திருமூலர் எனக்கு உபதேசித்த அதிசயம்!

ஆங்கிலத்தில் நான் எழுதியிருந்த சமர்ப்பண தியானத்தை, நான் தமிழ்ப்படுத்த முயன்ற போது மிகவும் சிரமப்பட்டேன். பல மாதங்கள் முயன்றும் முடியவில்லை. ஆனாலும் முயற்சியை விடவில்லை. ஒரு நாள், அண்ணா சாலையிலுள்ள “ஹிக்கின்பாதம்ஸ்” புத்தகக் கடையில், திருமந்திரப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே, ஐயன் திருமூலரிடம் வேண்டினேன்: “எனக்கு 3000 மந்திரங்களைப் படிக்க நேரமில்லை. இந்த “நான்” பற்றிப் பட்டென்று விளங்குமாறு ஒரு மந்திரம் அருள மாட்டீரா?” சட்டென்று வந்தது பதில், நான் புரட்டிய புத்தகப் பக்கத்தில்:

நானென்றுந் தானென்றும் நாடினேன் நாடலும்
நானென்று தானென்று இரண்டில்லை யென்பது
நானென்ற ஞான(ல) முதல்வனே நல்கினான்
நானென்று நானும் நினைப்பொழிந் தேனே.

என்ன அருமையான விளக்கம். அன்றிரவே தமிழில் இத்தியானத்தை எழுதி முடித்தேன்.

நான் ஆணவமில்லை. நான் என்ற இறைப் பொருளை, “இன்னது” என்ற ஒரு குறுகிய அடையாளமாக மனிதன் மாற்றும் போது, சிறுமைப் படுத்தும் போது, உருவாகும் தான் என்பதே ஆணவம். “இன்னது” என்று எண்ணற்ற பல குறுகிய அடையாளங்கள் இருப்பதால், ஆணவம் போடும் ஆர்ப்பாட்டக் கோலங்கள் எண்ணிலடங்கா.

இந்த நான்கு வரிகளில் ஒரு ஞானியின் சுய சரிதம் அடங்கி விடுகிறது.

பல பிறவிகளாக நான் என்ற இறை நிலை, தான் என்ற ஆணவ நிலை என்ற இருமை அதாவது துவைத நிலையில் நாடினேன். இவ்வாறு பல பிறவிகளாக நாட, ஒரு பிறவியில் நான் பக்குவமடைந்த போது, நான் என்ற இறை நிலை, தான் என்ற ஆணவ நிலை என்ற இருமை அதாவது துவைதம் பொய்யென்றும், நான் என்ற இறை நிலை ஒருமையே அதாவது அத்வைதமே மெய்யென்றும், ஞானத்துக்கும் ஞாலமாகிய இவ்வுலகத்துக்கும் தலைமைப் பொருளாகிய நான் என்ற இறை நிலை ஒருமையே எனக்கு அறிவித்தது. தான் என்ற ஆணவ நிலையாகிய எல்லா ஆர்ப்பாட்ட நினைப்புகளையும்(திருமூலர் என்ற நினைப்பையும் கூட) ஒழித்து நான் நானே என்ற பேருணர்வுப் பேரிருப்புப் பேரறிவு நிலையில் நான் அடங்கினேன்.

இவ்விளக்கம் திருமூலர் எனக்கு அருளியது. இது எந்தப் புத்தகத்திலும் உங்களுக்குக் கிடைக்காது. “நான் என்ற நினைப்பையே நான் விட்டேன்” என்ற முற்றிலும் முரணான கடைசி வரிக்கான விளக்கம் பல புத்தகங்களில் இருக்கும். அதற்கு முந்தைய வரியைப் படியுங்கள், “நான் என்ற ஞான(ல) முதல்வனே நல்கினான்” என்று உறுதியாகக் கூறுபவர், அம்முதல்வனை எப்படி விட்டு விடுவார், யோசிக்க வேண்டும். திருமூலர் வாசகத்தை அறிந்தால் உண்மை விளங்கி விடும்.

“நானென்றிருப்பதன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே” என்பதே அது. இவ்வாசகம் திருமந்திரத்தில் இல்லை. என் முதிர்ந்த உறவினர் ஒருவர், எம் உறவினர் ஒருவரது திருமணத்தின் போது, திருமூலர் வாசகம் உனக்குத் தெரியுமா என்று கேட்டு, நான் தெரியாதே என்ற போது, இவ்வாசகத்தை எனக்கு அருளினார். அம்முதியவர் சில மாதங்களுக்குப் பின் இறைவனைச் சேர்ந்தார். நான் என்ற மெய்ப்பொருளைப் பற்றி எனக்கிருந்த ஐயங்கள் யாவும் அறவே நீங்கின, திருமூலர் வாசகத்தால். அதுவும் அம்முதியவர் எனக்கு அறிவிக்கவில்லை என்றால், இவ்வரிய வாசகத்தை நான் அறியாமலே இருந்திருப்பேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: