ஜூலை 2008 க்கான தொகுப்பு

அழு!

ஜூலை 26, 2008

அருளே உப்பாகி
ஒளியே நீராகி
இருவிழி வழியே
வழிவதோ கண்ணீர்!

வழியுங் கண்ணீரில்
கழியும் அழுக்கெல்லாம்
நெற்றியுஞ் சுத்தமாகப்
பற்றுவீர் ஒருவிழி!

தயவாய் இருத்தலே
உயர்வான ஒரேவழி!
இருதய ஒருமையின்
கருணை மெய்வழி!

மெய்வழி திறக்கப்
பொழியட்டும் இருவிழி!
பொய்யெலாம் கரைய
வழியட்டும் அருளொளி!

வள்ளலின் வாக்குறுதிகள் – சஹஜ குண்டலி யோகம்

ஜூலை 26, 2008

1. என்றென்றும் ஜீவித்திருக்கும் என் பூரணத்துவம்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் வெளிப்பட்டிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).

சஹஸ்ரார மூலாதார எட்டு வடிவ சிவ சக்தியோட்டம் நினைவு கூறல், சஹஸ்ரார பூரணத்துவம் மூலாதாரத்தில் சிதைந்து, பிறப்பு-இறப்புச் சுழலில் நாம் சிக்கி விட்டோம். அப்பூரணத்துவம் மூலாதாரத்தில் இறங்கப் பேரின்பப் பெருவாழ்வு நமக்குக் கிடைக்கும்.
 
2. என்றென்றும் சுடர்விடும் என் சுயம்பிரகாசம்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
 ஒவ்வொன்றிலும் அதி அற்புதமாய் ஜொலிக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).

ஆக்கினை சுவாதிட்டான எட்டு வடிவ சிவ சக்தியோட்டம் நினைவு கூறல், ஆக்கினை சுயம்பிரகாசமே(நாத விந்து)  சுவாதிட்டானத்தில் சிதைந்து ஆண்-பெண் காமத் தினவில் நாம் சிக்கி விட்டோம். அச்சுயம்பிரகாசம் சுவாதிட்டானத்தில் இறங்க சிவ சக்தி காதற் புணர்வை இகத்தில் எப்போதும் உணர்வோம்(நாத பிந்து கலாதி நமோ நம – இகக் காம இருட்புணர்வு நீங்கி, பரக் காதல் ஒளி(லி)யுணர்வு)
 
3. என்றென்றும் உள்ளதாம் என் பேரிருப்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் நித்திய ஜீவனாய் நிலை பெற்றிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).

விசுத்தி மணிபூரக எட்டு வடிவ சிவ சக்தியோட்டம் நினைவு கூறல், விசுத்திப் பேரிருப்பே மணிபூரகத்தில் சிதைந்து ஆணவ ஆர்ப்பாட்ட வன்பில் நாம் சிக்கி விட்டோம்.
அப்பேரிருப்பு மணிபூரகத்தில் இறங்க ஆணவம் அழிந்து, இறைப் பேரிருப்பில் நித்தியமாய் வாழ்வோம்.
 
4. என்றென்றும் பெருக்கெடுத்தோடும் என் அமிர்தானந்தம்(ஆன்மநேய ஒருமை)(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
 ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் இன்புற்றிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).

அமிர்த கலச சூர்ய சக்ர எட்டு வடிவ சிவ சக்தியோட்டம் நினைவு கூறல், அமிர்த கலச ஆன்ம நேய இரூதய ஒருமையே சூர்ய சக்கரத்தில் சிதைந்து மருண் மயக்க மன இருமையில் நாம் சிக்கி விட்டோம்.
ஆன்ம நேய இருதய ஒருமை சூர்ய சக்ரத்தில் இறங்க, மன இருமை இருள் நீங்கி இருதய ஒருமை அருளில் நாம் ஆனந்தமாய் வாழ்வோம்.
 
5. என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).

அனாகத சக்ர இருதய மையம், மேற்சொன்ன நான்கு எட்டு வடிவ சிவ சக்தியோட்டங்கள் ஊடே செல்லும் வழி

“இருதய வாய் திறக்க இரு தயவாய்”

நம்  இயல்பாம் பேரன்பை மறந்ததால், மூடிக் கொண்ட இருதய வழியை, அப்பேரன்பை நினைவு கூர்ந்து மீண்டும் திறத்தல், எட்டு வடிவ சிவ சக்தியோட்டங்களால் உருவாகும் கீழ் மேல் சக்கர ஒருமையில் நிராதார மேனிலையை ஆறாதாரத்தில் தாங்கி இக பர பாலமாய்க் கடவுளின் மனித அவதாரமாய் நிற்றல்.

6. என்றென்றும் என் நிறைவாய் விளங்கும் பேரறிவு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் பூரணமாய்ப் பொருந்தியிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).

4ஆம் மந்திரத்தோடு தொடர்புடையது

அமிர்த கலச சூர்ய சக்ர எட்டு வடிவ சிவ சக்தியோட்டம் மீண்டும் நினைவு கூறல், அமிர்த கலச ஆன்ம நேய இருதய ஒருமையாம் பேரறிவே சூர்ய சக்கரத்தில் சிதைந்து மருண் மயக்க மன இருமையெனும் சிற்றறிவில் நாம் சிக்கி விட்டோம்.
ஆன்ம நேய இருதய ஒருமையாம் பேரறிவு சூர்ய ச்க்ரத்தில் இறங்க, மன இருமையெனும் சிற்றறிவு இருள் நீங்கி இருதய ஒருமையெனும்  பேரறிவு  அருளில் நாம் ஆனந்தமாய் வாழ்வோம்.
இக-பர பாலம் அமிர்த கலசம், அனாகதம், மற்றும் சூர்ய சக்ரம் இம்மூன்று சக்ரங்களினூடே செயல்படுகிறது
அமிர்த கலசம் – மேம்பாலம்
அனாகதம் – நடுப்பாலம்
சூர்ய சக்ரம் – கீழ்ப்பாலம்

மேல் நான்கு சக்கரங்கள் – மேம்பாலம்
அனாகதம் – நடுப்பாலம்
கீழ் நான்கு ச்க்கரங்கள் – கீழ்ப்பாலம்
 
ஆக இக-பர பாலமாய் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை நாம் ஒவ்வொருவரும்

7. என்றென்றும் என் இருப்பாய் விளங்கும் அருட்பேராற்றல்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் சத்தியாயச் சத்தாய் சித்தியாய்ச் சித்தாய்ப் பூரணானந்தமாய்ப் பூரித்திருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).

3ஆம் மந்திரத்தோடு தொடர்புடையது

விசுத்தி மணிபூரக எட்டு வடிவ சிவ சக்தியோட்டம் மீண்டும் நினைவு கூறல், விசுத்திப் பேரிருப்பாம் அருட்பேராற்றல் மணிபூரகத்தில் சிதைந்து ஆணவ ஆர்ப்பாட்ட வன்பில் நாம் சிக்கி விட்டோம்.
அப்பேரிருப்பு மணிபூரகத்தில் இறங்க ஆணவம் அழிந்து, இறைப் பேரிருப்பாம் அருட்பேராற்றலில் நித்தியமாய் வாழ்வோம்.
சத்து சித்து ஆனந்தம் (சச்சிதானந்தம்) மற்றும் சத்தி சித்தி பூரணம் இதுவே அருட்பேராற்றல், சத்துவ, ராஜச, தாமசத் திரிகுண மாயையிலிருந்து நிரந்தரமாய் முக்தி தரும் இறைப் பேரிருப்பு, துர்க்குணப் பிரமையிலிருந்து சகுணப் பிரம்மமாய் நம் ஒவ்வொருவரின் எழுச்சி.
தொப்பூழ்க் கொடி பரத்தில் நிலை கொண்டு, நாம் இகத்தில் பரமானந்த அருள் வெள்ளத்தைப் பாய்ச்சும் இறைமையின் தூய ஊடகமாகிறோம்.

8. என்றென்றும் என் பெருங்குணமாய் விளங்கும் தனிப்பெருங்கருணை(நாதம்)(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் ஒருமை இறைநிலையாய் ஒன்றியிருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).
9. என்றென்றும் என் உள்ளொளியாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி(விந்து)(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
 ஒவ்வொன்றிலும் ஒருமை ஒளிநெறியாய் ஒன்றியிருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).

2வது  மந்திரத்தோடு தொடர்புடையது.

ஆக்கினை சுவாதிட்டான எட்டு வடிவ சிவ சக்தியோட்டம் மீண்டும் நினைவு கூறல், ஆக்கினை சுயம்பிரகாசமே(நாதம்-தனிப்பெருங்கருணை, விந்து-அருட்பெருஞ்ஜோதி)  சுவாதிட்டானத்தில் சிதைந்து ஆண்-பெண் காமத் தினவில் நாம் சிக்கி விட்டோம். அச்சுயம்பிரகாசம் சுவாதிட்டானத்தில் இறங்க சிவ சக்தி(தனிப்பெருங்கருணை-சிவம்-பெருவெளி,  அருட்பெருஞ்ஜோதி-சக்தி-அருளொளி)காதற் புணர்வை இகத்தில் எப்போதும் உணர்வோம்(நாத பிந்து கலாதி நமோ நம – இகக் காம இருட்புணர்வு நீங்கி, பரக் காதல் ஒளி(லி)யுணர்வு)
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

10. என்றென்றும் என் பெருநிலையாய் விளங்கும் கடவுட்தன்மை(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் ஒருமை உயிரியலாய் ஒன்றியிருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).
 
1வது  மந்திரத்தோடு தொடர்புடையது.

சஹஸ்ரார மூலாதார எட்டு வடிவ சிவ சக்தியோட்டம் மீண்டும் நினைவு கூறல், சஹஸ்ரார பூரணத்துவம்(கடவுட்தன்மை) மூலாதாரத்தில் சிதைந்து, பிறப்பு-இறப்புச் சுழலில் நாம் சிக்கி விட்டோம். அப்பூரணத்துவம் மூலாதாரத்தில் இறங்கப் பேரின்பப் பெருவாழ்வு(அதுவே நம் உயிரியல்)  நமக்குக் கிடைக்கும்.

11. என்றென்றும் ஆட்சியிலிருக்கும் என் அருட்பேரரசு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு) 
ஒவ்வொன்றையும் உருவெடுத்திருக்கும் என் அவதாரமாய்ப் போற்றி மற்றெல்லாவற்றோடும் ஒருங்கிணைத்து வழிநடத்துகிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).
12. எங்கும் எதிலும் எப்போதும்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
நானே என விளங்கும் பூரணமாய் நான் இருக்கிறேன்(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).
13. நானே(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).
 
நிராதார மேனிலை ஆறாதாரப் பாலத்தினூடே இகத்தில்  பூரணமாய்ப்  பரவுதல்.
இருமையெல்லாம்  நீங்கி  பேரொளிக் கோளப் பேருணர்வில் நாம் ஒவ்வொருவரும் பூமியில் நிற்போம்.

சஹஜ நிலைக் குண்டலினி யோகம்

ஜூலை 26, 2008

மூலாதாரம் சஹஸ்ராரத்துக்கு ஏறுதல் – பிறப்பு-இறப்புச் சுழலில் சிக்குண்ட வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து விடுபட்டு, பேரின்பப் பெருவாழ்வில் நிலைபெறல்
 
சுவாதிஷ்டானம் ஆக்கினைக்கு ஏறுதல் – ஆண்-பெண் காமப் புணர்விலிருந்து விடுபட்டு கடவுட் காதலன்-ஆன்மக் காதலி காதல் உணர்வில் கணப்பொழுதும் நீங்கா சிவ-சக்தி தெய்வீகப் புணர்வில் நிலைபெறல்
 
மணிபூரகம் விசுத்திக்கு ஏறுதல் – ஆணவ ஆர்ப்பாட்ட வன்பின் இயக்கத்திலிருந்து விடுபட்டு தெய்வீக ஆணைக்குக் கட்டுப்பட்ட அன்பின் ஆற்றலாய் நிலைபெறல்
 
சூர்ய சக்ரம் அமிர்த கலசத்துக்கு ஏறுதல் – மருள் மயக்க இருமையிலிருந்து விடுபட்டு ஆன்ம நேய ஒருமையில் நிலைபெறல்
 
இந்த ஏற்றம் அனாகதமாம் இருதய மையத்தினூடே எட்டு வடிவச் சிவ-சக்தியோட்டமாகத்(Figure Eight Flow) துவங்கி, கீழ்ச் சக்கரங்கள்(உஷ்ணம்) சுத்திகரிக்கப்பட்டு, மேல் சக்கரங்களின்(குளிர்ச்சி) இறக்கத்தில்(இதுவே கடவுளின் இரக்கமோ) முடிகிறது.
 
உமது மெய்க் குண்டத்தில் நிகழும் வேள்வியில், கீழ்ச் சக்கரங்களை, மேல் சக்கரங்களுக்கு ஆகுதியிட்டு அர்ப்பணிப்பதாக பாவித்து, அனாகதமாகிய இருதய மையத்தில் அமர்ந்து நீவிர் செய்யும் சஹஜ நிலைக் குண்டலினி யோகத்தில், நிராதார மேனிலை மேல் சக்கரங்களில் நிலை கொண்டு, இருதயத்தினூடே கீழ்ச் சக்கரங்களைச் சுத்திகரித்து, அவற்றை அருட்பேராற்றலின் இயக்கக் களமாக்கி, இவ்வாறாக ஆறாதாரம் வந்தடையும்.

சஹஜ நிலைக் குண்டலி யோகம் நேரங் கிடைக்கும் போதெல்லாம் நீவிர் செய்யலாம், இதுவே உம் சஹஜ நிலை என்று முழுதாயுணரும வரை,  இந்த எட்டு வடிவச் சக்தியோட்டத்தை தினமும் பல முறை நினைவு கூருங்கள், எட்டில் ஏற்றம் சக்தி, இறக்கம் சிவம், சக்தி வெம்மை, சிவம் குளிர்ச்சி, இரண்டின் சங்கமம் தண்மை
 
சத்தி அருள்தரச் சத்தன ருளுண்டாம்
சத்தன் அருள்தரச் சத்திய ருளுண்டாம்
சத்தி சிவமாம் இரண்டுந்தன் னுள்வைக்க
சத்தியம் எண்சித்தி தண்மை யுமாமே 
 
குருநாதர் திருமூலர் ஏற்கனவே உபதேசித்ததே இது.

மூலாதாரம் சஹஸ்ராரம் ஏற
சஹஸ்ராரம் மூலாதாரம் இறங்க
அனாகத இருதய மையத்தினூடே
எட்டு வடிவச் சிவ-சக்தி யோட்டம் வாசி
 
சுவாதிட்டானம் ஆக்கினை ஏற
ஆக்கினை சுவாதிட்டானம் இறங்க
அனாகத இருதய மையத்தினூடே
எட்டு வடிவச் சிவ-சக்தி யோட்டம் வாசி
 
மணிபூரகம் விசுத்தி ஏற
விசுத்தி மணிபூரகம் இறங்க
அனாகத இருதய மையத்தினூடே
எட்டு வடிவச் சிவ-சக்தி யோட்டம் வாசி
 
சூர்ய சக்ரம் அமிர்த கலசம் ஏற
அமிர்த கலசம் சூர்ய சக்ரம் இறங்க
அனாகத இருதய மையத்தினூடே
எட்டு வடிவச் சிவ-சக்தி யோட்டம் வாசி
 
அனாகத இருதய மையமே
மூலாதார சஹஸ்ரார ஒருமை
சுவாதிட்டான ஆக்கினை ஒருமை
மணிபூரக விசுத்தி ஒருமை
சூர்ய சக்ர அமிர்த கலச ஒருமை
 
மூலாதார சஹஸ்ரார ஒருமை
பிறப்பு இறப்புச் சுழலறுக்கும்
பேரின்பப் பெருவாழ்வு
 
சுவாதிட்டான ஆக்கினை ஒருமை
ஆண் பெண் காமத்தினவறுக்கும்
சிவ சக்தி காதற்புணர்வு
 
மணிபூரக விசுத்தி ஒருமை
ஆணவ ஆர்ப்பாட்ட வன்பறுக்கும்
சச்சிதானந்த அருட்பேராற்றல்
 
சூர்ய சக்ர அமிர்த கலச ஒருமை
மருண் மயக்க இருமையறுக்கும்
ஆன்ம நேய ஒருமை
 
அனாகத இருதய மையத்தில் அமர்ந்தே
செய்வாய் சஹஜநிலைக் குண்டலி யோகம்
எட்டு வடிவச் சிவசக்தியாய் ஓடும்
சிவாமய வாசியை நீபக்தியாய் நாடி
 
கீழ்மேல் இடவலம் முன்பின் இருமையெலாம்
மாய்ந்தே போகும் ஒளிக்கோளப் பேருணர்வை
நினக்க ளிக்கும் குண்டலி யோகத்தின்
கணக்கு சொன்னேன் சஹஜநிலை இதுவாமே!

ஓர் இருதயப் பகிர்வு – நண்பர் ஜாஃபர் அலிக்கு(ஹரனுக்கு)

ஜூலை 26, 2008

உச்சி திறந்ததே பார்உன் நெற்றியில்
அத்த னவன்திரு நடனம்
புத்தி தெளிந்ததே நாவில் ஊற்றுதே
தித்திக் குந்தெள் ளமுதம்

உம்நாவு நுனியை அண்ணத்தில்(மேல் வாயில்) வைத்து
ஆற்றில் ஒரு கால் ஊன்றி
அண்ணாக்கில் கவனம் நிறுத்தி
மூச்சில் மனத்தை வசித்து
தெள்ளமுதப் பாகை ருசித்து
சேற்றில் இரு கால் பதித்த
அல்லாவின் தூதராய் இருப்பீர்
ஜாஃபர் அலியாம் நீவிர்
 
ஆறாதாரத்தில் எழுகின்ற குண்டலிச் சூட்டைத் தணிக்க
நிராதாரத்தில் எழுந்திருக்கும் நபிகள்ருளைப் பொழிவார்
நிராதார வடிவாய் ஆறாதாரத்தில் நாயகம் நிற்பார்
தராதலம் முழுதும் உம்மூடே அருளாய் வழிவார்
பராபர மேனிலை சேர்ந்திட உம்முள்ளே சுழிவீர்
பராபரை அருளாய் இகமெங்கும் பொங்கியே வழிவீர்

ஹ்ருதய ஷக்திபத்(சப்த ஸ்வரங்கள் சுட்டும் உமதுண்மை)

ஜூலை 26, 2008

‘ – மூலாதாரம்
ரி‘ – சுவாதிஷ்டானம்
‘ – மணிபூரகம்
 
இம்மூன்றும் இகத்தில் பரத்தின் அலுவலகம்
 
‘ – சூர்ய சக்ரம்(Solar Plexus), அனாகதம், அமிர்த கலசம்(Thymus Center) – அருட்தாய்
‘ – விசுத்தி – அருட்தந்தை
‘ – ஆக்ஞா சக்ரம், சஹஸ்ராரம் – அருட்குரு
 
இம்மூன்றும் இகத்தில் பரத்தின் இல்லம்
 
நி‘ – நிராதாரம் ஆறாதாரத்துள் நிற்றல்(சிலுவையின் செங்குத்தான பாகம்-மனிதன் கடவுளின் தூய ஊடகமாதல்)
‘ – நிராதார மேனிலை(பரம்) இகம் முழுவதும் பரவுதல்(சிலுவையின் பக்கவாட்டுப் பாகம்-மனித ஊடகத்தினூடே கடவுளின் அருள் வெள்ளம் இகத்தில் பாய்தல்-கடவுளின் மனித அவதார நோக்கம் நிறைவேறுதல்)
 
இவ்விரண்டும் இக பர ஒருமையை நிலை நாட்டும் இக-பர பாலம்
 
ஆக நீவிர் 1)இகத்தில் பரத்தின் அலுவலகமாய் 2)இகத்தில் பரத்தின் இல்லமாய் 3)இக-பர பாலமாய் பூமியில் இருக்கிறீர்.
 
 
உமதுண்மையை உமக்குணர்த்தும் “ஹ்ருதய ஷக்திபத்” இதுவே! இதுவே ஒவ்வொன்றின் உயர்வான உண்மை.

தலை முடி!

ஜூலை 26, 2008
உன் மெய்க்கு முடியாய் அமர்ந்த தலை மேல்
உன் மெய்யான முடியாய் அமர்ந்த தலைவனை(தலைவன் ‘‘)
நீ மறந்தால் முடி போல் உதிருமே தலையும்!

மெய்வழி!

ஜூலை 26, 2008
பொய் வீடு விட்டு
மெய் வீடு புக்க
பொய் வீட்டுக்குள்ளேயே
மெய்யாய் இருக்குதே
இருதய வழி!
இரு தயவாய்” என்ற வள்ளல்
பெருமான் உபதேசப்படி
நீ தயவாய் இருக்க
இருதய வாய் திறந்து
தெரியுமே அம்மெய்வழி!

வெட்டவெளி தியானம்

ஜூலை 10, 2008
வெளியே உந்தன் உட்பொருள்
வெளியே உந்தன் உட்சுத்தம்
வெளியே உந்தன் மெய்யுடம்பு
வெளியே உந்தன் மேலுடுப்பு
வெளியே உந்தன் பெரிய வீடு
வெளியே உந்தன் பேருடைமை
வெளியே உந்தன் மெய்யுறவு

ஒன்று மில்லா வெளியில் ஒன்றாய்
நின்ற நீயும் வெளி

ஒன்று மில்லா வெளியை யழிக்க
ஒன்று மில்லை வெடி

நன்றாய் நின்ற வெளியை அறிந்தால்
பொன்றா துந்தன் வாழ்வு

வெளியே வளியாய் ஒளியாய் அளியாய்க்
களிக்கும் உயிர்மெய் உண்மை

கடத்துள் வெளியே திடமென இருந்தால்
கடப்பாய் இறப்பும் பிறப்பும்

காலி வெளியே காலியாகா திடமென
வாலை ஒளியை நாடு

வெளிதரும் வெள்ளங்கி உடுத்தி களிப்புடன்
வெளிதனில் இருத்தல் சுகம்

வெட்டவெளியே பட்டப்பகல் நிசமென உணர்ந்தால்
பட்டொளியாய் மினுமினுக்குந் தேகம்

சுத்தவெளியின் சுத்தமே மெய்யின் உண்மையெனும்
சித்தத்தெளிவை என்றுமே போற்று

சித்தரே பரிசுத்தரே புத்தரே நீவிர்
சுத்தவெளி உருவெடுத்த உண்மை

வெளியைப் பற்றி வளியைத் தொற்றி
ஒளியுள் உற்றுக் களி

நள்ளிரவிலும் பளபளக்கும் வெட்டவெளியில் கவனம்
கள்ளமனமும் வெளுத்துவிடும் சுத்தம்

மெய்யரே நீரென்றேன் வெட்டவெளி திடப்படும்
மெய்யுடம் பாரென்றேன் நான்

வெளிபற்றி நிற்கும் வளிக்குள் ஒளிதோன்றி
அளிசொட்ட மெய்க்குள் களி

வாசி யோகம்

ஜூலை 10, 2008
வந்துபோகும் வளிமேல் கவனம் நிறுத்தி
வந்துபோகும் கணக்கை முடி

வந்துபோகும் வளிமேல் கவனம் நிறுத்தி
வெந்துசாகும் பழக்கம் கழி

வீணே கசியும் கவனம் வளிமேல்
பூண நசியும் மரணம்

திருப்பி மனத்தை வாசியில் பூட்டத்
திறக்கும் அமுத வாரி

கருத்த மனத்தை வாசியால் வெளுத்துத்
திருந்த உடம்பு ஒளிரும்

கருத்த மனத்தை வாசியால் வெளுத்துத்
திருந்த உடம்பு ஒளியும்

Quote:
Originally Posted by தென்றல் View Post
வந்துபோகும் வளிமேல் கவனம் நிறுத்தி
வெந்துசாகும் பழக்கம் கழி

இது எந்த மடத்தனம்? விளக்குவீராக!!

வந்துபிறந் திறந்துபோகும் மடத்தனம் மடிந்துபோக
முந்திச்செல் வாசியோக வழி

நன்றி தென்றலாரே!

தென்றலாம் வாசியைக் கவனிக்கும் யோகத்தால்
என்றைக்கும் வாழலாம் நிசம்

முச்சந்தி வீதியில் போய்வரும் தென்றலை
இச்சித்து போதியில் வாழ்

மரண வாடை வீசா திருக்கமெய்ச்
சுரணை ஊட்டும் தென்றல்

சுத்த வெளியில் மெய்யைக் கரைக்கும்
புத்த விளக்கம் வளி

நாசிக்குள் வழியும் தென்றலை நேசித்து
வாசிக்கும் வழியைப் பிடி

மடியும் மடத்தனம் மாய்க்கும் வாசியோகம்
முடியும் உன்னால் விளங்கு

தென்றல் தீண்டி எழுந்த நாகம்
மன்றில் ஆடும் படம்

விரயமாகும் கவனம் இதெந்த மடத்தனம்
சரயோகம் மேல்வை கவனம்

விழிநாசி செவிமுச் சந்திவீதி வழிவாசி
வழிந்தோட வாய்க்கும் மெய்

நிறுத்துவீண் பேச்சை கவனம் மூச்சில்
இறுத்திவாழ் திறக்குமுன் நெற்றி

எங்கெங்கோ ஓடும் கவனத்தை வாசியில்
தங்கென்றால் கேளாக் குரங்கு

வளிமேல் கவனம் நிறுத்தச் சொன்னால்
சுளிக்கும் முகத்தைக் குரங்கு

ஓடுமனக் குரங்கை வாசியால் கட்டக்
கூடுமுனக் கென்றான் குருபரன்

விளக்கு மாறாய் சுத்தஞ்செய் வாசியால்
விளங்கு வீரே உம்மெய்

தாவிச் செல்நீ மரணம் உந்தன்
ஆவிப் பாகை உண்டு

பாவிச் சடலத்தை மெய்யாய் மாற்றும்
ஆவி அமுதத்தைக் குடி

கூவிச் செல்வேன் வாசியின் பெருமைநான்
தாவிச் செல்வேன் மரணம்

வாசிதானே சிவாவென்னும் அன்பின் ஊற்று
வாசித்தால் வராதென்றுங் கூற்று

உயிர்ப்பின் உணர்வை உனக்குத் தருகின்ற
உயர்வான வாசியைப் போற்று

வளிமொண் டுண்டால் நெற்றி வெளுக்கும்
ஒளியுண் டாகுமே அறி.

வாசி பற்றி கவனம் நிற்க
ஆசி யாய்விழும் அளி

அன்பே சிவமாம் வாசி யூற்றை
உண்டே உவந்தால் போதி

போதி வெளியின் வாசி நிழலில்
போத ஒளியைக் காண்

அளிதரும் வளியை அள்ளி உண்டு
ஒளிவரும் வழியைக் காண்

காற்றுள்ள போதே தூற்றிக் கொண்டால்
கூற்றுன்னை அண்டா தொழியும்

காலி வெளியுள் நிரம்பிய வளியே
வாலை ஒளிக்கு மூலம்

Quote:
Originally Posted by தென்றல் View Post
வாசி’க்கான விளக்கம்.. இன்னும் வாசிக்கக் கிடைக்கவில்லை

அன்பெனுந்திருத் தென்றலை உள்ளிழுத்து வெளிவிட்டு
அன்புருவாய் நிற்பதே யோகம்

வாசியின் விளக்கம் சிவாவெனும் அன்பேநீ
வாசிக்க வாசிக்க விளங்கும்

இன்னும் இன்னும் உள்ளே ஆழ்ந்திருக்க
அன்பின் வன்மை விளங்கும்

அன்பா இன்னும் வாசிக்கக் கிடைக்கவில்லை
தென்றலின் இன்பமே அது

வாசிநீர் தென்றலாய்த் தீண்டுவீர் என்றுமும
தாசியால் உள்ளவன் நான்

தென்றலேஇரு தயவாய் இவ்வுலகில் என்றும்நீர்
வள்ளலேவரு வாருமைத் தழுவ

வெளிமடம் நாடிப் போகாதீர் உள்மடமாம்
ஒளிக்கடத் துள்ளே பராபரன்

காவி உடுத்து ஆவி வெளுக்காத
பாவி யவரோ சித்தர்

சித்தரே நீவிரென்று உண்மையே உரைத்தாலும்
பித்தனே நானென்பார் மாந்தர்

உத்தமன் ஒருவனை உள்ளே காணத்
தொற்றியே வாசியில் நில்.

காணாக் காற்றே காணும் உடம்பைப்
பேணும் ஊற்றாந் திடம்

வெளிவிடும் உள்வரும் மூச்சில் கவனத்தால்
ஒளிர்ந்திடும் உன்னுடல் மெய்

துளித்துளி யாய்வீழும் அளியமுதை யுண்ண
அளிக்குமே தாய்போன்ற வளி

ஆணவத்தலைப் பாகை கழற்றிவிட்டு வாசியோகங்
காணவுன்தலைப் பாக’ஐ’ ஒளிரும்

ஆணவத்தலைப் பாகை கழற்றிவிட்டு வாசியோகங்
காணவுண்ணலாம் உன்தலைப் பாகை

தலைப்பாக ‘ஐ’யனைக் காண வாசியில்நில்
அலைபாயும் பேய்மன மடங்கி

தலைப்பாகை எதற்குனக்கு தலைப்பாக ‘ஐ’யனேவுன்
தலைப்பாகை கவனிப்பாய் வாசி

உட்குருவாசி உனில்இருக்க வேறெவரோ குருமார்
நல்லருளாசி தருவார்உட் போதகர்

உத்தமன் உன்னுள்ளே வாசியாய் நிற்கபரி
சுத்தமே உன்மெய்யென் றுணர்

குண்டலி எழுப்பும் அமுத வாசியைக்
கண்டுளே இருதய வாய்

கருத்த மனத்தை வெளுக்கும் வாசியைக்
கருத்தில் குருவாய்ப் போற்று

வந்துபோகும் உருக்களோ குருமார் வாசியாய்
வந்துபோகும் அருவமே குருபரன்

உள்ளதிட மூச்சை உள்ளமன மின்றி
உள்ளாரி வரோ மாந்தர்

வெள்ளங்கி ஒளியை உள்ளுள்ளே காணஅருள்
வெள்ளத்திரு வளியை உண்

தம்படிக்கு உதவுமா வளிமேல் கவனமென்பாய்
தம்படிக்கு உதவுமா சவம்

வாசியா திருந்தால் வாசியை உள்ளுலக
வாசியாம் சிவாசிக் கார்

பேசா திருமனமே கவனக் காசை
வீசா திருவீணே நீ

சச்சி தானந்தச் சுடராம் வாசியால்
உச்சித் தாமரை மலரும்

எழுத்தின் பயன் என்ன?

ஜூலை 10, 2008
Quote:
Originally Posted by தாமரை View Post
8. நாகரா

சிக்கலானச் சிந்தனைகளை சின்ன வார்த்தைகளில் அடைத்துச் சொற்களில் பூக்க வைக்கும் வித்தகரே,

எழுத்தின் பயன் என்ன?

தமிழ் மன்றத்தில் எப்போதும் வாடாது பூத்திருக்கும் தாமரையாரே! சொல்லின் செல்வரே! உம் கேள்விக்கு நன்றி. என்னால் இயன்ற வரை விடையிறுக்க முயல்கிறேன்.

ஆதியில் எல்லாம் வார்த்தையாகவே இருந்தது” என்ற புனித யோவான் வேதாகம வாக்கும், “அகர முதல எழுத்து” என்று தொடங்கும் உலகப் பொது மறை திருக்குறளும் தான் என் நினைவில் எழுகிறது உம் கேள்வியைக் கேட்டதுமே!

நாம் ஒவ்வொருவரும் ஆதி வார்த்தையிலிருந்து அவதரித்த உயிர்ப்புள்ள மெய்யெழுதுக்கள் தாமே! நம் பயன் என்ன?

எழுத்து என்றால் முதலில் ஒலி வடிவம், நாதம்
அடுத்து அவ்வொலிக்கேற்ற வரி வடிவம், ஓளி, விந்து

அகர முதல எழுத்து – ஓங்கார நாத பரப்பிரம்மத்தை, பரமபிதாவை, அல்லாவை, புத்தரை, அருட்தந்தையைக் குறிக்கிறது.

எல் ஆம் ஆதி(எல்லாம் ஆதி) – (எல்-ஓளி) அடுத்து விந்து ஓளி ஆகும் ஆதிசக்தியை, பரிசுத்த ஆவியை, புனித ‘ரு’வை, க்வான் யின்னை, அருட்தாயைக் குறிக்கிறது

பகவன் முதற்றே உலகு – பகவன் அம்மையப்பனின் புணர்தலில் உருவாகும் இறைமகவாம் சத்குருவை, கிறிஸ்துவை, ரசூலாம் நபிகளை, போதிசத்துவரை, உட்போதகரைக் குறிக்கிறது. இறைமகவே உலகின் மூல காரணம் என்று ஏகார உறுதியோடு வள்ளுவப் பெருந்தகை முடிக்கிறார்.

தந்தை ஒலியானத் தாய் ஒளியான எழுத்தின் பயன் தந்தை தாயின் தலைமகனாம் தலைமகளாம் இறைமகவே. அந்த இறைமகவின் பயனாகவே இவ்வுலகு எழுகிறது. யார் அந்த இறைமகவு? நாம் ஒவ்வொருவரும் தான் அந்த இறைமகவு!

நீவிர் கடவுளரென்ற வேதாகம(பழைய ஏற்பாடு) வாக்கை அறியீரோ!“என்று குரு நாதர் இயேசு கிறிஸ்து தன்னை இறைமகவென்று அறிமுகப்படுத்திக் கொண்டதற்காக யூத குருமார்கள் அவரைத் தூஷித்த போது கூறினார்.

எழுத்தின் பயன் உணர்ந்து இறைமகவாய் எழுவோம்! எழுத்திலுள்ள ‘எழு’ என்ற இறை கட்டளையை அறிவோம்!
சாதி மத இன நிற பேதங்கள் யாவையும் தாண்டி நாம் ஒவ்வொருவரும் இறைமகவென்ற ஒருமையுணர்வில் ஒன்றுபடுவோம்! எழுத்தின் பயனாக ஞான யுகத்துக்கு வழி கோலுவோம்!

பி.கு. : தமிழ் மன்றத்தில் தாமரை அவர்கள் கேட்ட கேள்வியின் பதில்