ஜனவரி 7th, 2009 க்கான தொகுப்பு

போதுமே காதல் மட்டும்!!!!!!!!!!!

ஜனவரி 7, 2009

காதலனின் கோணந் தாண்டிக்
காதலியின் கோணந் தாண்டிக்
காமக் கோணலை விட்டுக்
காதலின் கோணத்தில் நின்றுக்
காணும் நோக்கைப் பெற்றால்
காதில் தேங்கும் முழக்கம்
போதுமே காதல் மட்டும்!!!!!!!!!!!

காதல் மட்டும் போதுமே!

ஜனவரி 7, 2009

தலை வலிக்கும்
உடல் வலிக்கும்
கவலைகளே காரணம்!
கவலைகள் தாண்டக்
கடமைகள் ஆற்றக்
குதிக்கும் உற்சாகம்!
மெய்ஞ்ஞானப் படிகளேறக்
குடும்பம் தடையல்ல!
இளைஞனும்
பரிதாபப் பொருளல்ல!
நவயுக விடியலாய்
நீ எழுவதற்கு
உன்னையே நீ காதலிக்கும்
காதல் மட்டும் போதுமே!
யாவரையும் காதல்(அன்பு) செய்ய
அதுவுனக்கு எப்போதும் உதவுமே!

தமிழ் மன்றத்தில் ஷிப்லி அவர்களின் “போதாதே காதல் மட்டும்” கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

சமரசம்

ஜனவரி 7, 2009

யாவரும் சமமே என்றே ஆடி
சாவரும் வழியை நன்றே மூடிச்
சமரச மெய்வழி ஒன்றைக் கூடி
அமரராய் உய்வீர் வள்ளலை நாடி!

சமரசமே உயிர்
சமரசம் போனால்
வீழுமே நின் மெய்!

பதி பசு பாசம்

ஜனவரி 7, 2009

ஆன் என்னும் உருவப் பசுவை
நான் என்னும் அருவப் பதியாய்ப்
பரிமாற்றவே
மெய்யுடம்பென்னும் திருக்கோயில்!
பதியின் வழியில் பசுவின் படுதலால்
பதியில் பசு கரைந்திடும் அதிசயம்!
வெளியே திரியும்
பசுவின் பாசம்
மெய்த்திருக்கோயிலின் உள்ளே
உயிராய்ப் பதிந்திருக்கும்
பதி மேல் திரும்ப
நிகழ்வதே மெய்யான வழிபாடு!
பசு எலாம் ஒரே குலம்!
பதி “நான்” ஒரே கடவுள்!
மெய்களும் ஒரே மூலம்!
பசு எலாம்
தம் மெய்களுள்
பதி சேரும்
பாகுபாடு அறவே இலா
மெய்யான வழிபாடு!
ஆன் இது
நான் இது
என்றே பகுத்தறிய இயலாக்
கரைதலால்
பொய்க்கும் மெய்கள்
மெய்யாகவே மெய்களாய்!
கற்பூரங் கரைந்த பின்
தீபமே மெய்யாய்
மணக்கும்!
வெட்டவெளியே கோயில்!
ஒரு பதியே கடவுள்!
பசுக்கள் எலாம் ஒரே கடவுளின் மூர்த்திகள்!
அர்த்தமுள்ள உருவ வழிபாடு!
பதிக்குத் தெரியும்
ஒவ்வொரு பசுவின் அருமை!
பதியின் அக்கண்ணோட்டத்தோடே
நேசி நீ ஒவ்வொரு பசுவையும்!
அதுவே நீ பதி மீது காட்டும்
மெய்யான பாசம்!
இப்பாசமன்றோ
உன் பாபநாசம்!
பாகுபாடு பாராத நேசமே மெய்க்குரு!
பாகுபாடு செய்யும் தரகனோ பொய்க்குரு!
ஆன் யார் என்று சொன்னேன்!
நான் யார் என்று சொன்னேன்!
இருக்கும் ஊர் சொன்னேன்!
ஊர் சேரும் வழி சொன்னேன்!
பொய்யுரித்து மெய்ம்மூலம் சொன்னேன்!
நேசமாய்க் குருவைச் சொன்னேன்!
மோசம் போகாது நீ உய்வாயே
சொன்னதெல்லாம்
உன்னுள் தெளிந்தே!

பி.கு. :
பதி = பரமான்மாவாம் ஒரே கடவுள்
பசு = ஜீவான்மாக்களாம் ஒரே குலம்
பாசம் = பசு பதியில் ஒன்றப் பாதகமாயிருக்கும் ஆசாபாசங்கள், தளைகள், இருள்சேர் இரு வினைகள்

அன்பு செய்! அன்பு செய்!

ஜனவரி 7, 2009

உண்டேயென் போர்க்கு அவர்விரும் பியபடி
உண்டாகி இல்லென் போர்க்கு அவ்வணம்
இல்லாகி ஒவ்வொரு வர்க்கும் ஒவ்வொரு
ஒன்றாகி உள்ளவன் இறைவனாம் முன்னிலை!

(முன்னிலை = முன்+நில்+ஐ = ஆதி முதலாய் நிற்கும் வையத் தலைமை.)

உண்டு இல்லை தாண்டி
நின் முன்னிலை
கண்டு கொண்டு
அன்பு செய்தல்
நின் கடன்!
அன்பில் என்புருகி
நின்னுருவம் ஒளிரும்!
அன்பில் நின் ஒளியுடம்பும் உருக
அன்பாய்
நீ ஒளிவாய்!
அன்பாய்
நீ ஒளிந்த பின்
நீயே
உண்டு இல்லை தாண்டி
நிற்கும் முன்னிலை!
இதுவன்றோ
வள்ளலின் சாகாக் கலை!
ஐயமின்றி
இதை நீ அறிவாய்!
அன்பொன்றே
இறவாப் பிறவா இறை!
அன்பொன்றே
சுடச்சுடச் சுவைக்கும் இரை!
அன்பொன்றே
கரைக்கும் மாயைத் திரை!
அன்பொன்றே
அளிக்கும் மாயா நிலை!
அன்பு செய்!
அன்பு செய்!
அன்பொன்றே
அழியா நின் மெய்!
அன்பின்றேல்
அழியும் பொய்யாய்
அழுகும் நின் மெய்!
அன்பு செய்!
அன்பு செய்!
உண்டு இல்லை தாண்டி
நின் முன்னிலை
கண்டு கொண்டு
அன்பு செய்தல்
நின் கடன்!

நீ!!!!!!!!!!!!!!!!!!

ஜனவரி 7, 2009

கருவினில் உன் தாய் – உன்னைக்
கனிவோடே பெற்றாள்

உன் வாழ்க்கையில் இன்றே
உயிரோட்டங் காண்பாய்

நிலை பெற்று நிற்கும்
நிஜமொன்று உண்டு

விழி மூடி அந்நிஜத்தை நீ
அகத்தவத்தில் கண்டு

விழி திறந்து விழி வழியே
அந்நிஜத்தை
அருள் நீராய்ப்
பாரெங்கும் வேரூன்றப்
பாய்ச்சு

பெரின்பப் பெருவாழ்வின்
அருங்கல்வி சொல்லி
நிலை பெற்று நிற்கும்
நிஜத்தை உணர்த்தும்
நவயுகப் பெண்களின்
நலமான வரிசையில்
அடடா
நீ!!!!!!!!!!!!!!!!!!

முத்தமிழ் மன்றத்தில் சிந்துகவி அவர்களின் “வாழ்க்கை” என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

நிமிர்ந்து நில்!

ஜனவரி 7, 2009

காரியங்கள் தாண்டிக்
காரணங்கள் தாண்டி
ஆதி மூலத்தில் ஊன்றி
காரண காரிய உலகில்
தயவாய் இரு!

உள்ளே சுழிந்து
மேலே எழு!
பின்
வெளியே வழிந்து
கீழே விழு!

அன்பெனும்
அருட்பணத்தை
யாவர்க்கும் அளி!

இகக் கரையில்
பர மலையாய்
நில்!

நின் தவச் சிகர ஜோதியை
யாவருங் காண
நில்!

சிவ இருப்பும்
சக்தி இயக்கமும்
நின்னிரு கால்களாய்
சற்குரு ஞானம்
நின்னொரு தலையாய்
புண்ணிய பூமியில்
நின் தடம் பதி!

மாமாயை மாய்ந்திடும்
மகாயோகம் தேர்!

மாயா நிலை தரும்
மெய்ஞ்ஞானம் கல்!

மாயா நிலைக்கே
நிரூபணமாய்
மயான பூமியில்
நிமிர்ந்து நில்!

முடிவு

ஜனவரி 7, 2009

விதையின் முடிவு
விருட்சத்தில்

கம்பளிப் புழுவின் முடிவு
பட்டாம்பூச்சியில்

மிருகத்தின் முடிவு
மனிதத்தில்

மனிதத்தின் முடிவு???
அமர தேவம்!!!

கௌரிபாலன் – 2

ஜனவரி 7, 2009

முடிச்சை அவிழ்ப்பள் வாலை கௌரி!
விடிவீர் நீரும் தாயவள் பாலராய்!
படிகள் ஏறிப் பீடத்தே நிற்பீர்!
வடியும் பாலைக் குடித்தால் தீர்வே!

தீர்வுடன்….

ஜனவரி 7, 2009

புளிக்கும் நின் மனக் காய்
இருதயமாய்க் கனிய
வேண்டும் நினக்கே
அகத்தவச் சூடு!

மனக் குதிரையிலேறி
நீ செய்யும் சவாரியே
வெளிக் குதிரையை
வதைக்காத சவாரி!

புழுக்களின் உள்ளும்
புண்ணியன் உறையும்
உண்மை உணர்ந்தே
புழுக்களை நீ நேசி!

மனிதப் புழுவாம்
உன்னையும் நேசி!
அமர தேவ
வண்ணத்துப் பூச்சியாய்
நீ பரிமாறும்
பரிணாமப் பாய்ச்சலுக்காய்
அகத் தவக் கூட்டுள்
அமைதியாய்ப்
பரமனை வாசி!

மரங்களும் செடிகளும்
கொடிகளும் செய்யும்
மோனத் தவத்தைக் கண்டு
வெளிப் பூசைகள் விட்டே
யோகத்தே ஏறு!

நின் மெய்யே பூவாய்
நிர்மல நாயகன் தாளில்
நீ வைத்து
பொய்ய்க்கும் மெய்யை
பொன் மெய்யாய்ப்
பரிமாற்றும்
உட்பூசை செய்ய
வெளிப் பூக்கள் எதற்கு!
ஆழ்ந்து யோசி!

ஒன்றினின் பரிணாமப்
பரிமாணங்கள் யாவும்
ஒன்றாமல் போகும்
ஒரே காரணமாம்
நின் மன முடிச்சை
அவிழ்த்தால்
முரண்கள் யாவும்
அவிழுமன்றோ!

தீர்வுடன்….

முத்தமிழ்மன்றத்தில் “பரிணாம முடிச்சு” என்ற கௌரிபாலன் அவர்களின் கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை