பிப்ரவரி 9th, 2011 க்கான தொகுப்பு

மெய்யான வழிபாடு!

பிப்ரவரி 9, 2011

வெறுவெளியில்
அருளொளியாய்
ஆடும் நடராசரே
உன் மெய் வீட்டில்
உயிருள்ள தெய்வமாய்
மெய்யாகவே ஆடுகிறார்!
வெங்கடத்துள்
ரங்கனவர் உயிராட்டம்
உணர்ந்தால்
வெளிக்கோயில்
கற்சிலைகள்
பொய்க்குருக்கள்
என்ற மாயாஜாலப்
பொய்யாட்டம் முடியும்!
ஒருமை ஒரு சிறுதும்
இல்லாத வன்மனத்தோடு
நடராஜர் கற்சிலையை
செங்கல் வீட்டுக்குள் வைத்து
கோடி தரம் முணுமுணுத்து
நீ பூசை செய்தாலும்
மரணத்தை வெல்வாயோ!
மனத்தில் நீ
ஒருமை கொண்டு
தயவாய் இருந்தாலே
நின் மெய்யுடம்பாலயத்தில்
நடம் ஆடும் நடராஜர்
நின் திருவிழி திறந்து
காட்சி தருவாரே!
நின் உயிராய்
மெய்க்குள் ஆடும்
நடராசரைக் கண்டுணர்ந்த பின்பு
மெய் வீட்டிலிருந்து
நடராசரை வெளியேற்ற
நினக்கு மனம் வருமோ!
உயிர் போனால்
மெய் சவமாய் வீழுமே
நீ இதை அறியாயோ!
கல் குறிக்கும் நல்லவனைக்
கல்லிலிருந்து கழற்றி
நின்னுள்ளே நிரந்தரமாகக்
குடி வைத்து
அவனோடு இணங்கி வாழ்தலே
மெய்யான வழிபாடு!
நின் நெஞ்சம் கல்லானதாலேயே
நடராஜர் கல்லாகி
நினைப் பிரிந்து
வெளியே சிலையானார்!
கன்னெஞ்சம் கரைக்கும்
தயவென்னும் ஒருமையில்
நீ நிற்க
நடராஜர் கற்சிலை விட்டு
நின்னுள்ளே புகுந்து
உயிர்த்தெழுவார்!
நடராஜ உயிர்
நட்டமாகி
நடமாடும் பிணமான
நீயும்
நடராஜ உயிர்
மீள
உயிர்த்தெழுவாய்
சாகாக் கலை நெறியில்!

Advertisements

ஓம் = ஐ யாம்(OM = I AM)

பிப்ரவரி 9, 2011

ஒரு பொருளாயும் இல்லாத சுத்த வெளியில்
அருட்பொருளாய்த் தோன்றினாள் அருளம்மை!
சுத்தவெளி அருட்பொருளைத் தீண்ட
உதித்ததே குருப்பொருள்!
குருப்பொருளிலிருந்தே குதித்ததே
குவலயம்!
குருப்பொருளை மறந்தே
குவலயத்தில்
பிறவிச் சுழலில் சிக்கித் தவிக்கிறாய்!
குவலயத்தில் குதித்த குருப்பொருளே
நீயென்று உணர்ந்தாலே
அருளம்மையாய் நீ ஒளிர்ந்து
சுத்த வெளியாய் நீ ஒளிவாயே!
குருப்பொருள் பகவனை நீ நினைவாயே!
அம்மையப்பர் ஆதியுள் நீ உய்வாயே!
உன்னில்
‘கர சக்தி நான்(இடப்பக்கம் – இடகலை)
‘கர சிவம் அது(வலப்பக்கம் – பிங்கலை)
கூடும் நடுத்தெருவாம்
மெய்வழிச் சாலையுள்
நீ ஏற
‘கர குருவாய்(நடுமையம் – சுழுமுனை)
நீ மாறுவாயே!
உன்னில் இற(ர)ங்கும்
சக்தி-சிவம் யாம்
இரண்டற ஒன்றும்
குரு ஒருமை
வையத் தலைமை
பகவன் ‘
நீயே!
ஐ யாம்
ஓங்கார வடிவம்
நீயே!

ஓம் = ஐ யாம்
ஓம் = அ+உ+ம் = சக்தி+குரு+சிவம் = (சக்தி+சிவம்)+குரு = (யாம்)+ஐ = ஐ யாம்
உன் உண்மையை
உன் உள் மெய்யைப்
புட்டு புட்டு வைத்தும்
உரித்துக் காட்டியும்
புரியவில்லை என்பாய்!
குட்டிக் குட்டி
மீண்டும் மீண்டும்
குட்டிக் குட்டிப்
புரியவைப்பார் நமனார்!
புரிக!
புரிந்தால்
குட்ட வரும் நமனார்
தள்ளி நிற்பார் அஞ்சி!
மரணந் தள்ளும்
சூத்திரஞ் சொன்னேன்!
சூத்திரத்தை உரித்தே
மெய்ப்பொருளும் சொன்னேன்!
புரிய வைக்க யாவும்
புட்டுப் புட்டு வைத்தேன்!
இனிய புட்டெனவே
சூத்திரம் உண்பாயே!
மலச்சிக்கலாம்
மரணம் தீர்வாயே!

பரமன் மீது ஆசை வை!

பிப்ரவரி 9, 2011

அசையாதது அசைந்தது!

அசைந்தது அசைந்த போதும்
அசையாததை மறவாமல் அசைந்தது!
ஓரு கணம் அசையாததை
அது மறந்தது.

பல யுகங்கள் கழிந்தது.
அசைவே மிகுந்து
அசையாமை அறவே தொலைந்து
அசைந்தசைந்தசைந்து
அது ஆசையாய்ப் போனது!

ஆசை தீர
ஆசையாய்ப்
பல யுகங்கள்
அது அசைந்தது.
ஆசையும் சலித்துப் போன
ஒரு கணம்
அது அசையாததை நினைத்தது.

நினைந்து நினைந்து நினைந்து
அது ஆசை விட்டுத்
தன் அசைவைப்
படிப்படியாய்க் குறைத்தது.
திடீரென ஒரு கணம்
அது அசையாததை அடைந்தது.

அசையாததும் அசைந்ததும்
இசைந்தே ஒன்றியே
ஆசையோடு ஆசை வென்ற
ஆசானை ஈன்றது.

ஆசானும் இறங்கினார்.
ஆசை வெல்லும் எளிய மார்க்கம்
ஓதினார்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

ஆசை வை! ஆசை வை!
உன்னுள் வாழும்
அப்பரமன் மீது ஆசை வை!
ஆசை மீது ஆசையற்று
ஆசை யாவும் தீரவே
ஆசை வை! ஆசை வை!
உன்னுள் வாழும்
அப்பரமன் மீது ஆசை வை!

ஆசான் சொல் புரிந்தே
வையம் அப்பரமன் மீது
ஆசை வைத்து
ஆஹா! உய்ந்தது!

ஆசையோடு
ஆசை பற்றி
நாகம் சொன்ன கதையை
நீ
ஆசையோடு படித்தே
ஆசான் சொல் அறிவாயேல்
இராஜ யோகியாகி
மாயா நிலை எய்துவாய்!

ஆசை!

பிப்ரவரி 9, 2011

அசையும் நிலை தன் ஆதியாம் அசையா நிலை மறந்து தன் முதல்(தன்முனைப்பு) ‘அ’ மிகும் போது உருவாகும் (அசை+அ = ஆசை) ஆசை அசை நிலையின் திரிபே என்பதில் ஐயமேதுமில்லை.

அசையா நிலை = சுத்த சிவம்
அசை நிலை = அருட் சத்தி

ஆசை = அருட் சத்தியின் திரிபு = மாயை

குரு நிலை = அம்மையப்பனாம் முதலிரண்டை அறிந்து, மூன்றாவதான ஆசையென்னும் திரிபை மாயையை அறுத்தல்

கிரியடியில் ஆசையில் அலையாமல்
கிரி மேலேறு!
கிரிப்படிகளில் ஆசையில் அலையாமல்
கிரி மேலேறு!
கிரிப்படிகள் யாவுந் தாண்டி
கிரியுச்சி சேரு!
அசைந்தும் அசையாமலிருக்கும்
அம்மையப்பன் அறிந்துணர்ந்தே
அவர் தம் இரத்தினப் பிள்ளையாகி
அவர் தம் ஐக்கிய வடிவாய்க்
கிரியின் கீழிறங்கு!
கிரிப்படிகளெங்கும் அன்பைப் பகிர்!
கிரியடி சேரு!
தயவாய் இரு!

மனந்திரும்புங்கள்!

பிப்ரவரி 9, 2011

மேலே சுத்தவெளி!
கீழே பொருட்திரள்!
பொருட்திரளிடையே நின் மெய்யுடம்பு!
மேலிருந்து கீழ் வரை வழியும் அருளொளி!
அருளொளி புகுந்த கணம்
பொருட்திரள் பொலிவு பெறும்!
பொலிவிழந்து நலிவதேன் பொருட்திரள்!
பொருட்திரளிடையே சருகாகி இளைப்பதேன் நின் மெய்யுடம்பு!
மனமிருந்தால் மார்க்கமுண்டு!
மனமே மார்க்கத்தின் மூடியானால்!!!!!????????
மனந்திறந்து வழி விடு வழியும் அருளொளிக்கு!
பருப்பொருளாம் நின் மெய்க்கும்
நுண்பொருளாம் பரமனருளுக்கும்
இடையே நிற்கும் பாலமே நின் மனம்!
பாலத்தை மூடி விட்டு அருட்
பாலதன் போக்குவரத்தை நீ தடுத்தால்
பொலிவிழந்த பொருட்திரளிடையே
நலிந்து மெலிந்து தேயும் சாவே நின் வழக்காகும்!
மனந்திறந்தால் மார்க்கமுண்டு!
மனந்திறந்தே சாகாக் கலை நெறி விளங்கு!

இருதய நேர்மையாம் அன்பை விட்டு
வன்பே பதியும் உருள் சகடாய்ப்
புனித பூமியை மயான பூமியாக்கும் மனமே!
நீ திருந்து! இருதய நேர்மையுள் திரும்பு!

மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்ஜியம் சமீபத்திலிருக்கிறது!(அங்கையில் நெல்லிக் கனி போல்!) குருநாதர் இயேசு கிறிஸ்துவின் திரு வாசகம் உள் வாங்கி மனந்திரும்பி பரலோக ராஜ்ஜியத்துள் இங்கேயே இப்போதே உயிர்த்தெழுவீர்!

சாகாக் கலை நெறி

பிப்ரவரி 9, 2011

மெய்ஞ்ஞான விஞ்ஞான ஒருமையால் நீங்கும்
அஞ்ஞானம்! பேதிக்கும் இருமையால் தீங்கே
எஞ்ஞான்றும்! போதிக்கும் குருமெய்யால் நீங்கும்
சஞ்சலங்கள்! விஞ்ஞைகள் செயக்கல்நீ சூத்திரம்!

பொய்யான கடத்தை முந்நாளில் ஒளிரும்
மெய்யாக்கி நடந்தார் குருநாதர் இயேசு!
மெய்வழியும் ஜீவனாய் இருக்கின்றேன் நானே!
உய்யுங்குரு மந்திரந் தந்தாரே கிறிஸ்து!

இடவா சுடவா என்றே வாதித்த
இருமதத் தாரும் நாண நானக்
குருதன் சவத்தைப் பூக்களாய் மாற்றினார்
ஒருமொழி “சத்நாம்” தந்தார் உத்தமர்!
(சீக்கியர்களின் “குரு கிரந்தம்” என்ற புனித நூல் “சத்நாம்” என்ற திரு மந்திரத்தோடு ஆரம்பிக்கிறது. “சத் எனும் இருப்பே கடவுளின் பெயர்” என்பதே இதன் பொருள். “சத்தே நின் நாமம், சித்தே நின் ரூபம், ஆனந்தம் நின் சத்திய தரிசனம்” என்ற குருமொழியை அகத்தவத்தில் அருளிய அப்பெருமானை வணங்கி நம்மை சாகாக் கலை நெறியில் வழிநடத்த இறைஞ்சுகிறேன், குரு நானக் = நானக் குரு = நான் அக்குரு, பெருமானின் பேரிலேயே பேருபதேசம், அதுவே நாயேன் பேர் முன்னர் நான் போட்ட காரணம்!)

