மெய்யான வழிபாடு!

வெறுவெளியில்
அருளொளியாய்
ஆடும் நடராசரே
உன் மெய் வீட்டில்
உயிருள்ள தெய்வமாய்
மெய்யாகவே ஆடுகிறார்!
வெங்கடத்துள்
ரங்கனவர் உயிராட்டம்
உணர்ந்தால்
வெளிக்கோயில்
கற்சிலைகள்
பொய்க்குருக்கள்
என்ற மாயாஜாலப்
பொய்யாட்டம் முடியும்!
ஒருமை ஒரு சிறுதும்
இல்லாத வன்மனத்தோடு
நடராஜர் கற்சிலையை
செங்கல் வீட்டுக்குள் வைத்து
கோடி தரம் முணுமுணுத்து
நீ பூசை செய்தாலும்
மரணத்தை வெல்வாயோ!
மனத்தில் நீ
ஒருமை கொண்டு
தயவாய் இருந்தாலே
நின் மெய்யுடம்பாலயத்தில்
நடம் ஆடும் நடராஜர்
நின் திருவிழி திறந்து
காட்சி தருவாரே!
நின் உயிராய்
மெய்க்குள் ஆடும்
நடராசரைக் கண்டுணர்ந்த பின்பு
மெய் வீட்டிலிருந்து
நடராசரை வெளியேற்ற
நினக்கு மனம் வருமோ!
உயிர் போனால்
மெய் சவமாய் வீழுமே
நீ இதை அறியாயோ!
கல் குறிக்கும் நல்லவனைக்
கல்லிலிருந்து கழற்றி
நின்னுள்ளே நிரந்தரமாகக்
குடி வைத்து
அவனோடு இணங்கி வாழ்தலே
மெய்யான வழிபாடு!
நின் நெஞ்சம் கல்லானதாலேயே
நடராஜர் கல்லாகி
நினைப் பிரிந்து
வெளியே சிலையானார்!
கன்னெஞ்சம் கரைக்கும்
தயவென்னும் ஒருமையில்
நீ நிற்க
நடராஜர் கற்சிலை விட்டு
நின்னுள்ளே புகுந்து
உயிர்த்தெழுவார்!
நடராஜ உயிர்
நட்டமாகி
நடமாடும் பிணமான
நீயும்
நடராஜ உயிர்
மீள
உயிர்த்தெழுவாய்
சாகாக் கலை நெறியில்!

பின்னூட்டமொன்றை இடுக