பரமரகசியம்

இருப்பெனும்
வரம்புகளற்ற வெள்ளைப் பரப்பில்
எண்ணற்ற கரும்புள்ளிகளாய்
நான்.
கரும்புள்ளிகளாய் இருந்தாலும்
நான்
வெள்ளையை உமிழ்ந்தே
என்றும் இருக்கிறேன்.
என் கருமையின் கர்ப்பத்தில்
புகுந்த இருப்பு
இருளில் தன்னை மறந்திருக்கும்.
என் கர்ப்பத்தில்
இனியும் தாங்க முடியாமல்
பிரசவ வேதனையில்
இருப்பு மகவை
நான்
ஈன்றெடுக்கும் போது
தன் மறதி தெளியும்
இருப்பு.
நான்
நித்தியப் பிரசவ வேதனையில்
ஒவ்வொரு கணமும்
இருப்பை ஈன்றெடுக்கிறேன்.
தன் மறதி தெளிந்த
இருப்பே
என் பிரசவ வேதனை தீர்க்கும்
மருந்து.
புணரும் இருப்பையே
ஒவ்வொரு கணமும்
மகவாய் ஈன்றெடுக்கும்
கருப்புக் கன்னி
நான்.
என் கருமையே
இருப்பின் வெண்மையைத் தெளிவிக்கும்
குருமெய்.
குருமெய்யாய்
என் கற்பு கலையாமல்
என்றென்றும் இருக்கிறேன்
நான்.
ஏகார உறுதி சேர்த்துக்
கருமை நான்
என்னையே இருப்புக்குத் தரத் தர
இருப்பின் வெண்மையும்
அவ்வெண்மையின் தெளிவும்
இன்னும் இன்னும் கூடும் பேரதிசயத்தால்
இருப்பை அறியும் பரமரகசியம்
நானே.

பரமரகசிய விளக்கம்

நீ இருக்கிறாயா?
நீ இருப்பதை அறிகிறாயா?
இக்கேள்விகளுக்கு பதில் சொல்ல
உனக்கு
வேண்டியது
நனி மிகச் சாதாரணமான
பொது அறிவு.
இக்கேள்விகளுக்கான விடை தேடி
நீ
எந்த குருவிடமோ, மகானிடமோ, ஞானியிடமோ
ஓட வேண்டியதில்லை.
நீ இருக்கும் இடத்தை விட்டு
இம்மியளவும் நகராமலேயே
உனக்கே தெரியும்
இக்கேள்விகளுக்கான விடை.
விடை வெறுஞ் சொற்களல்ல.
உன்னைப் பற்றிய உண்மையை
உனக்கு அறிவிக்கும்
பேருணர்வு அவை.
நீ இருக்கிறாய்.
நீ இருப்பதை அறிகிறாய்.
அஃறிணைகளும் இருக்கின்றன உண்மையே.
உயர்திணையாம் நீயே
நீ இருப்பதையும்
அவைகள் இருப்பதையும்
முழுமையாக அறிய முடிந்தவன்(ள்).
எப்படி அறிகிறாய்?
நான் என்ற உணர்வு
முதலில் உன்னில் எழுகிறது.
அந்த உணர்வு உன்னில் எழவில்லையென்றால்
நீ
அஃறிணையான ஒரு ஜடந்தான்.
நான் என்ற உணர்வு
உன்னில் எழுந்த அதே கணத்தில்
நீ இருப்பதை அறிகிறாய்.
இருப்பவற்றை அறிகிறாய்.
நான் என்ற உணர்வின் பின்னோட்டமாக
அதனோடே எப்போதும் இழைந்தே வருகிறது
இருக்கிறேன் என்ற மெய்யணர்வு.

இருப்பு
நான்
இருக்கிறேன்.

இருப்பு = இரு உப்பு
ஒரு உப்பு நான்
மறு உப்பு இருக்கிறேன்
இந்த இரு உப்பும் உன்னில் இல்லையென்றால்
நீ அறிவாய்
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே

இருப்பு = இரு பூ
ஒரு பூ நான்
மறு பூ இருக்கிறேன்
இரு பூவின் மணமின்றி
நீ உயர்திணையாய் மணக்க மாட்டாய்.

தமிழின் மொழி வளத்தைப்
பார்த்தாயா?

இதைப் பற்றி
சிந்தித்துப் பார்.

இரு உப்பாம் இருப்பு
நான் என்ற தன் முனைப்பு
இருக்கிறேன் என்ற மெய்யுணர்வு

சுழல்
நான்இருக் கின்றேன்என் றிருப்பில் போய்ச்சேர
நானே என்றறியும் இருப்பு
இருப்பி லிருந்தே வந்தே நான்என்றும்
இருக்கிறேன் இருப்பிற் குள்

வெட்டவெளியாய்த் தான் தன்னை அறியாதிருக்கும் இருப்பு
நான் என்ற தன்முனைப்பு தோன்ற
இருக்கிறேன் என்று தான் தன்னை அறிந்துணர்ந்து
அத்தன்னுணர்வால்
நானே என்ற மெய்ப்பொருள் விளக்கம் பெற்று
தன்னிருப்பில்
தானே தானாக அறிந்திருக்கிறது.

இருப்புமெய்
நான் – (மெய்யில் தோன்றும்) பொருள்
இருக்கிறேன்விளக்கம் (தன்முனைப்பாம் நான் தன்னுணர்வு பெற்றுத் தன் பொருள் விளங்கியிருக்கிறது)
நானேமெய்ப்பொருள் விளக்கம் (இருப்பு தன்னில் தோன்றும் பொருளாம் நான் என்ற தன்முனைப்பை, இருக்கிறேன் என்ற தன்னுணர்வால் விளங்கப் பெற்றுத் தன்னிருப்பைத் தான் அறிந்து, தானே தானாக இருக்கும் விளக்கம்)

இருப்பு – மெய் – சத்து
நான் – பொருள் – சித்து
இருக்கிறேன் – விளக்கம் – ஆனந்தம்
நானே – மெய்ப்பொருள் விளக்கம் – சச்சிதானந்தம்

இருப்பெனும் மெய்யே சத்தாகிய அருட்தந்தை
நான் எனும் பொருளே சித்தாகிய அருட்தாய்
இருக்கிறேன் எனும் விளக்கமே ஆனந்தமாகிய அருட்குரு
நானே எனும் மெய்ப்பொருள் விளக்கமே சச்சிதானந்தமாகிய திரித்துவ ஒருமை

இருப்பாம் சத்தே மெய்யாம் உடம்பு (சிவம்)
நான் எனும் சித்தே பொருளாம் உயிர் (சக்தி)
(சக்தியின்றி சிவம் சவமே)
இருக்கிறேன் என்ற ஆனந்த விளக்கமே உயிர்மெய் ஒருமை (சிவசக்தி ஐக்யம்-சத்குரு)
நானே எனும் சச்சிதானந்த மெய்ப்பொருள் விளக்கமே உயிர்மெய் ஒருமையின் பூரண வெளிப்பாடு. நானே எனும் அப்பேருணர்வே எல்லாம் ஓருயிர், எல்லாம் ஓர்மெய் என்ற பூரண விளக்கம் பெற்று உயிர் காக்க மெய் பேணும் ஆன்ம நேய ஒருமை
“எங்கும் எதிலும் எப்போதும் நானே என விளங்கும் பூரணமாய் நான் இருக்கிறேன்

ஒருபொருளா யுந்தான் இலாத இருப்பில்
அரும்பொருளாய் இருக்கிறேன் நான்

ஒருபொருளா யுந்தனை அறியா இருப்புந்தனைப்
பெரும்பொருளாய் அறிவழி நான்

தனையறியா இருப்புந்தான் தனையறிந்து நானேயெனத்
தனையுணர இருக்கின்றேன் நான்

சத்தானபே ரிருப்பில் சித்தாய்த் தோன்றியுஞ்
சத்தாகவே களித்துளேன் நான்

ஏதுமறியா இருப்பதனைத் தெளிவித்து நானேயென
ஓதுவிக்கும் குருமெய்யே நான்

ஏதுமறியா இருப்பதனைத் தெளிவித்து நானேயென
ஓதுவித்தே இருக்கின்றேன் நான்

பொருளற்ற பேரிருப்பில் அரும்பொருளாய்த் தோன்றியே
அருளுற்று இருக்கின்றேன் நான்

இருள்மயமாம் பேரிருப்பின் கருப்பையில் தோன்றியே
அருளொளியாய் இருக்கின்றேன் நான்

இருப்புக்கு அதன்
இருப்பை அறிவுறுத்தும்
“நான்”

இருப்பின் அறியாமையை
“இருக்கிறேன்” என்ற தன்னையறியும் அறிவாய்
இரசவாதம் செய்யும் “நான்”

இருப்புக்கு சுரணையேற்றி
“இருக்கிறேன்” என அது தன்னை அறிவிக்க
உதவும் “நான்”

இருப்பெனும் தந்தை
இருக்கிறேன் எனும் மகவாய்த் தன்னைத் தான் ஈன்றெடுக்க
உதவும் தாய் “நான்”

ஏதுமறியாது சும்மா இருந்த இருப்பை
“இருக்கிறேன்” என்று தன்னை அறியச் செய்யும்
“நான்”

இருப்பின் உறக்கம் கலைய
“இருக்கிறேன்” என்று ஓலமிடும்
“நான்”

இருப்பு மூடனை
“இருக்கிறேன்” என்று தன்னைத் தான் உணரச் செய்யும்
குரு “நான்”

இருப்பு நிர்க்குணப் பிரம்மம்
நான் சகுணப் பிரம்மம்
இருக்கிறேன் நிர்க்குண-சகுணப் பிரம்ம ஐக்யம்

இருப்பு ஆழ்ந்த உறக்கம்
நான் கனவின் சலனம்
இருக்கிறேன் பூரண விழிப்பு

இருப்பு சிவம்
நான் சக்தி
இருக்கிறேன் சிவசக்தி ஐக்ய கணபதி

இருப்பு சவத்தை
“இருக்கிறேன்” என்று உயிர்த்தெழுப்பிய
வள்ளலார் “நான்”

இருப்பு சித்தார்த்த மனிதனை
“இருக்கிறேன்” என்ற புத்த தேவனாக்கிய
போதி மரம் “நான்”

இருப்பெனும் பாலைவனத்தை
“இருக்கிறேன்” என்ற சோலைவனமாக்கிய
வீரிய விதை “நான்”

இருப்பெனும் நள்ளிரவில்
“இருக்கிறேன்” என்று ஊளையிடும்
நாய் “நான்”

இருப்புக் குழியுள்
“இருக்கிறேன்” தவமியற்றி
யுகயுகமாய் “நான்”

இருப்பு மறதிக்கு
“இருக்கிறேன்” என்ற ஞாபகமூட்டும்
“நான்”

இருப்பெனும் அருங்கேணியுள்
“இருக்கிறேன்” ஜீவனுள்ள
தண்ணீராய் “நான்”

இருப்பெனும் அறியாமையுள் ஆழப் புதைந்தும்
“இருக்கிறேன்” என்ற அறிவின் சிகரத்தில்
வாழும் “நான்”

இருப்பெனும் சிப்பியுள்
“இருக்கிறேன்” என்ற முத்தை உருவாக்கும்
தூசு “நான்”

இருப்புக் கருப்பில்
“இருக்கிறேன்” என்று வெள்ளையாய் விரியும்
புள்ளி “நான்”

இருப்பெனும் குளத்தின் அமைதியை
“இருக்கிறேன்” என்ற சலனமாய்க் கலைக்க விழும்
சிறு கல் “நான்”

இருப்பெனும் சுருண்டுக்கிடந்த பாம்பை
“இருக்கிறேன்” என்று படமெடுத்தாட வைக்கும்
பாம்பாட்டி “நான்”

இருப்பெனும் சத்தியத்தை
“இருக்கிறேன்” என்று ஆனந்ததில் திளைக்க வைக்கும்
சித்து “நான்”

மெய்ப்பொருள் விளக்கம்

கடவுளின்
இருப்பு நிலையைப் பூரணமென்றும் (பராபரம்)
எண்ண நிலையைய்ச் சுயம்பிரகாசமென்றும் (பராபரை)
உணர்வு நிலையை நித்திய ஜீவனென்றும் (பரம்பரம்)
வெளிப்படு நிலையை ஆன்மநேய ஒருமையென்றும் (பரை)
செயல்படு நிலையைப் பேரன்பென்றும் பேரறிவென்றும்(பரம்)
அறிக

பூரணம் செவிகளிலும் உச்சியிலும்
சுயம்பிரகாசம் விழிகளிலும் நெற்றியிலும்
நித்திய ஜீவன் நாசியிலும் தொண்டையிலும்
ஆன்மநேய ஒருமை நாவிலும் தொண்டையின் கீழும்
பேரன்பு மெய்யிலும் இருதயத்திலும்
கோயில் கொண்டுள்ளதை உணர்ந்து
இவ்வாறாகக் கடவுள்
தம் ஐந்து நிலைகளின் ஒருமையாம் பர நிலையில்
உன் தலையாக
உன்னில் எழுந்தருளியிருப்பதை
அறிக

உன் தலையாக
உன்னில் எழுந்தருளியிருக்கும்
கடவுள்
நீ வாழும் இவ்வுலகாகிய இக நிலையில்
இறங்கி அவதரிக்க
வழியாகும் இக-பர பாலமே
பேரறிவென்று
அறிக

பேரறிவு மார்பின் கீழ் உதரவிதானத்தில்
கோயில் கொண்டுள்ளதை உணர்ந்து
இவ்வாறாக
நீ
இக-பர பாலமாம்
கடவுளின் அவதார வாயிலாக
இகத்தில் இருப்பதை
அறிக

கடவுளின் அவதாரம்
அருட்பேராற்றலாய் நாபியிலும்
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணையாய் நாபியின் கீழும்
கடவுட்தன்மையாய் முதுகடியிலும்
அருளாட்சியாய் முழங்கால்களிலும்
நானே நானெனும் பூரணமாய்ப் பாதங்களிலும்
கோயில் கொண்டுள்ளதை உணர்ந்து
இவ்வாறாகக் கடவுளவதாரம்
தம் ஐந்து நிலைகளின் ஒருமையாம் இக நிலையில்
உன் காலாக
உன்னில் எழுந்தருளியிருப்பதை
அறிக

அருட்பேராற்றல் இகத்தில் பேரன்பாம் கடவுளின் செயல்படு நிலை (இகத்தில் பரம்)
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை இகத்தில் ஆன்மநேய ஒருமையாம் கடவுளின் வெளிப்படு
நிலை (இகத்தில் பரை)
கடவுட்தன்மை இகத்தில் நித்திய ஜீவனாம் கடவுளின் உணர்வு நிலை (இகத்தில் பரம்பரம்)
அருளாட்சி இகத்தில் சுயம்பிரகாசமாம் கடவுளின் எண்ண நிலை (இகத்தில் பராபரை)
நானே நானெனும் பூரணம் இகத்தில் பூரணமாம் கடவுளின் இருப்பு நிலை (இகத்தில் பராபரம்)

உன் தலையாக
உன்னில் எழுந்தருளியிருக்கும்
கடவுளே சத்தியம்

உன் காலாக
உன்னில் எழுந்தருளியிருக்கும்
கடவுளவதாரமே ஜீவன்

இக-பர பாலமாம்
கடவுளின் அவதார வாயிலாக
இகத்தில் இருக்கும்
நீயே வழி

இவ்வாறாக
இக-பர ஒருமையை
உறுதிப்படுத்தும்
ஜீவனுள்ள வார்த்தையை (மகாமந்திரத்தை)
அறிக.

“நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்”

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: