ஏப்ரல் 3rd, 2008 க்கான தொகுப்பு

மரணமிலாப் பெருவாழ்வு

ஏப்ரல் 3, 2008

உடம்பு, மனம், மூச்சு இவற்றைப் பற்றிய தவறான கண்ணோட்டமே, இவற்றின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம்.

கடவுள் என்று சொல்லப்படுகின்ற அருவமான ஒரே மெய்ப்பொருளிலிருந்தே பல்வேறு உருவத் தொகுதிகளான அனைத்தும் உருவாகின்றன. இந்த அருவ மெய்ப்பொருளானது அருட்தந்தை, அருட்தாய், அருட்குரு இம்மூவரும் ஒன்றிய பேரிருப்பாய் இருக்கிறது. எல்லாவற்றையும் எந்தவொரு நிபந்தனையுமின்றித் தன்னுள் அனுமதிக்கும் சுத்த வெளியே அருட்தந்தை. எல்லாவற்றையும் எந்தவொரு நிபந்தனையுமின்றித் தன் அருளொளியால் அரவணைக்கும் ஜோதி வெளியே அருட்தாய். எல்லாவற்றையும் எந்தவொரு நிபந்தனையுமின்றித் தன் அறிவொளியால் ஒளிர்விக்கும் ஞான வெளியே அருட்குரு.

சுத்த வெளியின் தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலால், ஜோதி வெளி சுத்த வெளியெங்கும் உருவாகிறது. இந்த ஜோதி வெளியானது, சுத்த வெளியின் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் பேரொளிக் கோளமாக அதிவேகமாக விரிந்து கொண்டே இருக்கிறது. இந்த அதிவேகமான விரிதலுக்கும், சுத்த வெளியின் அழுத்தத்திற்கும் இடையே இடைவிடாது நிகழ்ந்து கொண்டே இருக்கும் புணர்தலால், சுத்த வெளியெங்கும் ஜோதிவெளியெங்கும் உருவாவதே ஞான வெளி. இஞ்ஞான வெளியானது, அருட்தாயின் அருட்தந்தையின் தலைமகனாகத் தலைமகளாகத் தன்னை அறிகிறது. ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்கவே முடியாது பின்னிப் பிணைந்திருக்கும் இம்மூவரின் ஒருமையே, கடவுள் எனப்படும் அருவ மெய்ப்பொருள்.

உடம்பு, மனம், மூச்சு இவற்றின் ஒருமையாம் ஓர் உருவத் தொகுதியாய் ஜீவிக்கும் நீ, கடவுள் எனப்படும் அருவ மெய்ப்பொருளின் ஓர் உன்னத தெய்வீக வடிவமே. அருட்தாயே உன் உடம்பாகவும், அருட்குருவே உன் மனமாகவும், அருட்தந்தையே உன் மூச்சாகவும், இம்மூவரும் ஒன்றிய பேரிருப்பே உருவத் தொகுதியான உன் ஜீவனாகவும் விளங்குகின்றனர். அருவமாய் விளங்கும் இவர்கள், தத்தம் உச்ச அதிர்வுகளைக் குறைத்துக் கொண்டே நீயாகவும், மற்றெல்லா உயிரினங்களாகவும், பொருட்களாகவும் உருவாகின்றனர்.

இப்பேருண்மையை எந்தவொரு ஐயமுமின்றி முழுமையாக நீ உணரும்போது, உடம்பு, மனம், மூச்சு இவற்றைப் பற்றிய தவறான கண்ணோட்டத்திலிருந்து விடுபட்டு, இக்கண்ணோட்டம் விளைவிக்கும் இவற்றின் அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் மீண்டு, மரணமிலாப் பெருவாழ்வில் நிலைபெறுவாய்.

மந்திர மௌனம

ஏப்ரல் 3, 2008

மௌனத்தை மறந்து
சொற்களில் இறந்து போன
மந்திரம் உயிர்த்தெழ
மௌன மெய்யாய்
நான்

மெய்

ஏப்ரல் 3, 2008

அன்பெனும் உயிர்நிலை
உடம்புக்கு செய்யும்
பேருறுதி

அன்பு

ஏப்ரல் 3, 2008

உயிரில் கரைந்து
சடத்தை மெய்யாக்கும்
உண்மை

கவனம்

ஏப்ரல் 3, 2008
ஒருமையே வாழ்வு
ஒருமை நழுவிய கணமே
மரணம்

ஒருமையே உயிர்நிலை
ஒருமை நழுவிய கணமே
வெறும் என்புதோற் கூடு

ஒருமையே சிவம்
ஒருமை நழுவிய கணமே
நாறுஞ் சவம்

ஒருமையே இருதயம்
ஒருமை நழுவிய கணமே
வெறும் இயந்திரம்

ஒருமையே உயிர்மெய்
ஒருமை நழுவிய கணமே
மாமிசப் பிண்டம்

ஒருமையே அருளடக்கம்
ஒருமை நழுவிய கணமே
அடங்கா மிருகம்

ஒருமையே தலை
ஒருமை நழுவிய கணமே
வீழும் முண்டம்

ஒருமையே பெருந்தவம்
ஒருமை நழுவிய கணமே
அவமே அவம்

ஒருமையே மெய்ப்பொருள்விளக்கம்
ஒருமை நழுவிய கணமே
பொய்யிருட்கலக்கம்

ஒருமையே பூரணம்
ஒருமை நழுவிய கணமே
பூஜ்ஜியம்

மெய்யாம் ஒருமையே
நித்திய ஜீவனின் ஒரே வழி
அவ்வொருமையின்றேல்
வீழ்ந்தாய் நீ
மரணமென்னும் படுகுழி

ஒருமையே சத்திய நாமம்
ஒருமை நழுவிய கணமே
தாமசச் சாபம்

ஒருமையே சின்மய உருவம்
ஒருமை நழுவிய கணமே
இராஜசக் குரூரம்

ஒருமையே ஆனந்தக் கொண்டாட்டம்
ஒருமை நழுவிய கணமே
சத்துவத் திமிராட்டம்

ஒருமையே சச்சிதானந்தம்
ஒருமை நழுவிய கணமே
தாமச இராஜச சத்துவம்

ஒருமையே நிர்க்குணப் பிரம்மம்
ஒருமை நழுவிய கணமே
திரிகுண மாயை

ஒருமையே சகுணப் பிரம்மம்
ஒருமை நழுவிய கணமே
துர்க்குண பிரமை

ஒருமையே அருளொளி
ஒருமை நழுவிய கணமே
அஞ்ஞான இருள்

ஒருமையே அருள் விளக்கம்
ஒருமை நழுவிய கணமே
மருள் மயக்கம்

ஒருமையே இயற்கைப் பேருண்மை
ஒருமை நழுவிய கணமே
மயக்கும் பெரும்பொய்

ஒருமையே அனபாம் சிவம்
ஒருமை நழுவிய கணமே
வன்பாம் அவம்

ஒருமையே பேரின்பப் பெருவாழ்வு
ஒருமை நழுவிய கணமே
கடுந்துன்பச் சாக்காடு

ஒருமையே மெய்வழி
ஒருமை நழுவிய கணமே
படுகுழி

ஒருமை

ஏப்ரல் 3, 2008

பிரபஞ்ச முழுதுமே
ஒரு மையே எழுதிய
ஒரு மெய்
அவ்வொரு மெய்யில்
அவ்வுயிர் மையின்
உயிர்மை
உயிர்மெய்