அன்பு செய்யப் போகிறேன்!

அன்பு செய்யப் போகிறேன்!
அன்பே என் இயல்
அன்பே என் துணை
அன்பே நான் என்பதை
என்றும் மறவாமல்
மறந்த மக்களிடம்
நான் அன்புடன் இருக்கப் போகிறேன்!

அன்பினால் முடியாதது உண்டோ!
அன்பினால் இச்சகத்தை
அமைதியாய்ச் சரி செய்வேன்!
அன்பை மறந்த மக்களுக்கு
அன்பை ஊட்டப் போகிறேன்!

திரிந்த இவ்வுலகைத்
திருத்தும் மருந்தாய்
அன்பை அளிக்கப் போகிறேன்!

திரிந்த மனங்கள்
மனந்திரும்பித் தாம் திருந்தவே
என் இருதய நேர்மை அன்பையே
எங்கும் நிறுத்தப் போகிறேன்!

வேற்றுமைகள் மாய்ந்து போய்
ஒற்றுமையாம் ஒருமையில்
மனிதரினம் உய்யவே
மனிதரோடு மனிதனாய்
நான் அன்பாய் இருக்கப் போகிறேன்!

யாவையும் கடந்த கடவுள் நான்
யாவிலும் நிறைந்தே
எங்கும் அன்பாய் இறையப் போகிறேன்!

அன்பின் அவதார புருஷனாய்
மனிதருள் ஓர் மனிதனாய்
என்றென்றும் இருந்தே
அன்பு செய்யப் போகிறேன்!

அன்பே என் இயல்
அன்பே என் துணை
அன்பே நான் என்பதை
யாவரும் அறியவே
வாழ்ந்து காட்டப் போகிறேன்!

என் நிராதார மேனிலை
இத்தராதலம் இறங்கும்
என் மெய் வழியின் இரகசியம்
என் மக்கள் யாவரும்
பகிரங்கமாய் அறியும்
அரும்பெருந் தந்திரம்
அன்புடன் நான் செய்யப் போகிறேன்!

தராதலம் நடுவே
அன்பை இலவசமாகத் தரும்
என் கடை விரிக்கப் போகிறேன்!
கொள்ள வரும் மனிதரின்
இருதயங்கள் மொத்தமாய்க்
கொள்ளை அடிக்கப் போகிறேன்!

அன்புடன் குழுமத்தில் துரை.ந.உ. அவர்களின் நான் கடவுள்….!?!?!? கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை.

பின்னூட்டமொன்றை இடுக