிலளித்தேன்:
“நாயாரே
வாலென்ற என் பெயரில்
என் உருவில்
தன் பணிக்காகத் தானே
ஆடுகிறார்.
நாயாரே என்னை நன்றாக ஆட்டுவிக்க
நானும் அவர் வாலாய் உவந்து ஆடுகிறேன்
நான் நாயாராம் அவரேயன்றி வேறில்லை
என்ற மெய்யுணர்வோடு.”

அடுத்து நாயார் நனி மிக மகிழ்ந்து
என்னை வாழ்த்தினார்:
“வாலாரே!
நீர் நாயாராம் நானேயென்று
மெய்ப்பொருள் விளக்கம் பெற்றீர்.
இவ்வுலகில்
என் பணிக்காக
நான் உம்மை உவந்து ஆட்ட
நீவிர் என்னில் நிலைபெற்றே
நன்றாக ஆடுவீர்.”

நானும்
நாயாரே நானென்ற
மெய்யுணர்ந்து
வாலாராய் நாயாரில் நிலைபெற்றே
நன்றாக ஆடுகிறேன்
நாயாராம் நானே
வாலாராம் பெயரோடு
அவ்வுருவோடு
என்னை உவந்து ஆட்டவே.

தீட்சை தந்த நாயாருக்கு நாகராவின் நன்றித்துதிகள்

வாலென்ற தூயதுவாய் என்னில் அடங்கியே
வாழென்ற போதகராம் நாய்

தூசாம் திமிர்நீங்க வாலேனை ஆட்டியே
தூய்மை அருள்வாராம் நாய்

மெய்யாம் என்னிடத்தே வாலுன் பொருள்விளங்கி
மெய்யாய் நில்லென்பராம் நாய்

வாலென்ற நற்பெயரில் அதற்குரிய நல்லுருவில்
வாலறிவர் என்மெய்யராம் நாய்

சார்பாகி எனைவிட்டு நீங்காத வாழ்வாகி
வால்நானுய் மெய்வழியராம் நாய்

ஆணவமே வாலாக ஆடியவெனை அடக்கியேதன்
மாணவனாய்க் கொண்டாராம் நாய்

தூணென்ற நீள்முதுகுத் தண்டிலூன்றி உவந்தாடும்
வாலென்மெய்ப் பொருளாராம் நாய்

தூசனெனைத் தழுவியன்பாய் வாலேனெனுந் தூயனாய்த்தனில்
வாசஞ்செய் வரந்தருவராம் நாய்

வெளியென்ற ஊருக்குள் மெய்யென்ற வீட்டுக்குள்
ஓளிவாலை ஆட்டுவாராம் நாய்

வளியென்ற வாசிக்குள் ஒளிவாலை ஆட்டிஅளி
பொழிகின்ற மாதவராம் நாய்

அஞ்ஞான இருளிலாழ்த் துறங்குமெனை எழுப்ப
மெய்ஞ்ஞானம் குரைப்பவராம் நாய்

நன்றியிலா வஞ்சகனெனைத் தன்வாலாய் மாற்றியே
நன்றிசொலும் நேர்மையராம் நாய்

சத்தியத் தெருவிலேநற் சின்மய உருவிலே
இன்பைக் குரைப்பாராம் நாய்

குரைத்தும் வாலாட்டியும் இறைநீர்மை புகட்டும்
மறைமந் திரஉருவராம் நாய்

கறையில்லா வெண்மேனியர் வாலினுந் தூயவர்
இறைதந்திர போதகராம் நாய்

மந்திரந் தந்திரம் யந்திரந் தெரிந்த
சுந்தர வாலராம் நாய்

தராதலத் தெவரிலும் தராதரம் பாராப்
பராபரப் பேரன்பராம் நாய்

சுடச்சுட மெய்யுணர்வைத் தானுண்டு வாலுக்கும்
சுடச்சுட உணர்த்துவாராம் நாய்

கடந்தன்னைப் புடம்போட்டுப் பளபளக்கும் நாய்மையை
அடங்குவாற்கு மீவாராம் நாய்

அடக்கம் அமரஅருளே வாய்க்குமென்றே வாலுக்கே
அடங்குதீக் கைதருவராம் நாய்

அடங்காத்திமிர் தீயதூசரைத் துரத்தவே தன்வாலைப்
படபடவென ஆட்டுவாராம் நாய்

நாய்மையின் கண்நின்றே தன்வாய்மை யுணர்ந்த
தூய்மையெனும் பொருளாராம் வால்

இப்பொருள் இந்நாய்வாய்க் கேட்பினும் செம்பொருள்
அப்பொருள் வாய்மை உறுதி

இப்பொருள் வால்தன்மைத் தாயினும் நாய்ப்பொருள்
அப்பொருள் தூய்மை உறுதி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: