ஓகஸ்ட் 2nd, 2008 க்கான தொகுப்பு

மனித தோசை

ஓகஸ்ட் 2, 2008

தோசையின் வட்டத்தைப் போன்றே
மனிதன் நீயும் பூரணம்

பூமியெனும் சுடுகல்லில்
உன்னைத் தன் வெள்ளங்கி எண்ணை
மினுமினுக்க
வார்த்திருக்கிறான்
பரம வள்ளல்

தோசையின் இரு முகங்களைப் போன்றே
உனக்கு இறைமையின் வெள்ளை முகம்
மனிதத்தின் இருண்ட முகம்.
இறைமையின் இருண்ட முகம்
நீ(பருப்பொருள்-Matter).
உன் வெள்ளை முகம்
இறைமை(நுண்பொருள்-Spirit).
இரு முகங்களும்
பிரியாத ஒருமையில்
பூமிச் சுடுகல்லில்
சுடச் சுடச் சுவைக்கும்
தோசை நீ.

உன்னை
ஏழையர் தட்டுகளில்
தன் அன்பின் பூரண
வட்ட வடிவமாய்ப்
பரிமாறவே
வார்த்திருக்கிறான்
பரமன்
தன்னையும்(தன் ‘‘யும்) சேர்த்து.
ஞாபகங் கொள்
ஏழையரின் பசி தீர்
சுடச் சுட
நீ
உயிர்ச்சுவையோடு
இருக்கும் போதே!

தமிழ் மன்றத்தில் ஆதி அவர்களின் “தோசைகளையும் பாடுவேன் என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை.

Advertisements

கடவுளின் பதில்

ஓகஸ்ட் 2, 2008

என் இருதய நிஜத்தை மறந்து
அன்பெனும் என் இயலைத் துறந்து
உருவானதே வஞ்சக மனத்தின்
வன்செயல் அறியாயோ நீ மனிதா!

நான் கொடுத்த தென்னவோ
உனக்கு வெள்ளை உள்ளம்!
அம்மனத்தைக் கருத்துத் திரித்தே
அவல மனைத்தும் நீயே விதித்தாய்!

உன் மெய்க் கோயிலில் உவந்து
குடியிருக்கும் என்மெய் மறந்து
வெளியே வீண்பொய்க் கோயிலில்
எனைப்புனைந் ததாரோ நீயே மனிதா!

சத்திய யுகந்தன்னை நானுனக்குத் தந்தேன்
சத்தியந் தன்னைப்பொய் மாயையால் மறைத்து
இருண்ட கலியுகம் நீதானே படைத்தாய்
கடவுள் என்னைக் குறைகூறல் முறையோ!

நிலா முற்றத்தில் மா. கலை அரசன் அவர்களின் “கடவுள் நீ தானா?” என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

நியதி

ஓகஸ்ட் 2, 2008

பொய்க் கனவுகள் யாவுங் கலைந்து
நள்ளிரவின் அதீத விழிப்பில்
மெய்யுணர்வாய் விடிகிறேன்

மாயைக் கருநிழல் கரைந்து போக
அருளொளிக் கிரணங்கள்
என் நிஜத்தைப் பளிச்செனக் காட்ட
என்றென்றும் ஜீவித்திருக்கும்
பெருவாழ்வை வெல்கிறேன்

இருமையின் மருண்ட கரிய இலைகள் உதிர்ந்து
ஒருமையின் அருள் மின்னும் பசிய இலைகள் துளிர்த்து
மாறாத ஞான வசந்தத்தில்
சுகமாய் நிற்கிறேன்

மௌனமாய்
மோகன ராகம் பாடி
இகத்தில் பர பம்பரமாய்ச்
சுற்றுகிறேன்

பக்கவாட்டில் கரங்களை விரித்து
இகத்தைத் தழுவி
செங்குத்தாய்ப் பரத்தில் ஓங்கி
சிலுவையாம் என் மெய்யில்
உயிர்த்தெழுகிறேன்

இருதய நியதியில்
மனமடங்கி
காலனின் விதி வென்று
மாயையின் சதி கொன்று
அன்பின் திடமாய்
என்றென்றும் வாழ்கிறேன்

முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் “விதி” என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

மெய்

ஓகஸ்ட் 2, 2008
மெய்யென்னும்
நம் உடம்பு மாளிகை
உன்னால் என்னால்
ஆகவில்லை!
அழிவிலா மெய்யன்பால்
அது திடமானது!

இம்மெய்யை உணராததாலே
மாளிகை
மறுபடி மறுபடி வீழுது!
இம்மெய்யை முழுதுணர்ந்தாலே
மெய்யாகவே
அழியாமல் நிற்குமன்றோ
மாளிகை!

பேருபதேசம்

ஓகஸ்ட் 2, 2008

உதடுகளை அழுத்தி மூடி
நாவை மேலே சுழித்து
வாய்க்குள் அதனைப் பூட்டி
ஓடும் மனத்தைப் பிடித்து
இருதய அமைதியில் நிறுத்தி
சும்மா இருந்தேன் சொல்லற!
பேருணர்வாய் என்னுள் எழுந்து
இரு தயவாய்” என்ற
பேருபதேசந் தந்தாய்
பேரருளாளன் நீ!

வேள்வி!

ஓகஸ்ட் 2, 2008

ஞான யோக மெய்க்குண்டத்துள் எழுந்த
சுடச் சுடச் சுடரும் அருட்கனலில்
இருள் சேர் இரு வினை யாவும் பொசுங்க
கற்பூரம் போல் கரைகிறதே மெய்!