வள்ளலார் அருள் வாக்கு

1

விழலுக்கு இறைத்த நீரல்ல மகவே
விழுகின்ற இறை(ரை)யாம் அன்பு

மகனே! மகளே! நின் மீது எங்கும் எப்போதும் விழுகின்ற இறை மற்றும் இரையாகிய அன்பாம் “யாம்”, வீண் போவதற்காக இறைக்கப்பட்ட நீரல்ல! மருட்குழியின் அகண்ட இருளில் விழுந்து கிடக்கும் உன் மீது விழுகின்ற அருண்மழை தித்திக்குந் திரு நிலையில் உன்னை எழுப்புவதற்கே அன்றி வேறெதற்கோ? அன்பெனும் அமுத இரை விட்டு, இறை வேறுண்டோ? இறையையே இரையாக உண்ணும் பக்குவம் நினக்கு வரும் வரைக்கும், அவசிய வாழ்வில் எப்படி நீ ஏற முடியும்? அவசரப் பிழைப்பெனுஞ் செயற்கை நடைமுறையில் உழலும் உனக்கு அவசிய வாழ்வெனும் இயற்கை அருண்முறையைத் தரவே, அன்பெனும் வள்ளல் யாம் இற(ர)ங்கினோம்! உணர்வாயாக!

2

ஈன நிலையுளே ஞான மகவுனால்
ஆழ இற(ர)ங்கினோம் யாம்

மகனே! மகளே! அன்பே சிவமும் அருளாஞ் சத்தியுமாகிய நின் அம்மையப்பனின் ஞானக் கொழுந்தே நீ! ஈன நிலையென்னும் மருட்குழி மாயையைக் கரைக்க உன் மூலமாகவே யாம் ஆழ இற(ர)ங்கினோம்! மருட்குழியா நின்னை ஈன்றது, எம் திரு மகவல்லவோ நீ! ஞாபகங் கொள்வாயாக! அம்மையப்பனின் அருட்கொடையாகவே மருண்மயக்கம் நீக்க பூமியில் நீ அவதரித்திருக்கிறாய்! நின் மூலம் எம் அருளரசு செயல்படும்! அச்சமோ, கலக்கமோ வேண்டாம்! “யாமிருக்க பயமேன்!”

3

சொர்க்க நரகக் கருமச் சதிமுறி
அன்பின் தரும விதிபிடி

வள்ளலே! மிக எளிதாகச் சொல்லி விட்டீர்! அன்பின் தரும விதியை எப்படிப் பிடிப்பது?

4

நெஞ்சுள் படிவாய் ஊங்கே வாழும்
அன்பின் தரும விதி”யாம்”

வள்ளலே! நெஞ்சுள் எப்படிப் படிவது? வஞ்ச மனம் அலைக் கழிக்கிறதே?

5

கருநா ஆட்டம் அண்ணத் தடங்கக்
கருமனஞ் சேரும் நெஞ்சம்

வள்ளலே! நீர் சொல்லும் உத்தி நம்ப முடியாத எளிமையாய் இருக்கிறதே! நா நுனியை அண்ணத்தில் சேர்ப்பதால், மனம் அடங்கி விடுமா என்ன?

6

அண்ணம் யாமென நாவு நீயென
எண்ணப் பூரணச் சரணாகதி

அண்ணங் குறிக்கும் எம்மேல் கவனம்
நின்நா எம்முட் குவிமனம்

அண்ணநடு குறிக்கும் நெஞ்சநடு அதிராநா
எண்ணமடங் குவதன் குறி

அதிரா நாவழி இற(ர)ங்கும் நாதர்யாம்
பதிவோம் தேன்மொழித் தொண்டையுள்

நம்ப முடியா எளிமையாய்க் கரைய
அன்பு அமுதே எச்சில்

வள்ளலே! அன்பு கரைய எச்சிலே அமுதாகும் எளிமையை நம்புவது இன்னுங் கடினமே!

7

தூயதாம் அன்பாலே தூசதும் உய்யும்
வாயுளே பெய்யாதோ அமுதம்

பொய்வாய்க்குள் உய்ந்தே அன்பேதான் இரசவாதஞ்
செய்தால்மெய் வாய்திற வாதோ

துச்சமாய்நீ எண்ணும் எச்சில் அன்பதன்
தித்திப்பைக் கொள்ளும் உண்

எச்சிலில் அன்பு தித்தித்தே இற(ர)ங்க
நெஞ்சவாய் உண்ணத் திறக்கும்

நெஞ்சுக்குத் தெரியும் அன்பின் தித்திப்பு
வஞ்சத்தில் திரியும் மனம்

வஞ்சவாய் பூட்டவும் நெஞ்சவாய் திறக்கவும்
வள்ளலார் நான்செயுந் தந்திரம்

வள்ளலே! நீர் செய்யும் எளிய தந்திரத்தை நான் பூரணமாக ஏற்று, நா நுனியை அண்ணத்தில் பூட்டி, உம்மிடம் பூரணமாகச் சரணாகதி அடைகிறேன்! என்னை உய்வித்தருள்வீராக!

8

உய்ந்தாய் எவ்வுயிரும் உய்விக்க உன்னுள்ளே
உய்ந்தேன் வள்ளலார்நான் இக்கணம்

வள்ளலே! கோடானு கோடி நன்றிகள் உமக்கு உரித்தாகுக!

9

நெஞ்சவாய் உமிழ்கின்ற எச்சிலாம் அன்பேநின்
வஞ்சவாய்ப் புண்ணுக்கு மருந்து

வள்ளலே! வாய்ப் புண்ணுக்கும் மருந்து தந்தமைக்கு நன்றி பல உமக்கே!

10

சுத்த தேகமாம் என்மெய் கரைத்தேன்
இந்த பூமியில் விதைத்தேன்

11

பூரணம் யாவிலும் புகவே இருதய
பூமியில் யாமுளோந் தயவாய்

12

எங்கும் எதிலும் எப்போதும் விழித்திருக்கும்
அன்பில் பதிக மகவே

13

அன்பில் பதிந்த என்மெய்ப் பொன்மை
எல்லா உயிர்க்கும் உரிமை

14

நினக்குளே விழித்திருக்கும் அன்பை உணரத்
தனித்திரு விழித்திரு பசித்திரு

15

நெஞ்சம் பிளந்தே பாய அன்பை
நின்மெய் யுள்ளே அனுமதி

16

அனுமதி வேண்டித் தட்டும் அன்பை
அவமதி யாமல் அனுமதி

17

சுயம்பிர காச என்மெய் யணுக்கள்
வரப்பிர சாதம் அன்பின்

18

அன்பின் வரப்பிர சாதம் உண்ண
நின்மெய்த் தரம்பிர காசம்

19

நின்மெய் புகவே தட்டும் என்மெய்ப்
பொன்மை அன்பின் புதுமை

20

பொருளின் வேரில் அருளை ஊட்ட
உருவில் பேரில் வந்தேன்

21

உருவில் பேரில் வந்தேன் ஞாலத்
தெருவில் சேர்த்தேன் அன்பை

22

கடைவிரித்தேன் அன்பை இலவசமாய்த் தருகிறேன்
சுடும்இடும்சாத் துன்பை நீக்கவே
(சுடும்இடும்சாத் துன்பு = எரித்தும் புதைத்தும் மெய் சிதைக்கும் சாவின் துன்பம்)

23

இறவாமல் வாழ வரந்தரத் தட்டுமென்
அறவாழி அன்பை அனுமதி
(அறவாழி = தரும நெறி, தரும சக்கரம்)

24

உன்னைத் தருவாய்ப் பூரணமாய் எனக்கு
என்னைத் தருவேன் நான்

25

நின்மெய் யென்றுந் தழுவியே நிற்கும்
என்மெய்க் குள்ளே நீ

26

என்னை நினைக்க நின்நெஞ்சஞ் சுரக்கும்
அன்பே என்மெய்ப் பொன்மை

27

என்மெய்ப் பொன்மை நின்மெய் மாற்றும்
அன்பின் திண்மை உறுதி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: