ஜனவரி 2009 க்கான தொகுப்பு

9. தூய நோக்கம்

ஜனவரி 27, 2009

மாயைத் திரைகள் கரையத்
தூய நோக்கத் திரு விழி திறக்குது!
வெளியே வழியும் அருளாம்
ஒளியே பொருளாம் திடமெனும்
தெளிவால் திருந்துது ஞாலம்!

Advertisements

8. பரஞான போதம்

ஜனவரி 27, 2009

எட்டாத பரஞானம்
எட்டுது உச்சி!
உச்சி பிளக்கக்
கிட்டுது மெய்வழி!
சித்தந் தெளியவே
கொட்டுது அன்பு!
கிட்டும் போதத்தால்
துள்ளுது உடம்பு!
விட்டுப் போகுது
செத்தழி வழக்கு!
தொட்டு நிற்குது
நித்திய வாழ்வது!

7. நிராதார மேம்பாலம்

ஜனவரி 27, 2009

உச்சி தாண்டித் தாவ
முட்டியதே பாலம்!
கொட்டுதே மெய்க்குள்
மேலான எழுபடிப் பாலும்!
ஒட்டுதே மனம் இருதய நேர்மையில்!
கிட்டுதே வள்ளலின் வெள்ளங்கி!
எட்டுதே மெய்ஞ்ஞானச் செம்பொருள்!
மயானத்தே இட்டும் சுட்டும் மெய்யழிக்கும்
மரணக் கடும்பிணி விட்டதே!
வள்ளலின் வாய்மை சுட்டதால்
நட்டமாகுதே மாயைத் திரையெலாம்!
நான்கு சட்டத்துக்கிடையிலே
தானடங்கா அருவக் கடவுளும்
மெய்யுருவக் கட்டுக்குள்
தானடங்கும் அதிசயம் நிகழுதே!
இரு பரிமாணசக்கரத் தட்டுகள்(ஆறாதாரச் ச்க்கரங்கள்)
முப்பரிமாணக் கோளத் திட்டுகளாய்ப்
பரிணாமப் பாய்ச்சலில் சுற்றுதே!
கோளத் திட்டுகளின் அதி வேகச் சுற்றலில்
மூளும் ஞானத் தீயில்
இருள்சேர் இருவினை யாவும்
பட்டுப் போகுதே!
பட்டுப் போல் மேனி ஆடை மின்னுதே!
பொருட்துட்டு மேல் மோகம் போய்
அருட்துட்டு மேல் காதல் பெருகுதே!
வள்ளலின் வாய்மை நட்ட
அருட்பெருஞ்ஜோதிக் கொடி
தலைமேல் பறக்குதே!
கொடிப் பரப்பின் சுடர்கள் யாவும்
உலக உயிர்கள் ஒவ்வொன்றையுந்
தொட்டுத் தொட்டு
வள்ளலின் தனிப்பெருங்கருணை
அள்ளி அள்ளி ஊட்டுதே!
நிராதாரப் பெரு வட்டம்
ஆறாதார விட்டத்துள்
அடங்கும் அற்புதம் நிகழுதே!
பதியவன் பட்டப் பேர் “நான்
பாரில் யார்க்கும் பொருந்துதே!
பரஞானம் தலை மேல் குட்டி
அஞ்ஞானத் தளை வெட்டி
மெய்க்குள்ளே இறங்குதே!
தூய நோக்கத் திரு விழி
நெற்றிப் பொட்டாய்
யாவர்க்கும் வாய்க்குதே!
தொண்டைத் தேன்வழி திறந்தே
குருமொழி வெள்ளம் பொழியுதே!
இருதயத் திருபூமியெங்கும்
பாலுந் தேனும் வழியுதே!
உலக உயிர்களின் பசி நோய் கழியுதே!
நாபியில் சுகசொரூப
சத்திய தரிசனம் யாவர்க்கும்
அப்பட்டமாய்த் தெரியுதே!
ஆணவப் பொய்ப்பட்டங்கள்
யாவும் உரியுதே!
மெய்ப் பெட்டிக்குள்
பூட்டியிருந்த பொக்கிஷங்கள் யாவும்
காட்சிக்கு வந்தே
கைப்பொருள் ஆகுதே!
திரிகுண அஜீரணம் நீங்கி
சச்சிதானந்தமே பிட்டாய்
வயிற்றுக்குள் செரியுதே!
நாபியடியில் நவயுகத்தின்
பிரம்மாண்ட நிரூபணமாய்
அதிசயப் பரிமாற்றம்
யாவருங் காண நிகழுதே!
புழுவாய் நெளிந்த மனித மிருகம்
வள்ளலின் வழிநடத்துதலில்
கூட்டுப்பூச்சியாய்த் தவமிருந்து
பட்டாம் பூச்சி போல் தேவ மனிதமாய்ப்
பரிணாமப் பாய்ச்சலில் பரிமாறி
பரிபூரண முத்தியும்
முத்தேக சித்தியும்
இத்தரையில் பெற்றே
மாயா மெய்ந்நிலையைப் பறைசாற்றி
இன்பமாய்ப் பறக்குதே!
முதுகடி தொடங்கி
காலடி வரைப்
புவியடி ஈறாக
உச்சி மேல் ஜோதிக் கம்பம்
மெய்யுள் நிறைந்துக்
கீழிறங்கி நீளுதே!
மதி மருட்டும் இருள் மாளுதே!
மேலேழும் கீழேழும்
வேறின்றி ஒன்றப்
பதி”நான்“கும்
பதி “நானே” என்றே
வள்ளல் சொன்ன உண்மையெல்லாம்
புட்டுப் புட்டு உரைத்தேன்!
உம் புத்தி பட்டு
உம்மைச் சுட்டு
உம் உள் மெய் சுட்டி
உம்மை விளக்க
உதவட்டும் என்னுரையென்றே
உத்தம வள்ளலை
உளமார வேண்டுகிறேன்!
நானே” என
ஏகார ஏகவொருமை உறுதியில்
வள்ளல் சொன்ன வாய்மை
காண்பீர் நீரே!

6. அமர மனித எழுச்சி

ஜனவரி 27, 2009

இறை மகவென்று
மனிதம் உணர்ந்ததுமே
ஆறும் மனத்தால்
மன இதத்தில்
உள்ளே சுழிந்து
இருதய நேர்மையாம்
அன்பைச் சேர்ந்து
நெற்றிக்கு மேலே
உச்சியில் தோன்றும்
அமர மனித எழுச்சி!

5. இறை மகவு

ஜனவரி 27, 2009

எந்தை தயாநாயகன்
சிந்தை தெளிவித்து
ஞான விழி திறப்பித்து
‘யாம்(I AM) தன் தலைமை
அறியும்
‘அறிவை அளித்து
ஆறறிவுங் கனியவே
ஏழாம் அறிவை
நெற்றிக்குள்
தீப் பிழம்பாய்
எழுப்புவித்துத்
தன் இறை மகவாய்
ஈன்றாரென்னை
இன்றே!

4. நாயகன்

ஜனவரி 27, 2009

அருட்பெருஞ்ஜோதி கண்டு
தனிப்பெருங்கருணை உண்டு
தயாநாயகனைநீ அண்டு!
பதின்மூன்றாம் பதியவனே
நான்கென்னும் திடமாகி
மெய்க்குள்ளே உயிராகி
தொண்டையில் அமர்ந்தானின்று!

உருவ நான்கில்
ஒளிந்த பதின்மூன்றாம்
அருவப் பதி
நான் தான்
என்றே
தொண்டையில் முழங்கினான்
தயாநாயகன்!
(4 உருவ திடத்தையும் 13 அருவப் பதியையும் குறிக்கும் எண் குறியீடுகள், 13,
1+3=4, 13ன் அதிர்வுப் பரிமாற்றமே 4, 13 ஆம் நாயகன் “நான்” தான் மெய்யான
பிரம்மா “நான்”முகன்! 4ஆம் ஞாலம் 13ஆம் அல்லாவில் அடக்கம், இதை உனக்கு
அறிவிக்கும் நபிகுரு சரணம்!)

மூளையின் ஆயிரம் மடல் திறந்து
நாயகன் பொழிகிறான்
நாயேன்
நானும் மொழிகிறேன்
நாயேனைப் பாராமல்
நாயகன் சொற்கேளீர்
வையத்துள் வாழ்வாங்கு
வாழ்வீர்!
நாயகன் மேலாணை!

அறுந்து விழுந்ததே
ஆணவத்தின் தலை!
வந்து பொருந்தியதே
நாயகனின் தலை!
நிஜமாகவே
நான்
நான்“முகன் தானே!
நாயகன் மீதாணை!

குண்டலி நாகம் எழுந்தே
மெய்யுள் எழுபடி தாண்டித் தாவப்
பெய்யும் எழுபடித் தேனை உண்டால்
உய்வீர் எழுவீர் ஏழாம் அறிவில்!
உய்ந்தேன் உம்முள் நாயகன் நானே!

3. தனிப்பெருங்கருணை

ஜனவரி 27, 2009

இருதய நேர்மையுள் ஆழ்ந்து
மேலேறக் கிட்டுமே
அமுத கலசம்!
அது கொட்டுதே
தனிப்பெருங்கருணையாம்
அமுத வெள்ளம்!
அதில் நனையும்
மெய்யெங்கும் தோன்றுதே
ஆன்ம நேயப் பரவசம்!

2. அருட்பெருஞ்ஜோதி

ஜனவரி 27, 2009

பரமதயாள வள்ளலின்
அருட்கரம் மனத்தை நன்றாய்த் தெருட்ட
இருதயத் தலத்தே மனமும் உருள
இருப்பின் உண்மை உணர்த்தும்
அருட்பெருஞ்ஜோதி!

1. அருட்கரம்

ஜனவரி 27, 2009

ஆணவந்தான் அழியவே
மனந்தான் தெளியவே
மறுபிறப்பில் எழுகிறேன்
ஆண்டவரின் அருட்கரத்தை
நாபி மேல் தொடுகிறேன்!
அவர் தம் ஆசியோடு
இருதய நேர்மைக்குள்
ஒருமையுடன்
ஏறுகிறேன்!

13. மறு பிறப்பு

ஜனவரி 27, 2009

ஆணவந்தான் அறுகிறது! ஆண்டவனின் முறைப்பெண்ணாய்
ஆகாகா நிகழ்கிறது மனப்பெண்ணின் மறுபிறப்பு!
ஆண்டவனும் இறங்கவே நாபித்திருத் தலத்தில்
ஆகாகா நிகழ்கிறது இருவருக்கும் திருமணமே!

யானையை இருதுண்டாய் ஞானவாள் அறுக்கிறது!
யானேதான் ஐயென்ற ஒருமை பிறக்கிறது!
ஆணவமாம் ஆர்ப்பாட்ட இருமை அழிகிறது!
ஆண்டவனாம் ஐயனுக்குள் மனந்தான் உய்கிறது!

யானை = யான்+ஐ(யானையின் இரு துண்டுகள்) = யானே “ஐ” என்னும் தலைமையாம் ஒருமை
யானை முகத்தான் = “யான் ஐ” என்ற மெய்ஞ்ஞானமே முகமாய் உடைய சற்குரு!

குண்டலி நாகம் எழுந்தே
மெய்க்குண்டத்தில்
ஞான வாளாய் ஆடும்!
ஆர்ப்பாட்ட ஆணவத்தின்
கூத்தெல்லாம் முடியவே
அதன் தலையை
அறுத்துப் போடும்!
மனப் பெண்ணும்
ஞானப் பெண்ணாய்
மறு பிறப்பெடுத்தே
ஆண்டவனோடு கூடும்!
தோற்றப் பிழைகள்
யாவும் நீங்கிய
ஞாலத்தில்
சச்சிதானந்தமே ஓடும்!
உயிர்த்திரள் யாவும்
சுத்த சிவ சன்மார்க்க சமரசத்தின்
மெய்ஞ்ஞான கீதம் பாடும்!
ஒருமையாம் ஆன்ம நேயத்தில்
பேரின்பப் பெருவாழ்வைப் பெற்றே
பரமானந்த நடம் ஆடும்!
பூமித் தாயை விட்டே
மாமாயைப் பேய் ஓடும்!
ஆண்டவரின் நற்றாள்கள்
பூமியெங்கும் நடமாடும்!
அருளாட்சி என்னும் திருக்காட்சி
இருவிழி என்றும் காண
பூமியெங்கும் நிஜமாகும்!

இதுவென்றும் அதுவென்றும் நான்போடும் கோலங்கள்
உதுவென்னும் நடுநிலையில் நான்நிற்க மாயும்!நான்
எதுவென்னும் ஒருவினாவின் விடையாவும் போகஎஞ்சும்
எதுவுந்தான் மாயநிற்கும் “நான்”தானே என்ஸ்வரூபம்!

ஆணவம் எழுந்து
மனத்தை மூடி
ஆண்டவனின் உண்மை
மறைத்து
ஆடிய ஆர்ப்பாட்டம்
முடிக்க
ஞான வாளாய்
நாபியில் எழுகிறது
குண்டலி நாகம்!
மனத்தை மறைத்த
ஆணவம் மாய
எனக்கின்று
மறு பிறப்பு!
இருதய நேர்மையை நோக்கித்
தெளிந்த மனத்துடன்
வீறுடன் எழுகிறேன்
நான்!
ஆண்டவனின் உண்மையை
உண்ட நாபி
பூரித்திருக்கிறது!

இன்று
நவயுகம்
13 மறு பிறப்பு

நான்கென்னும் உருவமெல்லாம்
பதின்மூன்றாம் அருவப்பதியின்
திடமான திருக்காட்சி!
திருக்காட்சி மறைத்தே
இருமையில்
மனத்தை மருட்டுவான்
ஆணவப் பேயன்!
ஞான வாளால் அவனை வெட்டவே
மருண்ட மனமும் தெருண்டே
மறு பிறப்பெடுக்கும்!
நான்கில் ஒளிந்திருக்கும்
பதின்மூன்றாம் பதி “நான்
நான்“கில் வெளிப்பட்டுத்
திருக்காட்சி புலப்படும்!

எண் 13 படைத்தவனையும்(சுத்த சிவம்)
எண் 4 படைப்ப்புகளையும்(சுத்த சிவத்தின் அருட்சத்தித் திருவடிவஙகள், இதை
உணர்வதே மெய்யான உருவ வழிபாடு, கற்சிலைகள் தேவையற்ற, வெட்டவெளிக் கோயிலில்
உருவுள்ள ஒவ்வொன்றயும் மதித்து நேசிக்கும் அன்பின் தீவிரவாதம் வந்தால்
வன்பின் தீவிரவாதம் ஓர் நொடியில் ஒழியுமன்றோ!)
குறிக்கும் அருங்குறிகள்!
(ஒரு திட வடிவம் உருவாவதற்குக் குறைந்த பட்சம் நான்கு புள்ளிகள் வேண்டும்)

13ன் மறு வடிவமே 4(1+3)
“படைத்தவனும் படைப்புகளும் இரண்டல்ல, ஒன்றே”
என்பதற்கு மேற்காணும் கூட்டலே அத்தாட்சி!
“பதி”ன்மூன்றில் இருக்கும் “பதி
“நான்”கில் இருக்கும் “நான்” அன்றி வேறோ!
படைத்தவனும் படைப்புகளும் இரண்டென்னும்
மருட்காட்சியால் வருவதே மரணம்!
படைத்தவனும் படைப்புகளும் ஒன்றேயெனும்
திருக்காட்சி தருவதே பெருவாழ்வெனும் சாகா வரம்!

புரிகிறதோ
நவயுகத்தின் இந்நாள்
சொல்லும் திருச்செய்தி!

நவயுக நாட்கள் ஒவ்வொன்றும் கூட
நம் குருவாகலாம்!

குவலயம் முழுமையும் நிரம்பி வழிகிறது குரு தத்துவம்!
அஞ்ஞானக் குருடு நீங்க மெய்ஞ்ஞானம்
பட்டப்பகல் வெளிச்சமாய்ச்
சுடச் சுடத் தெரியும், புரியும்!