சற்குரு சரணம் – 2

வெளிக்குரு நாட்டம்
அழித்தெனை ஆண்ட
உட்குரு நாதா
சற்குரு சரணம்

அக்குரு இக்குரு
பல்லுரு வங்கட்
கப்பால் அருவம்
சற்குரு சரணம்

அக்குரு இக்குரு
எல்லாந் தாண்டிய
உக்குரு உள்மெய்(உண்மை)
சற்குரு சரணம்

வெளிக்குருச் செருகல்
பலவும் உருவும்
உட்குரு நாதா
சற்குரு சரணம்

வெளிக்குரு மாயைப்
படலம் கரைக்கும்
உட்குரு நாதா
சற்குரு சரணம்

இருக்கும் மெய்யுள்
இருதய உயிர்ப்பாய்
உள்ளவர் உத்தமர்
சற்குரு சரணம்

இல்லா இடங்களில்

எல்லாந் தேடியும்
சிக்கார் அருகர்
சற்குரு சரணம்

சழக்குச் சடங்கு
வழக்கங் கடந்த
அற்புத எளியர்
சற்குரு சரணம்

அணையுடை வெள்ளமாய்த்
தளையுடை அன்பதாய்
நெஞ்சகம் புரளும்
சற்குரு சரணம்

செந்தமிழ்ப் பாக்களாய்ப்
பொங்குமெய்ஞ் ஞானமாம்
நல்லளி பொழிவார்
சற்குரு சரணம்
(நல்லளி=நல்லமுதம்)

நல்லார் அல்லாவின்
நலங்கள் யாவுமே
அள்ளித் தருவார்
சற்குரு சரணம்

சங்கு சக்கரம்
தங்கும் அரிகை
வல்லபம் வழங்கும்
சற்குரு சரணம்
(அரிகை=திருமாலின் கை)

பரஞ்ஜோ திஐயா
தரம்யா வுமேவ
உச்சியைப் பிளப்பார்
சற்குரு சரணம்

அருவ நெறியுள்
உருவ ஆளவர்
உய்யும் மெய்வழி
சற்குரு சரணம்

அருவ குருவே
உருவ குருவினும்
வல்லார் என்பார்
சற்குரு சரணம்

உருவ குருக்கள்
பெருமை யாவும்
விஞ்சும் வித்தகர்
சற்குரு சரணம்

மெய்யே கோயிலாய்
நெஞ்சே மையமாய்க்
கொண்டார் ஆண்டவர்
சற்குரு சரணம்

கல்லாம் செம்பாம்
பொய்யுரு கடந்தே
மெய்யுரு உள்ளுறை
சற்குரு சரணம்

அன்பெனும் உணர்வாய்
நெஞ்சினில் உறைவார்
வல்லபர் அறிவர்
சற்குரு சரணம்

இருதயத் தாமரை
விரித்திடும் ஆயிரம்
அன்பிதழ் மணப்பார்
சற்குரு சரணம்

அங்குமிங் கெங்கும்
அலைவதை விட்டதும்
கையகம் பொருந்துவார்
சற்குரு சரணம்

நூலினும் மெலியமேம்
பாலமீ தேற்றியுள்
உற்றெனைத் தேற்றிய
சற்குரு சரணம்

மெய்யை விட்டே
மெய்யைத் தேடும்
பொய்வழி விலக்கும்
சற்குரு சரணம்

மெய்யைத் தொட்டே
உள்ளதோர் மெய்யை
உற்றுணர் மெய்வழி
சற்குரு சரணம்

பிரபஞ் சத்துளே
பிரம்மம் உள்ளதைத்
தெற்றெனக் காட்டிய
சற்குரு சரணம்

பிரம்மத் தந்தை
பிரபஞ் சஅன்னைத்
தன்னுளே காட்டிய
சற்குரு சரணம்

உலகைப் பழிக்கும்
கருத்த மனத்தை
அன்பால் வெளுத்த
சற்குரு சரணம்

இயற்கை மறுத்திடுஞ்
செயற்கை இயற்றுமென்
குற்றந் திருத்திய
சற்குரு சரணம்

பரஞா னபோதம்
சிரமேல் சேர்த்தே
மெய்வழி திறந்தார்
சற்குரு சரணம்

தூயநன் நோக்கம்
சேரநெற் றியில்திருக்
கண்ணைத் திறந்தார்
சற்குரு சரணம்

அகதீட் சையாய்
குருமொழி ஓதும்
மந்திர நாதர்
சற்குரு சரணம்

இருதய பூமியாம்
திருநிலை சேரவே
நெஞ்சந் திறந்தார்
சற்குரு சரணம்

சத்திய தரிசனம்
மெய்யகங் காணவே
பொய்களைக் களைந்தார்
சற்குரு சரணம்

அற்புத மாற்றம்
மெய்யுள் நிகழவே
உய்ந்தார் உயிராய்
சற்குரு சரணம்

ஜோதிநல் உருவாய்
பூமியில் யாம்எழ
மெய்யை உயிர்த்தார்
சற்குரு சரணம்

புகையெழு ஓமம்
புறத்தே எதற்கு
அகத்தவம் செய்யெனும்
சற்குரு சரணம்

மந்திரக் கூச்சல்
தந்திரப் பூசைப்
பற்றெலாம் அறுத்த
சற்குரு சரணம்

மோன மந்திரம்
யோக தந்திரம்
மெய்யகம் பகர்வார்
சற்குரு சரணம்

தேக யந்திரத்
தோங்கும் சிவமுஞ்
சத்தியுங் குவிநடு
சற்குரு சரணம்

செங்கல் குண்டமும்
செந்தீ ஓமமும்
பொய்யெனக் காட்டினார்
சற்குரு சரணம்

சக்கரக் குண்டமும்
குண்டலி ஓமமும்
மெய்யகம் காட்டினார்
சற்குரு சரணம்

நானே மெய்வழி
ஜீவனாம் மந்திரந்
தந்துமெய் புகுந்தார்
சற்குரு சரணம்

தூய இருதய
நேசக் கனியை
அங்கை யுள்வை
சற்குரு சரணம்

நித்திய ஜீவனை
இச்சகம் யாவரும்
பெற்றுய் வழியாம்
சற்குரு சரணம்

ஜீவா மிருத
ஞான ஸ்நானம்
செய்வார் உத்தமர்
சற்குரு சரணம்

பாப நாச
ரோக நிவாரணத்
தந்திர தாரகர்
சற்குரு சரணம்

இருதய ஹீரா
அருட்குகை யுள்ளே
குர்ஆன் ஓதும்
சற்குரு சரணம்
(ஹீரா – நபிகள் நாயகத்துக்கு குர்ஆன் வழங்கப்பட்ட குகை)

ஆணவப் பேயன்
மாயவே ஜெஹாத்
செய்யும் ஞானவாள்
சற்குரு சரணம்
(ஜெஹாத் – புனிதப் போர்)

மேனிலை யாவும்
தேகமே சேர
மெய்வழி திறந்தார்
சற்குரு சரணம்
(மேனிலை = பரஞான போதம், தூய நோக்கம், குரு மந்திர அக தீட்சை, இருதயத் திரு பூமி, சத்திய தரிசனம், அற்புதப் பரிமாற்றம், ஜோதி ஸ்வரூபம் ஆகிய நிராதார ஏழ்நிலை மெய் வழி = உச்சி முதல் முதுகடி வரை மெய்யுடம்பில் நிராதாரம் இறங்கும் சாலை)

பொய்க்குந் தேகம்
மெய்யாய் ஓங்கத்
தந்திரஞ் செய்தார்
சற்குரு சரணம்

என்னைத் தெருட்டி
எல்லாம் புகட்டும்
என்னக போதகர்
சற்குரு சரணம்

நயம்பட உரைத்து
நாயனைத் தெருட்டிய
உத்தம துரையார்
சற்குரு சரணம்

நாயன் = நாய் போன்ற நான்
உத்தம துரையார் = தயாநாயகப் பரம்பொருள்

ஆதி அப்பனுஞ்
சோதி அம்மையும்
என்னகங் காட்டிய
சற்குரு சரணம்

தன்னகந் திறந்து
அம்மை யப்பனை
நின்னகம் பாரெனுஞ்
சற்குரு சரணம்

மெய்யெனுங் கோயிலில்
நெஞ்செனுங் கருவறை
யுட்சிவ சத்தியாஞ்
சற்குரு சரணம்
(அனுமன் தேக ஆலயத்தில் நெஞ்சக் கருவறையைத் திறந்து அம்மையப்பனைப் பகிரங்கமாகக் காட்டினார், ஆக உன் தேகமே மெய்யான கோயில், உன் நெஞ்சமே, இருதயமே அக்கோயிலின் கருவறை, உள்ளே எழுந்தருளியிருக்கும் அம்மையப்பனே மெய்க்குயிரான மூலவர்!)

நில்லா உலகில்
நிற்கும் பொருளாம்
அன்பே சிவமாஞ்
சற்குரு சரணம்

எல்லா உயிர்களும்
நித்திய வாழ்வினில்
உய்ந்திடும் மெய்வழி
சற்குரு சரணம்

ஆதியில் உதித்த
மாசிலா மெய்ம்மை
மெய்யகம் உணர்த்துஞ்
சற்குரு சரணம்

நெஞ்சுக் குள்ளே
துஞ்சா துள்ளதோர்
அன்பின் கண்ணாஞ்
சற்குரு சரணம்

மார்புக் குள்ளே
நேச ஊற்றாய்ப்
பொங்கிடுஞ் ஞானஞ்
சற்குரு சரணம்

அபயம் என்றே
அகத்துள் அம்மை
யப்பனாய் அமர்ந்த
சற்குரு சரணம்

காமம் மயக்கங்
கோபம் மூன்றின்
நாமங் கெடுக்கும்
நாதன் சரணம்

ஞான(ல) முதல்வன்
நாம மெனக்கு
ஓதி வளர்க்கும்
மூலன் சரணம்

மெய்தன் னுள்ளே
நெஞ்சுள் ளுள்ளே
துள்ளும் அன்பாஞ்
சத்தன் சரணம்

மண்டைக் குள்ளே
அன்பாய் உற்றே
புத்தி விளக்குஞ்
சித்தன் சரணம்

தொந்திக் குள்ளே
கொட்டி அமுதை
மெய்யை உயிர்க்கும்
இன்பன் சரணம்

“எங்கே நோக்கினும்
அல்லா முகமதே”
அகமதில் ஓதும்
முக(ம்)மது சரணம்

மெக்கா மெய்யுளே
நெஞ்சகக் காபா
ரகசியம் அவிழ்க்கும்
நபிகுரு சரணம்

ஓமெனும் அல்லா
யாமென அமர்ந்த
அகமது திறக்கும்
முக(ம்)மது சரணம்

கருணா சாகரன்
அருளாந் தேசுளன்(தேசு உளன் = தேஜஸ் கொண்டவன் அதாவது ஜோதிமயன்)
தூதுவன் நபிகள்
நாயகஞ் சரணம்

நாமந் தனதில்
வேதச் சாரம்
அடங்கிய துரைக்கும்
முகம்மது சரணம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: