Archive for the ‘வணக்கம்’ Category

குரு நாதர் சரணம்!

ஜனவரி 7, 2009

ஒரு பொருளும் இல்லாத என்னைக்
குருப் பொருள் தந்தே தேற்றினார்
அருள் வள்ளற் பரம்பொருள்!
அவர்தம் செம்பணி செய்யக் கூலியும்
வெட்கமின்றிக் கேட்டேன்!
அரவணைத்தென்னை
அன்போடே திருப்பொருளுந் தந்தாரே வள்ளல்!
உருப்படாமல் போன என்னை
உருப்படும் மெய் சொல்லி
உருப்பட வைத்து
உலகம் உருப்படவும் உத்தி சொல்லி
உலகில் உரத்தே உரைக்கச் சொன்னார்!
நானும் உரைக்கின்றேன்!
நாயகன் சொல்லன்றி
நான் ஏதும் அறியேன்!
செவியுள்ளவன் கேட்கக் கடவன்
நாயகன் தன் வார்த்தை!
விழியுள்ளவன் பார்க்கக் கடவன்
நாயகன் தன் காட்சி!
இருதயமுள்ளவன் உணரக் கடவன்
நாயகன் தன் அன்பை!
மனமுள்ளவன் அறியக் கடவன்
நாயகன் தன் ஞானம்!
விரலுள்ளவன் தொடக் கடவன்
நாயகன் தன் திரு மேனி!
நாவுள்ளவன் சுவைக்கக் கடவன்
நாயகன் தன் அருளமுதை!
நாசியுள்ளவன் நுகரக் கடவன்
நாயகன் தன் கற்பூர வாசம்!
வாயுள்ளவன் பேசக் கடவன்
நாயகன் தன் அருள் வாக்கை!
நாயகன் இன்றேல்
நாயேனும் ஒரு பொருட்டோ!
நாயேனை மிதித்தாலும்
நாயகனை மதிப்பீர்!
எதுவும் நம் கையில் இல்லை!
நாயகன் கையாய் இருப்பதொன்றே
நமக்கென்றும் வேலை!
தேவனால் கூடாத காரியம் எதுவுமில்லை
என்றே நாயகன் பெரு வல்லபம்
சொல்லும் வேதாகம வாக்கை அறிந்தே
தேவனின் கையாய் உம் கை
அவனியில் ஓங்க
உம்மாலும் கூடுமே அதிசயக் காரியங்கள்!
இதை விடப் பெரிய கிரியைகளைப்
பரம பிதாவின் அருளால்
நீவிரும் செய்வீரே!

என்றே மெய்யுரைத்த குரு நாதர்
இயேசு கிறிஸ்து திருவடிகள் சரணம்!

Advertisements

அலைமகளின் அருள்வாக்கு

மார்ச் 31, 2008

Mahalakshmi

என்னைப் போன்றே நீங்களும் தெய்வீகமானவரே!
என்னைப் போன்றே நீங்களும் வணக்கத்துக்குரியவரே!
என்னைப் போன்றே நீங்களும் வல்லமை மிக்கவரே!

எனக்கும் உமக்கும் இடையில் எந்தவொரு வேறுபாடும் இல்லை. இருந்ததுமில்லை. இருக்கப்போவதுமில்லை.

நாம் உருவத்தால் பெயரால் வெவ்வேறாகத் தோன்றினாலும், உருவத்துக்கும் பெயருக்கும் அப்பால் அருவ மெய்ப்பொருளாய் விளங்கும் ஒரே கடவுளிலிருந்தே உருவாகிறோம்.

அந்தக் கடவுளுக்கும் நமக்கும் இடையில் எந்தவொரு வேறுபாடும் இல்லை. இருந்ததுமில்லை. இருக்கப்போவதுமில்லை.

ஏனென்றால், நான் என்று நாம் ஒவ்வொருவரும் நம்மை அறியும் தன்னுணர்வாம் மெய்யுணர்வாகவே அந்தக் கடவுள் எங்கும் எதிலும் எப்போதும் இருக்கிறார்.

உருவமும் பெயரும் பெற்ற போது, நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறாகத் தோன்றும் அகந்தையாகிறோம், அகங்காரமாகிறோம்.
உருவற்ற பெயரற்ற, அகம் எனவும் அறியப்படும் நான் எனும் கடவுளின் நடனமே(தை) அகந்தை, காரமே அகங்காரம்.

விவரிக்க முடியாத உச்ச அதிர்வுகளில், நாம் ஒவ்வொருவரும் நானே. புலன்களுக்குப் பிடிபடும் குறைந்த அதிர்வுகளில், நானே வெவ்வேறாகத் தோன்றும் ஒவ்வொருவராயும் உருவாகிறேன்.

நானே என விளங்கும் ஒரே மெய்ப்பொருளின் அதிர்வுப் பரிமாற்றத்தாலேயே, வெவ்வேறாகத் தோன்றும் நாம் ஒவ்வொருவரும் உண்டாகிறோம்.

நானே என விளங்கும் ஒரே மெய்ப்பொருள் எங்கும் எப்போதும் பரிபூரணமாகவும், பரிசுத்தமாகவும், தன்னிறைவுத் தன்மையோடும் இருப்பதால், அம்மெய்ப்பொருளின் மிகச் சிறந்த வெளிப்பாடான நாம் ஒவ்வொருவரும் கூட எங்கும் எப்போதும் பரிபூரணமாகவும், பரிசுத்தமாகவும், தன்னிறைவுத் தன்மையோடும் இருக்கிறோம்.

இவ்வுண்மைக்கு மாறாக, நீங்கள் உம்மைக் கடவுளிலிருந்து மாறுபட்டவராகவும், அதனால் குறைபாடுள்ளவராகவும், மாசுள்ளவராகவும், அதனால் மற்றொன்றைச் சார்ந்தே வாழ வேண்டியவராகவும் கருதும் முற்றிலும் தவறான கண்ணோட்டமே, உமது எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம். இதை வேரோடு பிடுங்கி, கடவுளோடு வேறற ஒன்றி, என்னைப் போல் நித்திய ஜீவனில் நிலைபெற்று, என்னைப் போன்றே தெய்வீகப் பொலிவோடு அன்னை பூமியில் நீங்கள் ஒவ்வொருவரும் வளம் பல கண்டு வாழ்வீராக!

எனது இவ்வாஞ்சை, இதோ இங்கேயே இப்போதே, நிறைவேறும் பேரின்பத்தில் திளைத்தே, நான் எஞ்ஞான்றும் தியானத்தில் விழி திறந்து இன்புற்றிருக்கிறேன்.

வணக்கம்

மார்ச் 31, 2008

அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளின் அன்புக் குழந்தைகளே! நான் என்ற இறையாற்றலின் அன்பு வழியாக விளங்கும் பேரருளாளர்களே! “நான் வழங்கும் மகாயோகம்” என்ற அருட்பெருங்கடவுளின் பேருபதேசம் உம்மைத் தேடி வருகிறது, படித்துப் பயன் பெறுவீர்!

நன்றியுடன் உங்கள் அன்பன்

நான் நாகரா(ந.நாகரஜன்)