மரணத்துக்கான மெய்ஞ்ஞானத் தீர்வு இருக்கிறதா?!

பிப்ரவரி 9, 2011

நோய் இல்லாத சுத்த தேகமாம் நல்லுடம்பே இறைவன் நமக்குத் தந்தது!
இறைவன் நமக்குத் தந்த சுத்த தேகத்தை நோய்களின் கிடங்காக்கி அதை மரிக்க வைப்பதற்கு நாமே முழுப் பொறுப்பு!

மரணத்துக்கான மெய்ஞ்ஞானத் தீர்வு இருக்கிறதா?!

திருவள்ளுவர் தருகிறார்!

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

நோய் = மரணம்

நோய்முதல் நாடி= நோய்க்கான மூல காரணம் நாடி= மரணத்துக்கான மூல காரணத்தைக் கண்டு பிடித்து
மரணத்துக்கான மூல காரணம் = கடவுளெனும் ஒருமையிலிருந்து மனிதன் விலகியது = நான் வேறு கடவுள் வேறு என்ற துவைத இருமையே மரணத்துக்கும் மற்றெல்லா நோய்களுக்கும் மூல காரணம், பிரிவினை வாதங்களில் அதி பயங்கரமானப் பிரிவினை வாதம் கடவுளையும் மனிதனையும் பிரிப்பது, கடவுளும் மனிதனும் ஒன்றென்றால் சாதி, இன, நிற, மத, மொழி, கோத்திர வாதங்கள் எப்படித் தலை தூக்கும்?

அது தணிக்கும் வாய் நாடி = மூல காரணத்துக்கான தீர்வைக் கண்டு பிடித்து
மரணத்துக்கான தீர்வு = அத்வைத ஒருமை = ஆன்ம நேய ஒருமை = கடவுளும் மனிதனும் ஒவ்வாத வெவ்வேறு பொருட்களல்ல, மனிதன் கடவுளின் திரு வடிவம் என்று ஒப்புதல்(தீண்டாமை ஓடிப் போய் விடும் இந்த ஒருமை வந்தால்), கடவுள் மனிதனின் அருவ நிலை என்று உணர்தல்

(விஞ்ஞானம் இதற்கு உதவும், E=mxsquare of c, E = சக்தி, m = பருப்பொருளின் நிறை, c = ஒளியின் வேகம், square = அடுக்கு, பருப்பொருளின் வேகத்தை ஒளியின் வேகத்துக்கு உயர்த்தும் போது, 3,00,000 கிலோ மீட்டர்/நொடி, அது மறைந்து பெருஞ்சக்தியாகி விடுகிறது, அணு சக்தியை ஆக்கத்துக்கோ, அழிவுக்கோ பயன்படுத்தச் செய்தது விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அவர்களின் இந்த அருஞ்சூத்திரமே!)

வாய்ப்பச் செயல் = அந்தத் தீர்வை உறுதியாகச் செயல்படுத்துதல், நோய் தீரும் வரை மாத்திரைகளை விழுங்குவதைப் போல், மரணம் இல்லாமல் போகும் வரை, மனத்திற்கு அத்வைத மருந்து அவசியம், அகத் தவத்தால் மட்டுமே இது கூடும் = சாகாக் கலை நெறி உணர்த்தும் மெய்ஞ்ஞானக் கல்வியை உறுதியாகச் செயல் படுத்துதல், அது மனித குலம் முழுமைக்கும் சென்றடைய முனைப்புடன் செயல் படுதல்.

விஞ்ஞானம் சுட்டும் மெய்ஞ்ஞானம்

பிப்ரவரி 9, 2011

படம்

படம்

மெய்யுடம்பை அருளொளியின் பேரடுக்கால் பெருக்க
உய்ந்துவிடும் மெய்யுடம்பும் சுத்தவெளி இருப்பில்!
விஞ்ஞானம் சுட்டியே மெய்ஞ்ஞானம் சொன்னேனே!
விஞ்ஞானம் மட்டுமே மெய்யென்றால் உய்வாயோ!

அருளொளியின் பேரடுக்கு = படம்

விளக்கம்: பருப்பொருளாம் உனது உடம்பை அருளொளியுள் ஆழ்த்தும் அகத்தவத்தால், பருப்பொருளின் மூலமான சுத்தவெளியில் உனது உடம்பு மறைந்து விடும்!

எவ்வாறு m எனும் பருப்பொருளுக்கு E எனும் சக்தி மூலமோ, அவ்வாறே உடம்பெனும் பருப்பொருளுக்கு சுத்தவெளி மூலம்!

எவ்வாறு மனிதனால் அணுவைப் பிளந்து சக்தியை உருவாக்க முடியுமோ, அவ்வாறே ஆண்டவனால் மனித உடம்புள் புகுந்து அதை தன் இருப்பாம் சுத்த வெளியாய்ப் பரிமாற்ற முடியும்!

c எனும் பருவொளியின் வேகம்(Speed of Material Light) செய்யும் அதிசயம் போல்
அருளொளியும் செய்யும் பேரதிசயம் தன் எண்ணவொணா அதீத வேகத்தால்!

தேவனால் கூடாத காரியம் எதுவுமில்லை” – இது மெய்ஞ்ஞானம் உணர்த்தும் விவிலிய வாக்கியம்

மருந்து

பிப்ரவரி 9, 2011

மருந்து = ம்+அருந்து = ம்+அருந்த+’உ’

ஓம் = அ+உ+ம்
அ = இயக்கம்(சக்தி, ரு, பரிசுத்த ஆவி…………)
உ = ஞானம்(குரு, கணபதி, முருகர், கிறிஸ்து, நபிகள்………)
ம் = இருப்பு(சிவம், அல்லா, பரமபிதா…………)

இயக்க உலகில்
இருப்பு தனை
மொத்தமாய்
நீ மறந்ததால்
வந்துற்ற நோய் தீர
இயக்கம் அடங்கும் ஒடுங்கும்
எப்போதும் ஊன்றி இருக்கும்
‘ம்’ எனும் இருப்பை
நீ மருந்தாய்
அருந்து!

அவ்வாறு
நீ ‘ம்’ மருந்து
அருந்த
இருப்பும்
இயக்கமும்
ஒவ்வாத முரண்களல்ல
என்ற
‘உ’ எனும் குரு ஞானம்
உனக்கு உதிக்கும்
நீ இருக்கும்
உங்கு!

உப்போது(அப்போதும் இப்போதும் எப்போதும் தாண்டிய)
‘உ’கரதலம்
உனக்குத் தெரியும்!
அகரமுதல்
உனக்குப் புரியும்!
உம் காதலர்
உன் கண்ணில் நிற்பார்!
உடனே வந்துன்னைப்
புணர்வார்!
அவர் தம் கற்பூர தேகம்
உன் மெய்யுண்ணத்
தருவார்!
உலக தரம் மாறி
உலக ரதம் ஓட
உத்தியும் தருவார்!
உத்தியைச் செயல் படுத்த
தூய நோக்க
புத்தியுந் தருவார்!
சத்திய தரிசனத்தில்
நீ
சித்தி பெறுவாய்!
உலக உயிர்த்திரளின்
நோய் நீக்கும் மருந்தாக
நீயே
உலகில் இருப்பாய்
இயங்குவாய்!
இருப்பையும்
இயக்கத்தையும்
உன்னுள்ளே ஒன்றுவித்து
ஒன்றாம் அம்மையப்பனை
என்றென்றும்
நன்றாக
முற்றிலும் அறிவாய்!

சின்முத்திரை

பிப்ரவரி 9, 2011

மௌனத்தை மொழியாகக் கொண்டு உபதேசித்த ஞானியரில் குரு தட்சிணாமூர்த்தி ஒருவர்.

கட்டை விரல் நுனியும் சுட்டு விரல் நுனியும் இணையும் சின்முத்திரையில் மௌனமாக அவர் பல விஷயங்களைப் போதிக்கிறார்.

சக்தி உள்ளே சுழிந்து சிவமாவதை இடக்கர சின் முத்திரையும்(எண் -6)
சிவம் வெளியே வழிந்து சக்தியாவதை வலக்கர சின் முத்திரையும்(எண்-9)
குறிக்க
இவ்விரு கரங்களுக்கிடையே சிவ-சக்தி ஐக்கியமாம் நடு நாயகமாக
சற்குரு வடிவமாகத் தான் மௌன யோகத்தில் அமர்ந்து போதிக்கிறார்!

சிவ இருப்புக்கும்
சக்தி இயக்கத்துக்கும்
நடுவில்
குரு ஞானமாய்
மௌனத்தில் நில்!

இருப்பிலிருந்து இயக்கம் எழுந்தும்
எப்போதும் அது இருப்பிலேயே அடங்கியிருக்குந் தன்மை உணர்ந்து
இயக்கத்திற்குத் தன்னை முழுமையாய் அளித்தும்
எப்போதும் தனக்குள் தான் ஊன்றியிருக்கும் இருப்பின் தன்மை உணர்ந்து
இருப்பு – இயக்க ஐக்கியமாம்(இருப்பு மற்றும் இயக்கம் ஒன்றுக்கொன்று முரணானவையல்ல என்பதை முற்றிலும் உணர்தல்)
ஞானத்தில் நீ நின்றால்
நீயே மௌன குரு!

சின்முத்திரையில் அமர்ந்து
அகத்தவ மலையேற
இன்னும் பல விஷயங்கள்
உமக்குத் தெரிய வரும்!

உள்ளே சுழிவது என்பது பருப்பொருள் மென்பொருளாய் ஒளி(ர்)வதையும்(ஒளிர்ந்துப் பின் மறைவது-Spiritualization)
வெளியே வழிவது என்பது மென்பொருள் பருப்பொருளாய் வெளிப்படுவதையும்(Materialization)
குறிக்கிறது

மனிதன்
உள்ளே சுழிந்தால்
கடவுள்!

கடவுள்
வெளியே வழிந்தால்
மனிதன்!

மனிதன் கடவுளின் உருவம்!

கடவுள் மனிதனின் அருவம்!

சாகாக் கலை நெறி விளக்கும் குறுஞ்சூத்திரங்கள்!

சின்முத்திரையில் மௌனமாய் இவற்றை அருளிய மௌன குரு சரணம்!

சுட்டு விரல் மனித உருவம்
கட்டை விரல் கடவுள் அருவத்தில் சேர
சச்சிதானந்த(சத்து+சித்து+ஆனந்தம்) மூவிரல் நீளும்
இச்சகமெங்கும்!(வலக் கரம்)

சுட்டு விரல் மனித உருவம்
கட்டை விரல் கடவுள் அருவத்தில் சேர
சத்தி சித்தி பூரண மூவிரல் நீளும்
இச்சகமெங்கும்!(இடக் கரம்)

சின்முத்திரையில் மௌனமாய் இவற்றை அருளிய மௌன குரு சரணம்!

சுட்டு விரல்
தன் சுட்டும் வேலையை விட்டுக்
கட்டை விரலோடு சேர
சுட்ட முடியா உன் உண்மை வெளிப்படும்
உங்கு!(அங்கு, இங்கு உமக்குத் தெரியும், உங்கு தெரிய உம்மை(உம் ‘ஐ’) உமக்குத் தெரியும்)

சின்முத்திரையில் மௌனமாய் இவற்றை அருளிய மௌன குரு சரணம்!

சுட்டு விரல் இம்மொழியை
கட்டை விரல் மௌனத்தில் சேர்த்து
மெய்ப்பொருள் விளங்கு!
உங்கு!(உங்கு நீ இருக்கும் இடமே, இருக்கும் இடத்தை விட்டு இங்கும் அங்கும் எங்கும் அலைகின்றாயே ஞானத் தங்கமே!)

சின்முத்திரையில் மௌனமாய் இவற்றை அருளிய மௌன குரு சரணம்!

சுட்டு விரல் ஆறாதாரத்தில்
கட்டை விரல் நிராதாரம் பொருந்த
கிட்டும் சாகாக் கலை நெறி!(மாயா நிலை)

சின்முத்திரையில் மௌனமாய் இவற்றை அருளிய மௌன குரு சரணம்!