6. அதிசயப் பரிமாற்றம்

மதிப்பால் பொழிந்து பித்தனென் பேய்மனக்
கொதிப்பைத் தணித்து சித்தனாய் இன்றெனை
அதிசயப் பரிமாற்றஞ் செய்தார் நாயகன்!பால்
நதிஅருட் பிரவாகம் உய்ந்ததே நாபியடி!

படத்தை வைத்துக் கும்பிடுமோர் வழக்கால்
கடத்துள் கொட்டும் அருள்நதியாய் வற்றாது
வாழுங்குரு வள்ளற் பரம்பொருளை மறவாதீர்!
ஏழுநிலைச் செல்வம் புகும்மெய்யே வடலூராம்!

செத்து மடியும் நம்பொய்க் குரம்பை
சுத்த உடம்பாய் மின்னும் படித்தம்
வெள்ளங்கி அளித்தார் வள்ளல் பெருமான்!நம்
உள்ளெங்கும் நிகழுதே அதிசயப் பரிமாற்றம்!

ஈனப் புழுவாய் நெளிந்த கருமை
கூட்டுப் புழுவாய்த் தன்னுட் புகுந்தே
பட்டாம் பூச்சியாய் வெளிவரும் வண்ணம்
நம்மை மாற்றுமே அகத்தவம் திண்ணம்!

நற்புதுக் கோட்டை உன்மெய்க் கடமே!
மெய்வழிச் சாலை உன்உயிர்த் தடமே!
புவனைத் தாயார் உன்அகத் துள்ளே!
சிவமய மாவாய் சற்குரு சொற்கேள்!

நாபியில் கண்ட சத்திய தரிசனத்தால்
நாபியின் கீழே அதிசயப் பரிமாற்றம்!
குருமொழிப் பாலே வெளுக்குது மெய்யை!
அருளதை உண்டு களிக்குதே உள்ளம்!

பரஞான போதமும் தூயநன் நோக்கமும்
வரமாகக் குருபிரான் தேன்மொழித் தீட்சையும்
இருதய பூமியுஞ் சத்திய தரிசனமும்
அருண்மழை இற(ர)ங்கவே அதிசயப் பரிமாற்றம்!

நிராதாரப் பராகுண்டலி ஆறாதாரம் விழுங்க
தராதலத் துளேயெங்கும் அதிசயப்பரி மாற்றம்!
பராபரத் துளேபுக்கும் நிர்வாணப் பெருநிலை
நிராமயக் குருவள்ளல் உலகுய்ய அருளினான்!

குருமொழி பத்தும் ஒருமூன்றும் அருளி
கருமனம் வெளுத்து இருதயத்தே அடக்கி
இருவினை கொளுத்தித் திருமிகவே அளித்து
கருகும் மெய்க்கே மாயாநிலை தந்தான்!

அவத்தின் சிகரமாம் வன்மனத்தைத் திருத்தி
தவத்தின் உச்சியில் சின்மயமாய் நிறுத்தி
பவத்தின் கிடங்காம் மெய்யுடம்பை வெளுத்து
சிவத்தின் சத்திய அன்புருவைத் தந்தான்!

புழுவினும் இழிந்த வென்புன்மை மாற்றியருள்
எழுநிலை இறக்கி யென்னைத்தன் போல்மாற்றித்
தழுவியே பொய்ப்புணர்ச்சி போகம் அறவேயெனை
அழுத்தியே மெய்ப்புணர்ச்சி யோகந் தந்தான்!

சிற்றறிவின் பள்ளத்தில் கிடந்த சிறியேனை
உற்றெழுப்பி வெல்லத்தின் இனிக்கும் குருமொழியைக்
கற்பித்தே சித்தத்தைத் திருத்தி அருள்விளக்கி
சிற்பரமாய்த் தன்போல்எனை மாற்றி விட்டான்!

கன்மனத்தன் என்னை வெண்மனத்தன் ஆக்கிக்
கற்பூரமாய் அதனை இருதயத்திற் கரைத்து
நல்லருள் எழுமை என்மெய்யுள் இறக்கித்
தன்னுரு போன்றே என்னுருவை மாற்றினான்!

மாயுந் தேகத்தை மாயா மெய்யாய்
மாற்றும் யோகத்தை ஆகா வள்ளல்
மானுடம் உய்யவே ஈங்கே தந்தான்!
மாதவம் வெல்லவே தானே வந்தான்!

தயாநாயகப் பரம்பொருள் தனித்தலைமைப் பெரும்பொருள்
பராபரமாம் அரும்பொருள் இனித்திடுமோர் அருட்பொருள்
தராதலத்தே தான்இற(ர)ங்கியே மாயாநிலை அருளுதே!
நிராதாரத் தரமதாய்நம் ஆறாதாரம் மாறுதே!

அருட்புயல்தான் வீசுது கருணைமழை பொழியுது!
அறிவுமின்னல் மின்னுது தயவாய்இடி இடிக்குது!
புயலில்வினை நசியுது மழையில்மனங் கரையுது!
புத்திதெளியுது மின்னலில் இடிதிறக்குது இருதயம்!

பிறந்தால் இறப்பதே விதியென்ற பொய்யை
அறுக்கும் அறவாழி அளித்தார் வள்ளல்!
சிரமேல் எழுநிலை சிரங்கீழ் இறக்கி
அருட்பால் பொழிவித் தெனைமேல் ஏற்றினார்!

நிராதாரம் ஆறாதாரம் சந்திக்கும் மெய்வழியைச்
சிராதாரம் திறந்துப்பின் அறுபடியுள் இறக்கித்தன்
அவதார அருள்வடிவை மெய்க்குள்ளே புகுத்திஎனைத்
தவமலை மேலேற்றி மாயாநிலை தந்தான்!

நள்ளிரவில் உள்ளக் குகையுள் அருட்குரு
மந்திரத்தை
முழக்கி வன்மனம் அடக்கி
சித்தத்தில் இருதய அன்பாய் நிறைந்தான்!
கும்மிருட்டில் பட்டப் பகல் வெளிச்சம்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: