மார்ச் 2011 க்கான தொகுப்பு

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 74

மார்ச் 31, 2011

முள்ளுக்கு முகஞ்சுளிக்கும் மலருக்கு முகம்மலரும்
உள்ளத்தை அகங்கிடத்தித் திருத்து

நியாயமே ஆயினுஞ் சினம்வயப் பட்டால்
இக்காயத்தின் ஆரோக்கியங் கெடும்
(http://www.heartmath.org இத்தளத்தில் Science of the Heart படிக்கவும்)

மன்னிக்க முடியாக் குற்றம் ஏதுமில்லை
மன்னிக்க மற(று)க்குமே மனம்

பொய்களை உரித்திங்கே மெய்யை மெய்யாய்க்
கொள்ளவே மெய்யெடுத்த நோக்கம்

பிழையென் றேதுமில்லை ஓயாமல் பெய்யும்
மழைஅன்பில் நனைந்தூறச் சுகம்

Advertisements

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) -73

மார்ச் 30, 2011

தீதினைத் திணிக்கும் ஆணவம் நன்மைதரும்
ஆண்டவம் இரண்டும் நின்னுள்
(தீதும் நன்றும் பிறர் தர வாரா – கணியன் பூங்குன்றன் பாடல்)

ஒருதுளி பேதநஞ்சால் சமரச அமுதின்
அருஞ்சுவை நாசமாகும் அறி

நீளும் வாத விவாதப் போரால்
மாளும் நேச இயற்கை

நேச இயற்கை அமுதாய் இனிக்க
பேத செயற்கை நஞ்சேன்

குற்றமே காணும் பேய்மனம் விட்டால்
குணமே காட்டும் இருதயம்

குத்துக் குத்துக்குப் பதில்குத்துக் கருமச்
சுற்றில் புத்தியெட்டா தருமநெறி

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 72

மார்ச் 29, 2011

சொந்த மென்னும் பந்தங் கடந்தநம்பொதுச்
சொத்து நெஞ்சுள் இறை

பூரண சரணாகதிப் பெருவாழ்வை அளிக்கும்
நேசமாம் வற்றாநதி சேர்க்கும்

உட்குரு நோக்கினால் மெய்வழி திறக்க
உய்ந்திடும் மேனிலை கீழ்

உருவங்கள் தாண்டி ஒருவனைக் காண
இருதயத்தே சேர்நின் மனம்

இருதயத் திருப்பதியில் உய்ந்தே உயிர்த்து
அருளொளி மெய்யுடுத்தி இரு

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 71

மார்ச் 28, 2011

அகமே புறமாய் விரிந்தது விளங்க
அகத்துள் புறமே அடங்கும்

சகமும் இறையும் ஒன்றும் அகத்தில்
இதத்தில் இருக்கும் மனம்

உலகைப் பழிக்கும் கலக மனத்தின்
உளைச்சல் இருதயந் தீர்க்கும்

புலப்படும் யாவும் அடங்கும் ஒன்று
புலப்படும் இருதய மையம்

பரிதி தொட்டுச் சுற்றும் ஆரங்கள்
பதிந்து நிற்கும் மையம்

அதுவே சத்தி சிவமாய்ப் பிரிந்து
நடுவே ஒன்றக் குரு

பேதப் போர்வை ஆணவ மாயை
நேசப் பார்வை மறைக்கும்

தளைகளால் பிணிக்கும் மயக்க நோயைத்
தணிக்கவே உட்குரு மருந்து

எனதென்றும் உனதென்றும் பிரிக்கின்ற செருக்கை
நமதென்னும் பொதுநோக்கில் கரை

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 70

மார்ச் 27, 2011

தேவனாலே கூடாதது ஏதுமில்லை தேகமெய்
மாயாதே கூடவைப்பான் தன்னொடு

ஞாலத்தைப் பழித்தே ஓலக்குரல் எழுப்பாமல்
நாகத்தைத் தவத்தே எழுப்பு

நாதரவம் அகத்தே கேட்குந் தவத்தால்
நாகரவம் எழுந்தே ஏறும்
(நாதரவம் = நாத ஒலி, நாகரவம் = நாகப் பாம்பு)

வாய்மூடி நாபூட்டி விழித்திருக்கக் குண்டலி
யாம்நாகம் எழுந்துச்சி சேரும்

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) -69

மார்ச் 26, 2011

கனவு நனவு உறக்கமெனும் மயக்கம்
களைய விழிக்குந் துரியம்

மயக்கம் நீங்கித் துரியத்தே விழிக்க
மனத்தை இருதயத் திருத்து

துரியத்தே துரிசுரியும் துரியா தீதத்தே
தெரியுந்தூ யவொருவனே யாவும்

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 68

மார்ச் 25, 2011

ஆணவம்”தான்” நீங்கி ஆண்டவம்”நான்” ஓங்கக்
காயப்பொய் பொன்மெய் யாகும்

“தான்” என்ற ஆணவம் ஒரு மாயத் தோற்றம் மாத்திரமே, அஞ்ஞானத்தால் தோன்றி மெய்ஞ்ஞானத்தில் கரையும் பனிப் படலம், “தான்” என்பது இன்னவன்(ள்) என்று நம்மை நாமே இறுக்கிக் கொள்ளும் அனந்த அடையாளங்கள், இதனால் பாயும் நீரோட்டம் “நான்” தேங்கிக் குட்டைகளாய் நாற்றமடிக்கிறது, “நான்” எல்லா அடையாளங்களையும் அனுமதிக்கும் அதே நேரத்தில், எவற்றிலுந் தேங்காத தெள்ளிய அன்பின் நீரோட்டம், அதுவே நம் மெய்யின் உயிரோட்டம்! “நான்” என்பது பேதபாவம் ஒரு சிறிதும் இல்லா ஒருமைப் பேருணர்வு, இதைத் தான் திருமூலர்

“நான்” என்று “தான்” என்று இரண்டில்லை என்பது
“நான்” என்ற ஞான முதல்வனே நல்கினான்

என்று திருமந்திரத்தில் மெய்ஞ்ஞான உறுதியாய்க் கூறுகிறார்! “நான்” என்ற ஒன்றே தான் நம் அனைவரின், இப்பிரபஞ்சத்தின் நிஜம்! இந்த ஒருமைப் பேருணர்வு நம் மெய்யுள் ஓங்க நிஜமாகவே அழியா மெய்யாய் அது ஜொலிக்கும்

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 67

மார்ச் 24, 2011

வேணுவைப் போலே காலியாய் இருந்தால்குரு
நாதரின் மூச்சால் நாதம்

வேணுபோல் உட்குரு நாதர் கைபொருந்த
ஊதுவார் மந்திர நாதம்
(பகவான் கிருஷ்ணர் = உட்குரு நாதர்; புல்லாங்குழல்-வேணு = வெளிக்குரு வடிவமாம் நாம் ஒவ்வொருவரும)

வேணு ஊடே அன்பைப் பாய்ச்சிகுரு
நாதர் ஊதும் ஞானம்

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 66

மார்ச் 23, 2011

பிறப்பில் ஒத்த உயிர்களை அஞ்ஞான
மறப்பில் பார்க்க பேதம்

இம்மையை ஈனமெனப் பழிக்க மறுமையின்
செம்மையைக் காணமுடி யாது

ஞானப் பதமொழிக்கும் நாகரவம் நல்ல
பாம்பாய்ப் பரிமாறவே யோகம்

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 65

மார்ச் 22, 2011

நாகம் எழுந்து உச்சி தாண்டத்
தேகத் தெழுமே சுத்தம்

நச்சு நாகமது நல்ல பாம்பாகத்
துச்ச தேகமாகும் மெய்

வஞ்ச நாகம் உச்சி தாண்ட
கர்ம நாசம் சித்தி
(குண்டலி ஏற்றத்தில் இருள் சேர் இரு வினைகள் யாவும் நசியும்)

நீபழிக்குந் தேகத்தை மெய்யென்னும் நற்றமிழ்
தூநிலையாம் நேசத்தைச் சேர்

தேக மெய்யைப் பழித்தும் வருத்தியும்
நேச உயிரை அழிப்பாய்

பரவுண்மை இகத்தில் மெய்யாய்த் திரண்டது
வரமதை இகழ்வா யோ

பராபரம் மூலத்தே நாகமாய் உறங்குது
படமெடுத் தேறவே ஞானம்